ஈரோடு மாவட்டம், தாளவாடி தொட்டகாஜனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மாதப்பா. இவரது மனைவி தொட்டம்மா. இருவரும் கூலித் தொழிலாளிகள். இவரது மகன் ராகவன் (வயது 11), மகள் அமிர்தா (வயது 9). ராகவன் சூசைபுரம் அரசு உதவிபெறும் பள்ளியில் 6-ஆம் வகுப்பு படித்து வந்தான். பள்ளி விடுமுறை நாள் என்பதால் சனிக்கிழமை இரவு, ராகவன் பக்கத்தில் உள்ள அவரது பாட்டி சிக்கம்மா வீட்டில் தூங்க சென்றுள்ளான்.
ஞாயிற்றுக்கிழமை காலை நீண்ட நேரமாகியும் தனது அண்ணன் வீட்டுக்கு வராதததால், ராகவனைக் காண தங்கை அமிர்தா பாட்டி வீட்டுக்குச் சென்றுள்ளாள். வீட்டில் உள்ளே சென்று பாத்தபோது, ராகவன் மற்றும் பாட்டி சிக்கம்மா இருவரும் ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளனர். அதிர்ச்சி அடைந்த சிறுமி, இதுகுறித்து பெற்றோரிடம் அழுதபடியே கூறி உள்ளாள். இதையடுத்து மாதப்பா, தொட்டம்மா போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இறந்து கிடந்த் மகனின் உடலை பார்த்து கதறி அழுதனர்.

தகவலின் பேரில் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்ற தாளவாடி போலீசார் விசாரணை மேற்கொண்டனர். மாவட்ட எஸ்.பி சுஜாதா தலைமையில் 6 சிறப்பு தனிப்படைகள் அமைக்கப்பட்டு, மேற்கண்ட வழக்கு சம்பந்தமாக தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
விசாரணையில் தொட்டகாஜனூர் பகுதியை சேர்ந்த ஜே.சி.பி வாகன உரிமையாளர் நாகேஷ் (வயது 45) என்பவருக்கும் சிக்கம்மாவுக்கும் முன் விரோதம் இருந்தது தெரிந்தது. நாகேஷை பிடித்து விசாரித்ததில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. நாகேஷ், தனது தொழில் சம்பந்தமாக பணம் கொடுக்கல் வாங்கல் மூலம் இறந்து போன சிக்கமாளுடன் பழக்கம் இருந்ததாக கூறினார்.
இதையும் படிங்க: ஈரோட்டில் 5 மாணவிகள் மாயம்..! பதற்றத்தில் பெற்றோர்..!

மேலும் நாகேஷ் அதே பகுதியைச் சேர்ந்த பாக்யா என்ற பெண்ணுடன் திருமணம் தாண்டிய உறவு இருந்ததும், கொலையான சிக்கம்மா மூலம், பாக்கியாவின் பெற்றோர்களுக்கு தெரியவந்தது. பாக்யாவை அவரது பெற்றோர் கண்டித்ததால், பாக்கியாவுக்கும் இறந்து போன சிக்கமாவுக்கும், முன் விரோதம் இருந்துள்ளது.
பாக்யாவின் தூண்டுதலின் பேரில், ஜே.சி.பி உரிமையாளர் நாகேஷ், சம்பவ தினத்தன்று இரவு சிக்கம்மா வீட்டுக்கு சென்று பேசியபோது, இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு, அதில் நாகேஷ் தான் வைத்திருந்த சுத்தியலால் சிக்கம்மாவின் தலையில் தாக்கி, கொடூரமாக கொலை செய்ததும், மேற்படி சம்பவம் வெளியே தெரியக்கூடாது என்ற எண்ணத்தில், அருகில் தூங்கிக் கொண்டிருந்த சிக்கம்மாவின் பேரன் ராகவனையும், அதே போன்று சுத்தியலால் தாக்கி கொலை செய்ததாகவும்,

பீரோவில் இருந்த 30 கிராம் தங்க நகைகளை எடுத்துக்கொண்டு தலைமறைவானதாகவும் விசாரணையில் தெரியவந்து. போலீசார் நாகேசை கைது செய்தனர். இந்த கொலை செய்ய தூண்டிய அவரது கள்ளக்காதலி பாக்யாவையும் காவல்துறையினர் கைது செய்தனர்.
பரபரப்பை ஏற்படுத்திய இரட்டை கொலை சம்பவம் நடந்த இரண்டு நாட்களில் புலனாய்வு செய்து எதிரிகளை கைது செய்து அவர்களை சத்தியமங்கலம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். கள்ளக்காதலி ஏவி விட்டதில் பாட்டி, பேரன் ஆகியோர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: கழிவறைக்குச் சென்ற அரசு பெண் ஊழியருக்கு நேர்ந்த பரிதாபம்; ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் பரபரப்பு...!