×
 

சட்டப்பேரவையில் கொந்தளித்த எடப்பாடி பழனிசாமி.. தமிழ்நாட்டில் சட்டம், ஒழுங்கு சந்தி சிரிப்பதாக ஆவேசம்..!

தமிழ்நாட்டில் சட்டம், ஒழுங்கு சந்தி சிரிப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று பேசிய அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, சட்டம் - ஒழுங்கு என்ற ஒன்று தமிழ்நாட்டில் இருக்கிறதா என கேள்வி எழுப்பினார். காவலர்கள் கையைக் கட்டிக்கொண்டு சோளக்கொல்லை பொம்மை போல் நிற்பதால் தான் கொலை, கொள்ளை பெருகி விட்டதாக அவர் குற்றஞ்சாட்டினார்.

தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. இன்றைய தினம் வினாவிடை நேரம் முடிந்தபிறகு பூஜ்யநேரத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தனது பேச்சைத் தொடங்கினார். அப்போது தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீரழிந்து கிடப்பதாகவும் கொலை, கொள்ளைச் சம்பவங்கள் பெருகி விட்டதாகவும் குறிப்பிட்டார். இதற்கு ஆளுங்கட்சி தரப்பில் இருந்து எதிர்ப்புக் குரல்கள் கிளம்பின. 

இதையும் படிங்க: 3 ஆண்டுகளாக வரி பாக்கி: ஆர்.பி.உதயகுமார் அலுவலகம் முன் வைக்கப்பட்ட குப்பைத் தொட்டி..!

சட்டம், ஒழுங்கு குறித்து எடப்பாடி பழனிசாமி பேசியவை அவைக்குறிப்பில் இடம்பெறாது என்று சபாநாயகர் அப்பாவு அறிவித்தார். இதற்கு அதிமுக எம்எல்ஏக்கள் எதிர்ப்பு தெரிவித்து முழக்கங்கள் எழுப்பினர். மேலும் அப்பாவுவை கண்டித்து அவர்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். வெளியே வந்த இபிஎஸ், செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர், சட்டப்பேரவைக்குள் சட்டம் - ஒழுங்கு குறித்து பேச அனுமதிக்கவில்லை என்று குற்றஞ்சாட்டினார். எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் ஈரோட்டில் நேற்று நடைபெற்ற கொலைச் சம்பவத்தைப் பற்றி பேச நான் முற்பட்டேன் எனவும் அதற்கு அனுமதி மறுக்கப்பட்டதாகவும் இபிஎஸ் தெரிவித்தார்.

அதிமுகவைப் பொறுத்தவரை தமிழக மக்களின் பிரச்னைகளுக்கு தீர்வுகாண வேண்டும் என்ற அடிப்படையில் செயல்படுவதாக எடப்பாடி பழனிசாமி கூறினார்.  மதுரை அருகே காவலர், கோவையில் பெண் ஆசிரியை ஒருவர் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டது, ஈரோட்டில் ரவுடி ஜான் பட்டப்பகலில் சினிமா பாணியில் கொல்லப்பட்டது, நெல்லையில் முன்னாள் சப்-இன்ஸ்பெக்டர் ஜாகீர் உசேன் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டது, சென்னையில் திமுக நிர்வாகி கடத்தி கொல்லப்பட்டது என நாள்தோறும் கொலைகளின் பட்டியல் தான் அரசின் சாதனை பட்டியலாக வெளியாகிறது என இபிஎஸ் தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் காவல்துறை என ஒன்று உள்ளதா என்று கேள்வி எழுப்பும் நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் விமர்சித்தார். முதலமைச்சரின் கட்டுப்பாட்டில் உள்ள காவல்துறை யாருடைய கட்டளையின் பேரில் கையைக் கட்டிக் கொண்டு வேடிக்கைப் பார்க்கிறது என்றும் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினார்.
 

இதையும் படிங்க: எடப்பாடியின் கோட்டை கனவு செங்கலை ஒவ்வொன்றாக உறுவும் செங்கோட்டையன்; மூவரை வாட்டி வதைக்கும் டெல்லி டென்ஷன்...! 

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share