மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்ற மக்களவையில் இன்று தனது 8-வது பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசினார். நாட்டின் பெண் நிதியமைச்சரான நிர்மலா சீதாராமன் தனது துணிச்சலான பொருளாதாரக் கொள்கைகளுக்காக எப்போதும் தலைப்புச் செய்திகளில் இருப்பவர். மத்திய பட்ஜெட் தினத்தன்று நிர்மலா சீதாராமன் எந்த மாதிரியான அறிவிப்புகளை வெளியிடுவார் என்பதைப் போலவே அவரது உடை குறித்தும் அதிகம் பேசப்படும்.

ஒவ்வொரு முறையும் பட்ஜெட் நாளில் ஒரு ஸ்பெஷல் சேலை அணிந்திருப்பார். மத்திய பட்ஜெட்டுக்காக நாட்டு மக்கள் ஒருபக்கம் ஆவலுடன் காத்திருக்கும் நிலையில், 2019ஆம் ஆண்டு முதல் அவரது புடவை தேர்வும் மக்களின் மனம் கவரும் வசீகர விஷயமாக இருந்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட்டின் போது நிர்மலா சீதாராமன் அணியும் சேலை மக்களின் கவனத்தை ஈர்க்கிறது.
இதையும் படிங்க: இவ்வளவு சேமிப்பா! வருமானவரி உச்சவரம்பு உயர்வால் எவ்வளவு பணம் மிச்சமாகும் தெரியுமா?
2019ஆம் ஆண்டில் நிர்மலா சீதாராமன் பிரகாசமான இளஞ்சிவப்பு மற்றும் தங்க மங்களகிரி சேலையில் வந்து பட்ஜெட்டை தாக்கல் செய்தார். தனது முதல் பட்ஜெட்டில், பிரீஃப்கேஸுக்குப் பதிலாக 'பாஹி கட்டா'வைக் கொண்டு வந்தார். பட்ஜெட் ஆவணங்கள் பட்டு சிவப்பு துணியால் சுற்றப்பட்டு, அதில் அரசு முத்திரை பதிக்கப்பட்டிருந்தது.
2020 ஆம் ஆண்டில் நிர்மலா சீதாராமன் பாரம்பரிய சிவப்பு நிற சேலையை அணிந்திருந்தார். சீதாராமன் பட்ஜெட் தினத்தன்று கருப்பு பார்டர்கள் மற்றும் சிக்கலான தங்க வேலைப்பாடு கொண்ட சிவப்பு நிற புடவையை தேர்வு செய்தார். இந்தப் புடவையானது கர்நாடகாவின் தார்வாட் பகுதியைச் சேர்ந்த கையால் நெய்யப்பட்ட 'இல்கல்' பட்டுப் புடவையாகும். அதில் பாரம்பரிய 'கசுதி' வேலைப்பாடு இருந்தது.
2021 ஆம் ஆண்டில் சிவப்பு மற்றும் வெள்ளை நிற பட்டு போச்சம்பள்ளி சேலையில் பச்சை நிற பாரளுடன் நிர்மலா சீதாராமன் தோற்றம் அளித்தார் தெலுங்கானாவில் பூதான் போச்சம்பள்ளியில் இந்த இகட் சேலை பாரம்பரியமாக தயாரிக்கப்படுகிறது. இந்தப் பகுதி இந்தியாவின் பட்டு நகரம் என்றும் அழைக்கப்படுகிறது.
2022 ஆம் ஆண்டில் நிர்மலா சீதாராமன் கிழக்கு இந்திய மாநிலமான ஒடிசாவில் இருந்து 'பொம்காய்' புடவையை தேர்வு செய்திருந்தார். பழுப்பு மற்றும் சிவப்பு நிறங்களின் கலவையை பயன்படுத்தி செய்யப்பட்டிருந்த இந்த புடவை பழுப்பு நிறத்தில் ஜொலித்தது.

2024 ஆம் ஆண்டில் நிர்மலா சீதாராமன் நீலம் மற்றும் கிரீம் நிற புடவையை அணிந்திருந்தார். மேற்கு வங்காளத்தில் இந்த வகை தையல் பிரபலமானது. 2019 முதல் 2024 வரையிலான நிர்மலா சீதாராமனின் பட்ஜெட் சிறப்புப் புடவைகளைப் பார்த்திருப்பீர்கள்.
இந்த ஆண்டு பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு முன்பாகவும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் எந்தப் புடவை அணிந்து வருவார் என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் காணப்பட்டது.
ஏனென்றால் அவர் பட்ஜெட்டில் சொல்லப் போகும் விஷயங்களுக்கும் அவர் அணிந்திருக்கும் புடவைக்கும் நிச்சயமாக தொடர்பு இருக்கும் என்பதைத் தான் இதுவரை அவரால் பட்ஜெட்டின் போது அணிந்த புடவைகள் பிரதிபலித்தன.
இந்த ஆண்டு பீகார் மதுபானி சேலை
இந்த ஆண்டு நிர்மலா சீதாராமன் பீகார் மதுபானி ரக சேலை அணிந்து வந்து பட்ஜெட் தாக்கல் செய்தார். இதன் சிறப்பம்சம் என்னவென்றால் பத்மஸ்ரீ விருது பெற்ற துலாரி தேவி வடிவமைத்த பீகாரின் கலை வேலைப்பாட்டுடன் கூடிய வெண்மை நிற சேலை ஆகும் இது.

பீகாரில் உள்ள "மிதிலா ஆர்ட் இன்ஸ்டிடியூட் " நிறுவனத்திற்கு கடன் வழங்கும் நிகழ்ச்சி ஒன்றிற்காக சென்றிருந்தபோது இந்த கலைஞர் துலாரி தேவியை நிர்மலா சீதாராமன் சந்தித்து பேசினார். அப்போது அவர் இந்த புடவையை அமைச்சருக்கு பரிசாக அளித்த புடவை தான், அவர் கேட்டுக் கொண்ட படி இன்றைய பட்ஜெட் தினத்தில் அவர் அணிந்திருந்தது.
பீகார் தேர்தலை பிரதிபலிக்கிறதா?
நிர்மலா சீதாராமன் பல்வேறு இந்திய மாநிலங்களில் இருந்து கைத்தறி புடவைகளை அணிவதில் ஆர்வம் கொண்டவர். இருப்பினும் இந்த ஆண்டு அவருடைய புடவை தேர்வு மிகவும் சுவாரஸ்யமானது. குறிப்பாக ஆண்டு இறுதியில் பீகார் மாநில சட்டசபை தேர்தலில் வர இருக்கிறது பட்ஜெட்டில் பீகார் சிறப்பு காவலன் பெறலாம் என்பதற்கான நுட்பமான குறியீடாக இது அமைந்திருக்கலாம் என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது.
உள்கட்டமைப்பு, வேலை வாய்ப்புகள், பொருளாதார மேம்பாட்டு திட்டங்கள் உள்ளிட்ட முக்கிய திட்டங்கள் பீகாருக்காக அரசு அறிவிக்கலாம் என்றும், முன்னதாகவே யூகித்து தகவல்கள் வெளியாகி வந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: விலை குறைகிறது கேன்சர் நோய் மருந்து..! சுங்கவரி முழுதும் ரத்து..! பட்ஜெட்டில் அதிரடி அறிவிப்பு!