பலுசிஸ்தான் மாகாணம் தற்போது 'சட்டவிரோத அரசின்' கீழ் இருப்பதாக பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கூறியுள்ளார். 1971 ஆம் ஆண்டு நடந்த தவறுகள் பாகிஸ்தானைப் பிரித்ததாகவும், இதுபோன்ற தவறுகள் மீண்டும் நிகழக்கூடாது என்றும் இம்ரான் கான் கூறியுள்ளார்.

"பலூசிஸ்தானில் திணிக்கப்பட்ட ஒரு சட்டவிரோத அரசு எந்தப் பிரச்சினையையும் எப்படி தீர்க்க முடியும்?" என அவர் எக்ஸ்தளத்தில் கேள்வி எழுப்பி உள்ளார். இதுகுறித்து அவர், "ஒரு பாகிஸ்தானியராகவும், முன்னாள் பிரதமராகவும், பயங்கரவாதம் கடுமையாக அதிகரித்துள்ள பலுசிஸ்தானின் நிலைமை குறித்து நான் மிகவும் கவலை கொள்கிறேன். அமைதியான போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச் சூடு, அரசு வன்முறை, சட்டவிரோத கைதுகள் ஆகியவை மிகவும் கவலையை அளிக்கின்றன" என இம்ரான் கான் கவலை தெரிவித்துள்ளார். இம்ரான் கான் ஆகஸ்ட் 2023 முதல் சிறையில் இருந்து வருகிறார்.

மேலும் அவர், ''உண்மையான மக்கள் பிரதிநிதிகள் பிரதான நீரோட்டத்திற்கு கொண்டு வரப்படும் வரை, பஅவர்களின் குரல்கள் உண்மையாகக் கேட்கப்படும் வரை, மக்களின் விருப்பப்படி தலைவிதி தீர்மானிக்கப்படும் வரை, பலுசிஸ்தானில் நிலைமை மேம்படாது.
இதையும் படிங்க: எல்லாம் போச்சு… இந்தியாவிடம் கெஞ்சும் பரிதாப நிலையில் பாகிஸ்தான்..!
இந்தப் பிரச்சினையை ஒருபோதும் பலவந்தமாக மட்டும் தீர்க்க முடியாது. ஏனென்றால் அது நெருக்கடியை ஆழமாக்கி, மேலும் உறுதியற்ற தன்மைக்கு வழிவகுக்கும். 2024 ஆம் ஆண்டு மோசடி தேர்தல்கள் மூலம் திணிக்கப்பட்ட பொம்மை அரசு அனைத்து விஷயங்களிலும் தோல்வி அடைந்துள்ளது. அதன் வெளியுறவுக் கொள்கை முற்றிலும் பேரழிவை ஏற்படுத்தியுள்ளது.

ஆப்கானிஸ்தானுடன் 2,200 கி.மீ நீள எல்லையை நாம் பகிர்ந்து கொள்கிறோம். அமைதியான பேச்சுவார்த்தைதான் முன்னேற ஒரே வழி. எங்கள் ஆட்சிக் காலத்தில், அந்த நேரத்தில் ஆப்கானிஸ்தான் அரசுடனான உறவுகள் மோசமாக இருந்தபோதும், நாங்கள் அவர்களுடன் நேரடிப் பேச்சுவார்த்தை நடத்தினோம்.

மூன்று ஆண்டுகளில் நாங்கள் செயல்படுத்திய கொள்கைகள் பயங்கரவாதத்தை வெற்றிகரமாக ஒழித்தன. இருந்தபோதும் எங்கள் ஆட்சிக்குப் பிறகு, முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அரசு கொள்கையை ஏற்றுக்கொண்டது பல பிரச்சினைகளுக்கு வழிவகுத்தது. இன்று, பொதுமக்கள் அதிகரித்து வரும் பயங்கரவாதத்தின் வடிவத்தில் அதன் விளைவுகளை அனுபவித்து வருகின்றனர். பாகிஸ்தானின் ஷாபாஸ் ஷெரீப் அரசு, ஆப்கானிஸ்தானுடன் இதுவரை எந்த தீவிரமான ராஜதந்திர முயற்சியையும் எடுக்கவில்லை'' என்று பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் கட்சியின் நிறுவனர் இம்ரான் கான் சிறையில் இருந்து விமர்சித்துள்ளார்.
இதையும் படிங்க: தொப்பியில் 804 என்று எழுதிய பாக். வீரர்... ஒரு மில்லியன் அபராதம்; காரணம் என்ன?