நயினார் கேட்டுக்கொண்டதால் மனமிறங்கிய அண்ணாமலை... காற்றில் பறக்கவிடப்பட்ட சபதம்!!
திமுக ஆட்சியை அகற்ற சபதம் ஏற்ற அண்ணாமலை தற்போது நயினார் நாகேந்திரன் கேட்டுக் கொண்டதற்கு இணங்க காலணி அணிந்துக் கொண்டார்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, இனி வழக்கமான அரசியலை செய்யப் போவதில்லை. மேலும் திமுகவை ஆட்சியில் இருந்து அகற்றும் வரை தான் செருப்பு அணியப் போவதில்லை எனவும் அவர் தெரிவித்திருந்தார். இதுமட்டுமின்றி, திமுக அரசைக் கண்டித்து தனக்கு தானே சாட்டையால் அடித்துக் கொண்டார். இந்த நிலையில் திமுக ஆட்சியை அகற்றும் வரை காலணி அணியப் போவதில்லை என சபதம் ஏற்ற பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை மீண்டும் காலணி அணிந்து கொண்டார்.
கூட்டணியை உறுதிப்படுத்துவதற்கு முன்பு புதிய தலைவரை தேர்வு செய்ய வேண்டிய நிலையில் ஏற்பட்டதை அடுத்து நேற்று அமித்ஷா சென்னையில் இருந்த போது கட்சி தலைவருக்கான தேர்தலை தொடங்கினர். மதியம் 2 மணி முதல் மாலை 4 மணிவரை தலைவர் பதவிக்கு போட்டியிட விரும்புபவர்கள் மனுதாக்கல் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டது.
ஆனால் நயினார் நாகேந்திரன் மட்டுமே வேட்பு மனுதாக்கல் செய்ததால் அவர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். புதிய தலைவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் நிகழ்ச்சியும், தேசிய பொதுக்குழு உறுப்பினர்களை தேர்வு செய்வதும் இன்று மாலை வானகரம் ஸ்ரீவாரு மண்டபத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில், தலைவர் பதவிக்கு நயினார் நாகேந்திரன் மட்டுமே மனு செய்து இருப்பதாகவும், அவரது மனு ஏற்றுக்கொள்ளப்பட்டதாகவும் மாநில தேர்தல் அதிகாரியான சக்கரவர்த்தி அறிவித்தார். அதை தொடர்ந்து மேலிட பார்வையாளர் கிஷன் ரெட்டி முன்னிலையில் தேசிய தேர்தல் பொறுப்பாளர் தருண்சுக் தமிழக பா.ஜ.க. தலைவராக நயினார் நாகேந்திரன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டு இருப்பதாக அறிவித்தனர்.
இதையும் படிங்க: அண்ணாமலைக்கு புதிய பொறுப்பு கொடுத்த பாஜக... இனி அவரோட கண்ட்ரோலில் தென் மாநிலங்கள்!!
அதை தொடர்ந்து நயினார் நாகேந்திரன் உறுதி மொழி வாசித்து தலைவர் பதவியை ஏற்றுக் கொண்டார். இதை அடுத்து தமிழக பாஜக தலைவராக இருந்தபோது திமுக ஆட்சியை அகற்ற சபதம் ஏற்ற அண்ணாமலை தற்போது தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கேட்டுக் கொண்டதற்கு இணங்க அண்ணாமலை காலணி அணிந்துக் கொண்டுள்ளார்.
இதைதொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, நான் இன்று எந்த பொறுப்பிலும் இல்லாத அடிப்படை தொண்டன். ஆனால் நிச்சயமாக வரும் 2026ம் சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு வரும் என்பதில் முழு நம்பிக்கை எனக்கு இருக்கிறது.
நேற்று தேசிய ஜனநாயக கூட்டணி வலுவான பிறகு, அதிமுக தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வலிமை சேர்த்த பிறகு தமிழக மக்களின் மனநிலை மாறியிருக்கிறது. தமிழகத்தில் ஒரு வலிமையான கூட்டணி களத்தில் இருக்கிறது. அதனால், திமுக அரசை அகற்றப்பட வேண்டும் என்கிற முடிவை மக்கள் எடுத்துள்ளனர்.
அதிமுக- பாஜக கூட்டணி அறிவித்ததற்கு பிறகு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு இரவு முழுவதும் தூக்கம் வரவில்லை போல. அதனால், காலை முதல் வேலையாக அந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் மனக்குமுறலாகவும், அவருக்கு ஏற்பட்ட அச்சமாகவும் தான் அந்த அறிக்கையை பார்க்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: இனி அதை எல்லாம் நயினார் நாகேந்திரன் பார்த்துக்குவாரு... அண்ணாமலை ஓபன் டாக்!!