மார்ச் மாதத்தில் சுற்றுப்பயணம் கிளம்பும் விஜய்... இனி அதிரடிதான்...
நடிகர் விஜய் தனது கடைசி படத்தை முடிக்க உள்ள நிலையில் விரைவில் அவர் மக்களை சந்திக்க உள்ளார். மார்ச் மாதம் முதல் தனது பயணத்தை தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தவெக தொடங்கி ஓராண்டு ஆன நிலையில் கட்சியின் மீது அதிக அளவு விமர்சனம் வந்தது. காரணம் கட்சித்தலைவர் விஜய் தவெக ஆரம்பித்த சூழ்நிலையில் உடனடியாக அணிகள் நியமிக்கப்பட்டு அடுத்தடுத்த நிகழ்வுகள் நடந்தன. கட்சியின் முதல் மாநாடு அக்டோபர் 27 2024 அன்று விக்கிரவாண்டியில் நடைபெற்றது. இதில் விஜய் அனைவரின் கவனத்தை ஏற்கும் வகையில் பேசினார். கட்சியின் கொள்கைகள், வழிகாட்டுதலும் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்நிலையில் அடுத்தடுத்த நிகழ்வுகள் தவெக அரசியலில் பெரிய மாற்றத்தை கொண்டு வரும் என்று அனைவரும் எதிர்பார்த்தனர்.
விஜய் படபிடிப்புக்கு சென்றாலும் மற்ற நிர்வாகிகள் செயல்படவில்லை என்கிற குற்றாச்சாட்டு எழுந்தது. இதனால் முக்கிய பிரச்சனைகளில் வெறுமனே அறிக்கைகள் மட்டுமே வந்தது. முக்கியமான போராட்டம் நடத்தக்கூடிய பிரச்சனைகளில் எவ்வித முன்னேற்றமும் இல்லாமல் இருந்தது. பனையூர் அரசியல், வர்க் ஃபிரம் ஹோம் அரசியல் என விமர்சிக்கப்பட்டது. இதனால் தொண்டர்களுக்கும், இரண்டாம் கட்ட தலைவர்களுக்கும் சோர்வு ஏற்பட்டது. இந்த நிலையில்தான் 2 ஆடியோக்கள் வெளியானது. இதையடுத்து கட்சிக்கு மெருகூட்ட திடீர் என விஜய் பரந்தூருக்கு சென்றார்.
இதையும் படிங்க: கட்சி தொடங்கியதுமே ஆட்சியைப் பிடிப்போம்... முதல்வராவோம் என்பதா..? விஜய்யை மறைமுகமாக அட்டாக் செய்த முதல்வர்.!
அதன்பின்னர் நிர்வாகிகள் நியமனம் நடந்தபோது விஜய் நிர்வாகிகளை தனித்தனியாக சந்தித்தது பரபரப்பை ஏற்படுத்தியது. நிர்வாகிகள் தரப்பில் பல மன வருத்தங்களை விஜய்யிடம் பகிர்ந்து கொண்டனர். அதில் முக்கியமானது பொதுமக்கள் சந்திப்பு. விஜய் படப்பிடிப்பில் இருந்தாலும் மற்ற நிர்வாகிகள் பொதுமக்களை சந்திக்க வேண்டும், கட்சி பொதுமக்களோடு இணைந்து செயல்பட வேண்டும், ஆனால் அது மிஸ் ஆகிறது என்று மாவட்ட நிர்வாகிகள் விஜய்யிடம் அழுத்தமாக கூறினர். இந்நிலையில் விஜய் சில அதிரடியான முடிவுகளை எடுத்தார் அதில் ஒன்று ஆதவ் அர்ஜுனை அழைத்துப் பேசி கட்சியில் பொறுப்பு கொடுத்து இணைத்துக் கொண்டது.
இது கட்சி அடுத்த கட்ட நகர்வுக்கு உதவும் என்கிற உணர்வை கட்சி நிர்வாகிகளுக்கு ஏற்படுத்தியது. இந்நிலையில் கட்சியை வலுவாக்க கட்சியை பொதுமக்களிடம் கொண்டு செல்ல விஜய் முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. சில மாதங்களாக இருந்த தேக்க நிலையை உடைக்க நேரடியாக களத்தில் விஜய் இறங்க உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. விஜய் படபிடிப்புகளை பிப்ரவரி 25 தேதிக்குள் முடித்துக் கொள்வதாகவும் அதற்கு பிறகு சொன்னபடி நேரடி அரசியலில் இறங்க உள்ளதாகவும் தவெக தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது.
விஜய் நேரடி அரசியலில் இறங்குவதற்கான பயண நேரத்தையும் குறிக்க சொல்லி விட்டார். பிப்ரவரி மாதம் முழுவதும் அதற்கான ஷெட்யூல் ரெடியாகி, மார்ச் மாதத்தில் இருந்து தமிழகம் முழுவதும் நேரடியாக சென்று மக்களை சந்திப்பது என விஜய் திட்டமிட்டுள்ளதாகவும், இதற்கு ஆதவ் அர்ஜுனா சில திட்டங்களை கூறியுள்ளதாகவும் கூறப்படுகிறது. அதில் முக்கியமானது புதுக்கோட்டையில் கனிம வள கொள்ளையை தடுக்க புகார் அளித்து கொல்லப்பட்ட சமூக ஆர்வலர் குடும்பத்தினரை சந்திப்பது, டங்ஸ்டன், மேல்மா, கன்னியாகுமரி, மாஞ்சோலை, வேங்கை வயல் மக்கள் உள்ளிட்ட போராடும் மக்களை சந்திப்பதும் அடங்கும், கல்லூரிகளில் மாணவ மாணவியரிடையே பேசவும் விஜய் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
தனது பயணத்தில் அந்தந்த மாவட்ட முதுபெரும் அரசியல் தலைவர்கள், போராட்ட தியாகிகளையும் சந்திக்கும் விஜய் உதவித்தொகை வழங்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. போராட்டத்தில் ஈடுபட்டு வெற்றி பெற்ற மக்களை சந்திப்பது, விவசாயிகளை, குறிப்பாக பெண்களை சந்திப்பது என பல்வேறு திட்டங்கள் இருப்பதாக கூறப்படுகிறது. விஜய், தான் செல்லும் இடங்களில் சில இடங்களில் பத்திரிகையாளர்களை சந்திப்பார் அல்லது பேசுவார் என்று கூறப்படுகிறது. விஜய்யின் இந்த பயண திட்டம் ஆளுங்கட்சியை அசைத்துப் பார்ப்பதாக இருக்கும் என்று தவெக நிர்வாகிகள் சந்தோஷத்துடன் பகிர்கின்றனர்.
இதையும் படிங்க: எடப்பாடி தலையில் இடியை இறக்கிய விஜய்... ஒரே ஒரு கன்டிஷனில் அதிமுக ஆட்டம் குளோஸ்...!