20 ஆண்டுக்கு முன்னால் அரசியலுக்கு வந்திருந்தால் கமல் சாதித்திருப்பாரா?- ஒரு அலசல்
இன்று என்னை அனைவரும் தோல்வி அடைந்த அரசியல்வாதி என்று சொல்கிறார்கள், நான் ஏன் தோல்வி அடைந்தேன்? 20 ஆண்டுக்கு முன்னால் வந்திருந்தால் நான் வென்றிருப்பேன் என்று கமல்ஹாசன் தானும் குழம்பி மற்றவர்களையும் குழப்பி இருக்கிறார். அவர் சொன்னது சாத்தியமா? பார்ப்போம்.
தமிழக அரசியல் களத்தில் பல காமெடிகள் நடந்தது உண்டு. அதில் ஒரு காமெடி தான் கமல்ஹாசன் கட்சி ஆரம்பித்தது என்று சொல்லலாம். காரணம் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, கருணாநிதியின் ஓய்வுக்கு பிறகு தமிழகத்தில் ஒரு இடைவெளி இருக்கிறது நான் அதை நிரப்புவேன் என்று ரஜினிகாந்த் கூறி, நான் அரசியலுக்கு வருவேன் என்று பேட்டி அளித்தார். ரஜினிகாந்த் மூலம் வலதுசாரி அரசியலை தமிழகத்தில் முன்னெடுத்து அதன் மூலம் அண்ணாமலையை முதல்வர் வேட்பாளராக நிறுத்தி திராவிட அரசியலுக்கு மாற்றாக ஒரு அரசியலை செயல்படுத்தலாம் என்று பாஜக நினைத்தது.
ஆனால் ரஜினிகாந்த் தன்னிடம் கட்சி ஆரம்பிப்பதற்கான எவ்வித அடிப்படை கட்டமைப்பும் இல்லை, தன்னால் கட்சியை தொடர்ந்து நடத்திச் செல்ல முடியாது, தனக்கு பின் கட்சி என்று ஒன்று இருக்காது, தன்னை நம்பும் ரசிகர்கள் பாதிப்படைவார்கள், தனக்கு உடல்நிலை சரியில்லை என்பன போன்ற பல விஷயங்களை கருத்தில் கொண்டு அரசியலுக்கு வராமலேயே விலகினார். இந்த நேரத்தில் தான் திடீரென ரஜினிக்கு முந்திக்கொண்டு கமல்ஹாசன் கட்சி ஆரம்பித்தார். ஏன் கட்சி ஆரம்பித்தார்? எதற்காக ஆரம்பித்தார்? என்பதெல்லாம் கமல்ஹாசனுக்கே வெளிச்சம்.
இதையும் படிங்க: நான் தோற்றுப்போன அரசியல்வாதியா..? கமல் சொன்ன அந்த உண்மை... விஜய் ரசிகர்கள் ஆவேசம்..!
அதற்கு முன்பு வரை கமல்ஹாசன் கலை உலகின் நாயகன், உலக நாயகன், ஆகச் சிறந்த அறிவாளி என்றெல்லாம் தமிழக மக்கள் அவரை தூக்கி வைத்து கொண்டாடிக் கொண்டிருந்தனர். ஆனால் கமல்ஹாசன் கட்சி ஆரம்பித்த பின்னர் தான் தெரிந்தது அவர் அரசியலில் பெரிய அளவில் சாதிக்க முடியாதவர் என்று. இதற்கு பல காரணங்களை சொல்லலாம். முதல் காரணம் ஒரு அரசியல் கட்சியை தொடங்க வேண்டுமென்றால் யார் எதிரி என்பதை அந்த கட்சி முன்னிறுத்த வேண்டும். கமல்ஹாசன் கட்சி தொடங்கிய நேரம் அதிமுக ஆளும்கட்சியாக இருந்தது. ஆனால் கமல்ஹாசன் எதிரியாக சுட்டிக்காட்டியது திமுகவை. அதிமுக, பாஜக கூட்டணி எதிர்த்து கடுமையாக கூட்டணி அமைத்து போராடிக் கொண்டிருந்த திமுகவுக்கு எதிராக கமல்ஹாசன் களம் இறங்கி டார்ச் லைட்டால் ஒரு டிவியை போட்டு உடைத்தார்.
