விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே மேல அழகிய நல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் துரைப்பாண்டி (வயது 62). இவர் ராணுவத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். அதனைத்தொடர்ந்து ரயில்வேயிலும் பணிபுரிந்து ஓய்வு பெற்ற இவரது மனைவி மலர்விழி(54) சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். துரைப்பாண்டிக்கும் அவரது மனைவி மலர்விழிக்கும் சிவகங்கை மாவட்டம் குன்றக்குடியில் மற்றோரு வீடு ஒன்று உள்ளது. தம்பதியருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். துரைப்பாண்டிக்கும் அவரது மனைவிக்கும் இடையே சரிவர பேச்சு வார்த்தை இல்லை என கூறப்படுகிறது.

இதன் காரணமாக துரைப்பாண்டி மாதத்தில் 10நாட்கள் அழகிய நல்லூர் கிராமத்திலும், 10 நாட்கள் குன்றக்குடியிலும் வசித்து வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். இந்த நிலையில் துரைப்பாண்டி அழகிய நல்லூர் கிராமத்திற்கு செல்வதாக கூறி சென்றுள்ளார். அடுத்த நாள் துரைப்பாண்டிக்கு அவரது மனைவி பலமுறை போன் செய்தும் அவர் அழைப்பை எடுக்க வில்லை. கணவரை பலமுறை அழைத்தும் தொடர்பு கொள்ள முடியாததால் சந்தேகம் அடைந்த அவரது மனைவி மலர்விழி குன்றக்குடி காவல் நிலையத்தில் கடந்த மார்ச் 1 ம் தேதி தனது கணவரை காணவில்லை என புகார் அளித்துள்ளார்.
இதையும் படிங்க: ரியல் எஸ்டேட் அதிபர் வெட்டிக்கொலை.. தொழில் போட்டி காரணமா..? போலீசார் விசாரணை..!

போலீசார் விசாரணையில் துரைப்பாண்டி வங்கி கணக்கில் இருந்து காரியாபட்டி அருகே ஒண்டிப்புலி நாயக்கனூர் கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தராஜ் என்பவர் மகன் ராம்குமார் (வயது 26) என்பவரது வங்கிக் கணக்கிற்கு அதிக அளவு பணம் அனுப்பியது தெரியவந்தது. சந்தேகம் அடைந்த போலீசார் ராம்குமாரிடம் விசாரணை மேற்கொண்டதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. போலீசார் விசாரணையில் ராம்குமார், காரியாபட்டி அருகே ஜோகில்பட்டி கிராமத்தில் உள்ள கணேசன் என்பவருக்கு சொந்தமான தார் தயாரிக்கும் கம்பெனியில் வேலை செய்து வந்தது தெரிந்தது. இந்த கம்பெனியில் ராம்குமார் உடன் கீழ அழகிய நல்லூர் கிராமத்தைச் சேர்ந்த பாண்டி (வயது 54) என்பவர் பணிபுரிந்து வந்துள்ளார்.
பாண்டிக்கும் காணாமல் போனதாக கூறப்பட்ட துரைப்பாண்டிக்கும் பழக்கம் இருந்துள்ளது. இதனால் துரைப்பாண்டி, ராம்குமார் மற்றும் பாண்டி ஆகிய மூவருக்கும் ஒருவருக்கொருவர் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் துரைப்பாண்டி தனக்கு வயதாகி விட்டதாகவும், தான் சென்று வர ஒரு கார் வேண்டும் எனவும் ராம்குமார் மற்றும் பாண்டியிடம் கேட்டுள்ளார். ராம்குமார் மற்றும் பாண்டி இருவரும் சேர்ந்து கடையநல்லூர் பகுதியில் இருந்து இரண்டு லட்சத்து 40 ஆயிரம் ரூபாய்க்கு கார் ஒன்றை வாங்கி, அதை ரூபாய் 3 லட்சத்து 40 ஆயிரம் என துரைப்பாண்டியிடம் கூறி பணம் பெற்றுள்ளனர். ஆனால் வாங்கி சில நாட்களிலேயே அந்த கார் பழுது அடைந்ததால் அந்த காரை திரும்ப கொடுத்து விடுவோம் என துரைப்பாண்டி கூறி கார் கம்பெனியில் சென்றுள்ளார்.

அப்போது ஒரு லட்ச ரூபாய் அதிகமாக தன்னிடம் ராம்குமாரும் பாண்டியும் பணம் பெற்றது துரைப்பாண்டிக்கு தெரிய வந்தது. இதனால் தன்னை ஏமாற்றி விட்டதாக ராம்குமாரையும் பாண்டியையும், துரைப்பாண்டி சத்தம் போட்டுள்ளார். ஊரிலும் சென்று இதுபற்றி கூறியுள்ளார். இதை தங்களுக்கு அவமானம் என நினைத்த ராம்குமார் மற்றும் பாண்டி இருவரும் துரைப்பாண்டியை தீர்த்து கட்ட முடிவு செய்துள்ளனர். இதனால் திட்டம் போட்டு துரைப்பாண்டியை தங்களது முதலாளியிடம் பணம் வாங்கித் தருவதாக கூறி தாங்கள் வேலை செய்யும் கம்பெனிக்கு பிப்ரவரி 2ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அழைத்துச் சென்றுள்ளனர்.

அப்போது கம்பெனியில் யாருமில்லாத நேரத்தில் கட்டையால் துரைப்பாண்டியை தாக்கி கொலை செய்து அவரது துணிமணிகளை கழற்றி தீயிட்டு எரித்துவிட்டு அவரது உடலை மட்டும் தார் தயாரிக்கும் உலையில் போட்டு இரண்டு முறை எரித்துள்ளனர். சுமார் 170 டிகிரி செல்சியஸ் அளவு கொதிக்கும் இந்த தார் உலையில் உடலை போட்டால் சிறு துண்டு கூட மிஞ்சாது என அறிந்து திட்டம் போட்டு துரைப்பாண்டி உடலை தார் உலையில் போட்டுள்ளனர் என்பது போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

சிவகங்கை எஸ்பி ஆசிஷ் ராவத் மற்றும் விருதுநகர் மாவட்ட எஸ்பி கண்ணன் தலைமையில் போலீசார் ஜோகில்பட்டியில் உள்ள அந்த தார் தயாரிக்கும் கம்பெனியில் தீயணைப்புத் துறையினர் உதவியுடன் அந்த தார் உலையில் துரைப்பாண்டி எஞ்சிய சடலம் ஏதாவது கிடைக்கிறதா? என தேடி வந்தனர். துரைப்பாண்டி உடலை போட்டதாக கூறப்படும் அந்த தார் உலை மிகப் பெரியது என்பதால் அந்த தார் உலையில் துரைப்பாண்டி உடல் பாகம் ஏதேனும் கிடைக்குமா? அப்படியே கிடைத்தால் அதை எப்படி மீட்பது? என்பது குறித்தும் போலீசார் ஆய்வு செய்தனர்.

அவரது உடல் பாகங்களை மீட்கும் முயற்சியில் 24 மணி நேரத்திற்கு மேலாக ஈடுபட்ட நிலையில் சில எலும்புகளை மட்டும் போலீசார் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் ராம்குமார் மற்றும் பாண்டி இருவரையும் கைது செய்து அவர்களிடமும் தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முன்னாள் இராணுவ வீரர் கொலை செய்யப்பட்ட இந்த சம்பவம் காரியாபட்டி பகுதியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: குடிகார அண்ணன் செய்த காரியம்..! ஆத்திரம் தீர கத்தியால் குத்திக்கொன்ற தம்பி.. நடுரோட்டில் வெறிச்செயல்!