திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு கண்ணியம் நகர் பகுதியை சேர்ந்தவர் சரவணன். இவருடைய மகன் ஜெமினி. கார் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். ஜெமினியை அந்த பகுதி மக்கள் 'சில்க்' என செல்லமாக அழைத்து வந்தனர். போதைக்கு அடிமையான இளைஞர் ஜெமினி தன்னுடைய நண்பர்களுடன் சேர்ந்து கொண்டு போதை ஊசி செலுத்திக் கொள்ளும் பழக்கத்தில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த அக்னி என்ற இளைஞர் போதை ஊசி போட்டுக் கொள்ள ஜெமினியை அழைத்துக் கொண்டு சென்றுள்ளார். மறுநாள் ஜெமினி சடலமாக மீட்கப்பட்டார்.

இந்நிலையில் தனது மகன் ஜெமினி, போதைப்பொருள் பயன்படுத்த மறுப்பு தெரிவித்ததால் கொலை செய்யப்பட்டதாக அவரது பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்நிலையில் இளைஞர் கொலையில் தொடர்புள்ளோர் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே போதை ஊசி போட்டுக்கொள்ள மறுத்த இளைஞர் கொலை செய்யப்பட்டுள்ளதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.
இதையும் படிங்க: போதைப்பொருட்களை ஒழிக்க திமுக என்ன செய்தது..? எகிறி அடிக்கும் எடப்பாடி பழனிசாமி..!

திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற நாள் முதலே நான் தொடர்ச்சியாக போதைப்பொருள் புழக்கம் குறித்து எச்சரித்து வருகிறேன். ஆனால், இன்றைய நாள் வரை போதைப்பொருளை ஒழிக்க இந்த ஸ்டாலின் மாடல் திமுக அரசு, ஆபரேஷன் 2.ஓ, 3.ஓ, 4.ஓ என ஓ போட்டதை தவிர ஆக்கப்பூர்வமாக ஒரு துரும்பைக் கூட கிள்ளிப் போடவில்லை என்பதையே இதுபோன்ற செய்திகள் உணர்த்துகின்றன. போதைப்பொருட்கள் இளைஞர்களை எவ்வளவு கொடூரமான வகையில் சீரழிக்கின்றன என்பதற்கு இந்த செய்தியே சாட்சி.

விளம்பர ஷூட்டிங்கில் வந்து "போதையின் பாதையில் யாரும் செல்ல வேண்டாம்" என்று வசனம் பேசினால் மட்டும் போதாது முதல்வர் ஸ்டாலின் அவர்களே! போதைப்பொருள் புழங்குவதை ஒழிக்க வேண்டும். போதைப்பொருள் புழக்கத்தை ஒழிப்பதே சட்டம் ஒழுங்கை நிலைநிறுத்துவதற்கான முதல் படி என்பதை இந்த ஸ்டாலின் மாடல் அரசு உணர வேண்டும். இளைஞர் கொலையில் தொடர்புள்ளோர் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும் என ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது ஜெமினி மற்றும் அக்னி இருவரும் கண்ணியம் நகர் ஓட்டியுள்ள ஏரிக்கரைக்கு சென்றுள்ளனர். அங்கு கஞ்சா மற்றும் போதைப் பொருட்களை பயன்படுத்தி விட்டு மயங்கி கிடந்துள்ளனர். அப்பொழுது சுனில், அருண்குமார், கார்த்திக், திலீப் குமார் உள்ளிட்ட ஐந்து நபர்கள் சேர்ந்து ஜெமினியை கொலை செய்து ஏரியில் வீசி விட்டு சென்றுள்ளனர். அதேநேரம் தன்னுடைய மகனை காணவில்லை என்று ஜெமினியின் தந்தை சரவணன் செய்யாறு காவல் நிலையத்தில் நேற்று முன்தினம் புகார் அளித்திருந்தார்.

ஜெமினி மீது ஏற்கனவே சவ ஊர்வல வாகனத்தை எரித்தது; போதை ஊசி விற்பனை என பல வழக்குகள் உள்ள நிலையில் கொலை செய்யப்பட்ட நிலையில் ஏரியில் கிடந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. போதை ஊசி விற்பனை தொடர்பாக ஏற்பட்ட மோதலில் இந்த கொலை சம்பவம் நடந்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.
இதையும் படிங்க: தூக்கி வீசிட்டு போய்ட்டே இருப்பேன்... அமித் ஷாவுடன் மல்லுக்கட்டும் அண்ணாமலை...!