அதுவே அப்பொழுது காமெடியாக பார்க்கப்பட்டது. ஆனாலும் கமல்ஹாசன் ஏதாவது செய்வார் அவர் திரைப்படத்தில் சாதித்ததும், அவருடைய ஆழ்ந்த அறிவும், அரசியல் களத்திற்கு வரும்பொழுது மிகப்பெரிய மாற்றத்தை கொண்டு வரும் என்று பலரும் கட்சியில் இணைந்தனர். மாஜி நடிகர், நடிகைகள், ஓய்வு பெற்ற அதிகாரிகள், சமூக ஆர்வலர்கள், முக்கிய விஐபிகள், வாட்ஸ் ஆப் போராளிகள் என பலரும் இணைத்தனர். கமல்ஹாசன் முதல் மாநாட்டை நடத்தினார். அப்பொழுது பெரிய அளவில் பேசுவார் என்று எதிர்பார்த்த பொழுது ஒன்றுமே பேசாமல் 15 நிமிடத்தில் பேச்சை முடித்துக் கொண்டார்.
தன்னுடைய அரசியல் கட்சியின் நிலைப்பாடு என்ன? தான் யாருக்கு எதிராக அரசியல் செய்ய போகிறோம்? என்பதெல்லாம் பற்றி கமல்ஹாசன் பெரிய அளவில் எதையும் பேசவில்லை என்பதை இங்கே குறிப்பிட்டே ஆக வேண்டும். இதனால் பொதுமக்களுக்கு கமல்ஹாசன் பெரிய அளவில் சாதிப்பார் என்கிற நம்பிக்கை முதலில் அடிபட்டது. அதிமுக பாஜகவை எதிர்த்து அரசியல் செய்து திமுகவுடன் கைகோர்த்து களம் கண்டிருந்தாலோ அல்லது அதிமுக பாஜகவுக்கு எதிராக கடுமையான அரசியல் செய்து களம் கண்டிருந்தாலும் கமல்ஹாசன் மேலும் அதிக வாக்குகள் பெற்றிருக்க வாய்ப்புண்டு.
அவை எதையும் செய்யாமல் அரசியல் செய்தார். தன்னுடைய கட்சியில் அனுபவம் பெற்றவர்களை முன் நிறுத்தாமல் தனக்கு நெருக்கமானவர்களை மாற்றி மாற்றி நியமித்தார். இதனால் கட்சிக்குள்ளேயே பல்வேறு புகைச்சல்கள் வந்தது. பெரும் செல்வந்தர்கள், வசதி படைத்தோர் முக்கிய பதவியை வாங்கிக் கொள்கிறார்கள் என்றெல்லாம் கடுமையாக விமர்சனம் வைக்கப்பட்டது.
கட்சி ஆரம்பித்த பின் தொடர்ச்சியாக மாநாடு நடத்துவது, தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து கட்சியை கட்டுவது, தொண்டர்களை நேரடியாக சந்திப்பது, மாவட்ட செயலாளர்கள் நியமனத்தில் நேரடியாக பங்கு பெறுவது, மக்கள் பிரச்சினைகளை முன்னெடுத்து கட்சி அணிகளை போராட வைப்பது என்பது போன்ற ஒரு அரசியல் கட்சிக்கு தேவையான எதையும் செய்யாமல் புதுவிதமான அரசியலை கமல்ஹாசன் கையில் எடுத்தார். அது என்னவென்றால் போராட்டங்கள் நடத்த மாட்டோம் என்று அறிவித்தார். எங்கள் கட்சி வேறு வகையான கட்சி, நாங்கள் போராட்டங்கள் நடத்த மாட்டோம் என்று அறிவித்தார்.
இது ஒரு அரசியல் கட்சிக்கான நிலைப்பாடு அல்ல என்பது அப்பொழுதே பலரும் புரிந்து முகம் சுளித்தனர். அது மட்டுமல்லாமல் அரசியல் கட்சி தலைவராக எவ்வித செயல்பாடும் இன்றி அன்றாட அரசியலை கூட மறந்து கமல்ஹாசன் விலகி நின்றார். சினிமா சூட்டிங் ஒரு பக்கம், பிக் பாஸ் ஷூட்டிங் ஒரு பக்கம், அவ்வப்போது லேசாக அரசியலைத் தொடுவது, twitter-ல் மட்டும் பதிவுகள் இடுவது என்று கமல்ஹாசன் நகர்ந்தார். ஆனாலும் கமல்ஹாசன் 2019 மக்களவைத் தேர்தலில் 3.94 சதவீத வாக்குகளை பெற்றார். இது மற்ற எல்லா கட்சிகளை விட மிகப்பெரிய அங்கீகாரம் ஆகும். நகர்ப்புறத்தில் பெரிய அளவில் செல்வாக்கு பெற்ற மக்கள் நீதி மையம், கிராமப்புறங்களில் சோபிக்கவில்லை, அதை ஆய்வு செய்து தனது செல்வாக்கை கிராம்புறங்களில் அதிகரிக்க வைக்க கமல்ஹாசன் முயற்சித்து இருக்க வேண்டும். செய்யவில்லை.
