ஆவினில் வேலை வாங்கி தருவதாக ரூ.3 கோடி மோசடி செய்ததாக அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது தொடரப்பட்டுள்ள வழக்கில் உரிய சட்ட நடவடிக்கை எடுக்க ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
ராஜேந்திர பாலாஜி 2016 முதல் 2021 வரை பால்வளத்துறை அமைச்சராக இருந்தபோது முறைகேடு செய்ததாக வழக்கு தொடரப்பட்டது. ஆவினில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.3 கோடி மோசடி செய்ததாக ரவீந்திரன் என்பவர் புகாரின்பேரில் விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். வழக்கில் தலைமறைவாக இருந்த ராஜேந்திர பாலாஜி 2022 ஜனவரி 5ல் கைது செய்யப்பட்டார்.

புகார் அளித்த ரவீந்திரன், சென்னை உயர் நீதிமன்றத்தில், 'ராஜேந்திர பாலாஜிக்கு எதிரான வழக்கில் விரைந்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய போலீசாருக்கு உத்தரவிட வேண்டும்' என்று மனு தாக்கல் செய்தார்.
இதையும் படிங்க: பதவியில் உட்கார வைத்தே பல்லைப் பிடுங்கி விட்டோம்... ஆளுநரின் பதவி நீக்கம்... கொக்கரிக்கும் திமுக..!
மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், குற்றப்பத்திரிகையை விரைந்து தாக்கல் செய்யும்படி போலீசாருக்கு உத்தரவிட்டது. ஆனாலும், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய போலீசார் தாமதிப்பதாக கூறி கடந்த மாதம் இவ்வழக்கு சி.பி.ஐ விசாரணைக்கு மாற்றப்பட்டது.

இந்த வழக்கில் சி.பி.ஐ விசாரணையை எதிர்த்து ராஜேந்திரபாலாஜி, உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், ''ராஜேந்திர பாலாஜி மீது மேல் நடவடிக்கை எடுக்க அனுமதி கோரி கவர்னருக்கு அனுப்பப்பட்ட கோப்பு மீதான நிலை என்ன? கேள்வி எழுப்பினர்.
ஆளுநர் தரப்பில் உரிய அனுமதி வழங்காமல் தாமதம் செய்வதாக புகார் எழுந்தது. வழக்கு ஆவணங்களை மொழி பெயர்த்து வழங்கும்படி ஆளுநர் அலுவலகம் கோரியுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், இன்று முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது மேல் நடவடிக்கை எடுக்க ஆளுநர் ஆர்.என்.ரவி அனுமதி அளித்தார்.

ஆளுநரின் ஒப்புதலை அடுத்து ஓரிரு நாட்களில் அவர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தகவல் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: தமிழகத்தில் டபுள் ரோல் நடிப்பு வேண்டாம்.. ஆளுநரை டாராக கிழித்த அமைச்சர் கோவி.செழியன்!