மசோதாக்கள் மீது முடிவெடுக்க காலக்கெடு.. உச்ச நீதிமன்றத்தில் மறு ஆய்வு மனு.. மத்திய அரசு அதிரடி முடிவு.?
மசோதாக்கள் மீது முடிவெடுக்க ஆளுநர், குடியரசுத் தலைவருக்கு உச்ச நீதிமன்றம் காலக்கெடு விதித்து உத்தரவிட்டுள்ள நிலையில், இத்தீர்ப்பை மறு ஆய்வு செய்யக் கோரி மனு தாக்கல் செய்ய மத்திய அரசு ஆலோசித்து வருகிறது.
தமிழக அரசின் மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போட்டதை எதிர்த்தும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க காலவரம்பை நிர்ணயம் செய்யக் கோரியும் தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா, ஆர். மகாதேவன் அடங்கிய அமர்வு கடந்த 8ஆம் தேதி தீர்ப்பு வழங்கியது.
இரண்டாம் முறையாக நிறைவேற்றி அனுப்பி வைத்த மசோதாக்களைக் குடியரசுத் தலைவருக்கு அனுப்பியது சட்ட விரோதம் என்று தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், மாநில அரசின் மசோதா குறித்து ஒரு மாதத்துக்குள் ஆளுநர் முடிவு எடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது. இதேபோல ஆளுநர்கள் அனுப்பி வைக்கும் மசோதாக்கள் குறித்து 3 மாதங்களுக்குள் குடியரசுத் தலைவர் முடிவு எடுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் காலக்கெடு விதித்தது.
உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை நீர்த்துப் போகச் செய்யும் வகையில் மத்திய அரசு சார்பில் அவசர சட்டங்கள் நிறைவேற்றப்படலாம் அல்லது தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோரி மத்திய அரசு மனு தாக்கல் செய்யலாம் என்று தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய மத்திய அரசு தீவிரமாக ஆலோசித்து வருகிறது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சக வட்டாரங்கள் கூறுகையில், " மாநில ஆளுநர்கள் அனுப்பும் மசோதா குறித்து 3 மாதங்களில் முடிவு எடுக்க குடியரசுத் தலைவருக்கு உச்ச நீதிமன்றம் காலக்கெடு விதித்திருக்கிறது. இதை மறுஆய்வு செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் முறையிடுவோம்.
ஒரு மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளிக்கவில்லை என்றால் அந்த மசோதா காலாவதியாகிவிடும். ஆனால், உச்ச நீதிமன்றத்தின் தற்போதைய தீர்ப்பால், காலாவதி மசோதாக்கள் உயிர் பெறுவதற்கான வாய்ப்பு உள்ளது. இவை உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை முன்னிறுத்தி உச்ச நீதிமன்றத்தில் மறுஆய்வு மனுவை தாக்கல் செய்ய தீவிரமாக ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
வழக்கு விசாரணையின்போது, மசோதா குறித்து முடிவு எடுக்க ஆளுநர், குடியரசுத் தலைவருக்கு காலக்கெடு நிர்ணயம் செய்யக் கூடாது என்று மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல் வாதிட்டார். ஆனால் அவரது வாதத்தை நீதிபதிகள் ஏற்கவில்லை.
மத்திய அரசின் கருத்துகள் கவனத்தில் கொள்ளப்படவில்லை. எனவே, மத்திய அரசின் கருத்தை ஆணித்தரமாக எடுத்துரைக்க உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்படும்" என்று மத்திய உள்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.
இதையும் படிங்க: பாஜகவுக்கு எதிராக திமுக ஸ்டைலில் களமிறங்கிய விஜய்... இன்னும் மூன்றே நாளில் வரப்போகும் விசாரணை..!
இதையும் படிங்க: ஆளுநர் ஆர்.என்.ரவி மதவெறிக் கூச்சல்.. பதவியை விட்டு உடனே தூக்குங்க... கி.வீரமணி ஆவேச தாக்கு.!!