ஆனால் ஏதோ கட்சி ஆரம்பித்து விட்டேன், அது தானாக வளரும், எனக்கென்ன என்பது போல் அவருடைய செயல்பாடு இருந்தது. இதன் காரணமாக கட்சியில் உள்ள தலைவர்கள் சிலர் விலகினர். இந்த நிலையில் தான் 2021 சட்டமன்ற தேர்தல் வந்தது. சட்டமன்ற தேர்தலில் அதிமுக பாஜக கூட்டணிக்கு எதிராக அன்று இருந்த பெரிய அலையில், கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் சில கட்சிகளுடன் சேர்ந்து தனியாக களம் கண்டது. இது 1996 ஆம் ஆண்டு வைகோ எடுத்த நிலைப்பாடு போன்றது. காரணம், ஆளுகின்ற அதிமுக-பாஜக என்டிஏ கூட்டணிக்கு எதிராக மக்களின் கோபாவேசத்தை சாதகமாக்கி பெரும் கூட்டணி அமைத்து திமுக அறுவடை செய்தது. இந்த தேர்தலில் தனித்து சில சிறிய கட்சிகளுடன் சேர்ந்து போட்டியிட்ட கமல்ஹாசன் 2.62% வாங்கி காணாமல் போனார்.
இதில் தன்னுடைய கட்சியின் முக்கிய தலைவரான மகேந்திரனின் தொகுதியில் வேண்டுமென்றே தான் நின்று அவரையும் வெல்ல விடாமல் தானும் வெல்லாமல் தோல்வியடைந்தார். இதன் காரணமாக தேர்தல் முடிவு வந்த அன்றே கட்சி பிளவு பட்டது. மகேந்திரன் உள்ளிட்ட பலரும் மக்கள் நீதி மையத்தை விட்டு விலகினர். அவர்கள் விலகலுக்கான காரணத்தை சொன்ன பொழுது கமல்ஹாசன் யாரையும் மதிப்பதில்லை, யார் குரலுக்கும் செவி மடுப்பதில்லை என்கின்ற காரணத்தை கூறினர். ஆனால் முக்கியமான காரணம், பலரும் சொந்த பணத்தை போட்டு மக்கள் நீதி மையத்தை வளர்க்க நினைத்தும் கமல்ஹாசனுடைய இடையூறு காரணமாக கட்சி அடுத்த கட்டத்திற்கு நகரவில்லை என்கிற விரக்திலேயே பலரும் விலகினர்.
அப்துல் கலாமின் ஆலோசகராக இருந்த பொன்ராஜ் மக்கள் நீதி மய்யத்தில் இணைந்தது அவர் செய்த மிகப்பெரிய தவறு என்பதை உணர்ந்து விரைவில் கட்சியை விட்டு விலகினார். இன்றுவரை கமல்ஹாசன் கட்சியில் இருக்கின்ற பலரும் விலகாமல் ஒதுங்கி நிற்கின்ற நிலையையும் காணமுடிகிறது. அதன் பின்னர் கமல்ஹாசன் எடுத்த முடிவு தான் மிக மோசமான முடிவாகும். தன்னுடைய திரைப்பட சூட்டிங், பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பங்கம் வராமல் அரசியல் நடத்திய கமல்ஹாசன் தன்னுடைய நிலைப்பாட்டுக்கு சால்ஜாப்பும் சொல்லிக்கொண்டார். நான் ஒரு பார்ட் டைம் அரசியல்வாதி, உலகமே அப்படித்தான், நமது வாழ்க்கையும் அப்படித்தான். மக்களுடைய வாழ்க்கையும் பார்ட் டைம் தான் என்று தன்னுடைய அரசியலுக்கு ஆதரவாக கமல் தெரிவித்த கருத்துக்களை மற்றவர்கள் கேலியாக பார்த்தனர்.
