×
 

இந்தியாவுக்கு எதிராக செயல்பட்டதால் படு பாதாளத்துக்குப் போன செல்வாக்கு...!! ஜஸ்டின் ட்ருடோ பதவி விலகியதின் பின்னணி....

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பதவி விலகினார். காலிஸ்தான் விவகாரத்தில் இந்தியாவுக்கு எதிராக செயல்பட்டதால் ஏற்பட்ட எதிர்ப்புதான் அவருடைய ராஜினாமாவுக்கு முக்கிய காரணம் என்று சொல்லப்படுகிறது.

நாட்டு மக்கள் மத்தியில் அவருக்கு செல்வாக்கு குறைந்து வந்ததும் ஆளும் லிபரல் கட்சிக்குள்ளேயே கடும் எதிர்ப்பு ஏற்பட்டதை அடுத்தும் இந்த முடிவை அவர் எடுத்து இருக்கிறார். 10 ஆண்டுகால கன்சார்வேட்டிவ் ஆட்சிக்குப் பிறகு கடந்த 2015-ஆம் ஆண்டில் கனடா நாட்டின் பிரதமராக ஜஸ்டின் ட்ரூடோ (வயது 53)பொறுப்பேற்றார். கனடாவின் மிகப் புகழ்பெற்ற பிரதமராக விளங்கிய பியார்ட்ரூடோவின் மகனான அவர், மிக இளைய வயதில் நாட்டின் பிரதமர் பொறுப்பை ஏற்ற இரண்டாவது தலைவர் என்ற பெருமையைப் பெற்றார். கனடாவில் செயல்பட்டு வந்த காலிஸ்தான் தீவிரவாத இயக்கப் பிரச்சினை காரணமாக இந்தியாவுடன் அவர் மோதல் போக்கை கடைப்பிடித்து வந்தார். இதனால் அவருக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.

அத்துடன்அதிகரித்துவரும் உணவுப் பொருள் விலைவாசி, வீட்டு வசதிப் பிரச்னைகள் போன்ற காரணங்களால் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு பொதுமக்களிடையே எதிர்ப்பு அதிகரித்துவருவது கருத்துக் கணிப்புகளின் மூலம் தெரியவந்தது.

இதையும் படிங்க: கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ திடீர் ராஜினாமா...

மேலும், ஜக்மீத் சிங் தலைமையிலான புதிய ஜனநாயகக் கட்சி ட்ரூடோ அரசுக்கு அளித்துவந்த ஆதரவைத் திரும்பப் பெற்றதும் அவருக்கு பெரிய பின்னடைவை ஏற்படுத்தியது.

இதற்கிடையில், ட்ரூடோ அமைச்சரவையில் நிதியமைச்சராக இருந்த கிறிஸ்டியா ஃப்ரீலாண்ட் தனது பதவியை கடந்த மாதம் 16-ஆம் தேதி ராஜிநாமா செய்தார். பொருளாதார விவகாரத்தில் ட்ரூடோவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவர் விலகினார்.
 
இதன் மூலம், கட்சிக்குள்ளேயே அவருக்கு எதிர்ப்பு வலித்து வந்தது. இதற்கிடையே, அமெரிக்காவின் புதிய அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப், அகதிகள் மற்றும் போதைப் பொருள்கள் தங்கள் நாட்டுக்குக் கடத்தப்படுவதைத் தடுக்கத் தவறுவதால் கனடாவிலிருந்து இறக்குமதியாகும் பொருள்கள் அனைத்துக்கும் 25 சதவீத கூடுதல் வரி விதிக்கப்போவதாக எச்சரிக்கை விடுத்திருந்தார்

இதற்கு ட்ருடோ உரிய பதிலளிக்கவில்லை என்று விமர்சிக்கப்படுகிறது. கனடாவின் மூன்று முக்கிய எதிர்க்கட்சிகளும் வரும் 27-ஆம் தேதி தொடங்கவுள்ள நாடாளுமன்றக் கூட்டத்தின்போது ட்ரூடோ அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்து அரசைக் கவிழ்க்கவிருப்பதாகத் தெரிவித்தன.

இந்தச் சூழலில் பதவி விலகும் முடிவை ட்ரூடோ அறிவித்துள்ளார். லிபரல் கட்சிக்கு புதிய தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கு போதிய கால அவகாசம் பெறுவதற்கு ஏதுவாக, அடுத்த நாடாளுமன்றக் கூட்டத்தை ஜஸ்டின் ட்ரூடோ வரும் மார்ச் 24-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பார் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

ராஜினாமா குறித்து இது குறித்து ட்ரூடோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

"லிபரல் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள பூசல்கள் காரணமாக, அடுத்து வரவிருக்கும் தேர்தலில் கட்சியின் தலைவராக என்னால் இருக்க முடியாது என்பது தெளிவாகத் தெரிந்துவிட்டது. எனவே, அந்தப் பொறுப்பிலிருந்தும், பிரதமர் பதவியிலிருந்தும் விலக முடிவு செய்துள்ளேன்.

இருந்தாலும், கட்சிக்கு புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்படும்வரை இந்தப் பொறுப்புகளைத் தொடர்வேன். எந்தவொரு போராட்டத்திலும் எளிதில் பின்வாங்குவது என் சுபாவம் இல்லை. இருந்தாலும், நாட்டு மக்களின் நலன் கருதியும், நான் பெரிதும் மதிக்கும் ஜனநாயகத்தின் மாண்பைக் காக்கவும் பதவி விலகுகிறேன்"  என்று அறிக்கையில் கூறி இருக்கிறார்.

இதையும் படிங்க: பாலியல் வன்கொடுமை... பதவியேற்கப்போகும் முன் நீதிமன்றம் வைத்த செக்..! கதறும் ட்ரம்ப்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share