இந்த நேரத்தில் தான் கமல்ஹாசனின் விக்ரம்-2 படம் வெளியானது அந்த படத்தை ரெட் ஜெயண்ட் தமிழகம் முழுவதும் விநியோகித்தது. இதன் மூலம் கமல்ஹாசனை திமுக பிடித்து போட்டது என்று சொல்லலாம். படம் வெளியான நிலையில் கமல்ஹாசன் உதயநிதிக்கு நெருக்கமாக மாறினார். அதன் பின்னர் கமல்ஹாசனின் அரசியல் வாழ்க்கை முற்றிலும் மாறிப்போனது. ஆளுங்கட்சியான திமுக எதிர்ப்பு என்பதை சுத்தமாக கைவிட்டு திமுகவுக்கு ஆதரவான நிலைப்பாட்டை கமல்ஹாசன் கையில் எடுத்தார். ஒரு கட்சி வளர வேண்டும் என்றால் ஆளுங்கட்சிக்கு எதிரான இயக்கத்தை முன்னெடுத்து அரசியல் நடத்தினால் மட்டுமே கட்சி வளரும்.
ஆனால் பார்ட் டைம் அரசியல்வாதியாகவும் இருந்து கொண்டு, ஆளுங்கட்சிக்கு எதிராகவும் செயல்பட மாட்டேன். ஆளுங்கட்சிக்கு ஆதரவாக அவ்வப்போது அறிக்கைகள் விடுவேன், என்கின்ற கமல்ஹாசன் நிலைப்பாட்டை மக்கள் ஏற்கவில்லை, நிராகரித்தார்கள். இதனுடைய ஒரு பகுதியாக 2024 தேர்தலில் கமல்ஹாசன் எடுத்த நிலைப்பாடு மேலும் அவர் தோல்வியடைந்த அரசியல்வாதி என்பதை நிரூபித்தது. ஆளுங்கட்சியான திமுகவின் கூட்டணியில் தனது மக்கள் நீதி மையத்தை கமல்ஹாசன் இணைத்தது மிகப் பெரும் தவறு. இதன் மூலம் அவர் மக்கள் நீதி மையத்திற்கு மீண்டும் ஒரு பெரிய குழியை பறித்தார்.
மக்கள் நீதி மய்யம் திமுக கூட்டணி இணைந்ததும், கட்சிக்காக ஒரு எம்பி சீட்டாவது வாங்கி தேர்தலில் போட்டியிட்டிருந்தால் கமலஹாசன் ஒரு வெற்றிகரமான அரசியல்வாதியாக இருந்திருப்பார். ஆனால் கமல்ஹாசனுக்காக விரிக்கப்பட்ட ராஜ்யசபா எம்பி என்ற தூண்டில் மீனில் கமல்ஹாசன் சிக்கிக்கொண்டு திமுகவுக்காக பிரச்சாரத்தில் ஈடுபட்டார். கமல்ஹாசனை திமுக பயன்படுத்திக் கொண்டது. ஆனால் கமல்ஹாசனுக்கு அதனால் எவ்வித லாபமும் இல்லை. தன்னுடைய திரைப்பட வியாபாரத்திற்காக மக்கள் நீதி மையத்தை கிட்டத்தட்ட காவு கொடுத்தார் என்றே சொல்லலாம்.
இந்த நிலையில் தான் ராஜ்யசபா எம்பிக்கள் பதவி காலம் ஜூலை மாதம் முடிவடை உள்ளது. இம்முறை கமல்ஹாசனுக்கு ஒப்புக்கொண்டபடி ராஜ்யசபா எம்பி சீட்டை திமுக தராது என்ற பேச்சு பொதுவெளியில் உலாவுகிறது. சொல்ல முடியாது அப்படி நடந்தாலும் நடக்கலாம். இந்த நிலையில் தான் மக்கள் நீதி மய்யத்தின் எட்டாவது ஆண்டு விழாவில் கமல்ஹாசன் பரபரப்பாக பேசியுள்ளார். தான் ஒரு தோல்வியடைந்த அரசியல்வாதி என மற்றவர் சொல்கிறார்கள், அதற்கான காரணம் நான் 20 ஆண்டுகளுக்கு முன்பு அரசியலுக்கு வந்திருந்தால் நடப்பது வேறாக இருந்திருக்கும், நான் பேசுவதும் வேறாக இருந்திருக்கும் என்று கமல்ஹாசன் சுயபுராணம் பாடியதை பக்கத்தில் இருந்தவர்கள் ரசித்தாலும் சமூக வலைதளங்களில் அது கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.
கமல்ஹாசன் இருபது ஆண்டுகளுக்கு முன்பு வந்திருந்தால் வெற்றிகரமான அரசியல்வாதியாக இருந்திருப்பார் என்கிற கேள்விக்கு முதலில் நாம் பரிசீலிப்போம். கமல்ஹாசன் நடித்த விஸ்வரூபம் படம் வெளியான பொழுது அதிமுகவுடன் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக அவரது படத்துக்கு எதிராக சில சக்திகள் தூண்டி விடப்பட்டு பெரும் சர்ச்சையானது. இந்த நேரத்தில் அதிமுகவை நேரடியாக எதிர்க்காமல் நாட்டை விட்டு வெளியேறுவேன் என்று கமல்ஹாசன் பேசியதை யாரும் மறந்திருக்க மாட்டார்கள். அதேபோன்று சண்டியர் படம் எடுக்கப்பட்ட பொழுது அந்த பெயரை மாற்ற சொல்லி அழுத்தம் வந்த போது அதையும் ஏற்றுக்கொண்டார் கமல்ஹாசன். இதுதான் அவரது வீரத்தின் வெளிப்பாடு.
20 ஆண்டுகளுக்கு முன் அரசியலுக்கு வந்திருந்தால் அப்போது இருந்த இரண்டு பெரும் ஆளுமைகள் கருணாநிதி மற்றும் ஜெயலலிதா கமலஹாசனை எந்த அளவுக்கு நடத்தி இருப்பார்கள் என்பது விஜயகாந்த் அரசியலுக்கு எதிராக அவர்கள் நடந்து கொண்ட விதமே சாட்சி. இதில் கமல் கட்டாயம் தாக்குப்பிடித்திருக்க வாய்ப்பில்லை. கமலஹாசன் 20 ஆண்டுகளுக்கு முன் அரசியல் நுழைந்து இருந்தால் அவருக்கு போட்டியாக பரபரப்பான அரசியல்வாதி, வேகமான அரசியல்வாதி, ஒரு அரசியல் கட்சிக்கு தலைவருக்கு உரிய தகுதி பெற்றிருந்த விஜயகாந்த் அரசியலில் இருந்தார்.
அப்படியானால் விஜயகாந்த்துக்கு இணையாக கமல்ஹாசன் அரசியல் செய்திருக்க வேண்டும். ஆனால் இப்போது இருக்கும் சமூக வலைதள காலத்திலேயே எப்போதாவது ஒரு ட்வீட் போட்டுக் கொண்டு, பார்ட் டைம் அரசியல்வாதியாக இருக்கும் கமல்ஹாசன், தன்னுடைய திரை வாழ்க்கையின் உச்சத்தில் இருந்த பொழுது அதையெல்லாம் விட்டுவிட்டு எப்படி முழு நேர அரசியல்வாதியாக வந்திருப்பார் என்பது கேள்விக்குறியே. கமல்ஹாசன் தற்போது உள்ள நிலையில் ஓய்வு பெறும் நிலையில் இருந்தும் படங்களில் நடித்துக் கொண்டும், பிக் பாஸ் தொகுப்பாளராக இருந்து கொண்டும், பார்ட் டைம் அரசியல்வாதியாக இருப்பவர், 20 ஆண்டுகளுக்கு முன்பு உச்ச நட்சத்திரமாக இருந்த பொழுது எப்படி முழு நேர அரசியல்வாதியாக இருந்திருப்பார் என்கிற கேள்வி எழாமல் இல்லை.
ஆகவே தன்னுடைய எட்டாவது ஆண்டு கட்சியின் ஆண்டு விழாவில் தன்னுடைய தோல்வியை மறைப்பதற்காக ஒரு காரணத்தை கமல்ஹாசன் கூறி இருக்கிறாரே தவிர இருபது ஆண்டுகளுக்கு முன் வந்திருந்தாலும் கமல்ஹாசன் இதைவிட மோசமாக இல்லாமல் போயிருப்பார் என்பதே எதார்த்தம். ஏனென்றால் கமல்ஹாசன் அதற்கு லாயக்குப்பட்டு வரமாட்டார்.
இதையும் படிங்க: 8-வது ஆண்டில் மக்கள் நீதி மய்யம்... சாதித்தது என்ன? சறுக்கியது என்ன?