'திமுகவின் பித்தலாட்டம்... மொழியை வைத்து அரசியல்..!'- ஆதாரங்களை வெளியிட்டார் தர்மேந்திர பிரதான்..!
தேசிய கல்விக் கொள்கை மற்றும் மொழித்திணிப்பு குறித்த திமுக- வின் வெற்றுப் பேச்சுகள் மூலம் அவர்களின் தோல்வியை மறைக்க முடியாது. தமிழகத்தின் எதிர்காலத்தை பணயம் வைத்து அதிகாரம் செலுத்துவது என்ற அவர்களின் அரசியல் திட்டம் தெள்ளத் தெளிவாக தெரிகிறது
பி.எம் ஸ்ரீ -க்கு ஆதரவு கேட்டு மத்திய அரசுக்கு, தமிழக அரசு எழுதிய கடிதத்தை ஆதரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான்.
அவர் தனது எக்ஸ்தளப்பதிவில், ''பி.எம் ஸ்ரீ பள்ளிகளை அமைக்க தமிழக அரசு விருப்பம் தெரிவித்தது என்று நான் கூறியதன் மூலம் நேற்று தமிழக திமுக எம்.பி-க்களும், முதல்வர், மு.க.ஸ்டாலின் அவர்களும் நாடாளுமன்றத்தை நான் தவறாக வழிநடத்தியதாக குற்றம் சாட்டுகின்றனர். திமுக எம்.பி.,க்களும், முதல்வரும் எவ்வளவு வேண்டுமானாலும் பொய்களை அடுக்கி வைக்கலாம். ஆனால், உண்மையை மறைக்க முடியாது'' எனக் கூறி, தமிழக அரசு மார்ச் 15, 2024 அன்று எழுதிய கடிதத்தை வெளியிட்டுள்ளார் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்.
தமிழக அரசு சார்பாக 15.03.2024 தேதியிட்டு அப்போதைய பள்ளிக் கல்வி- எழுத்தறிவுத் துறையின் செயலாளர் சஞ்சய் குமாருக்கு அனுப்பப்பட்டதாக தர்மேந்திட பிரதான் வெளியிட்டுள்ள கடிதத்தில்,''D.O.No.1-2/2022-IS-19, தேதியிட்ட 23.02.2024-ல் இருந்து பள்ளிக் கல்வித் துறையில் பல தாக்கத்தை ஏற்படுத்தும் முயற்சிகளைச் செயல்படுத்துவதன் மூலம், மாணவர்களுக்கு மேம்பட்ட தரமான கல்வியை வழங்க தமிழ்நாடு அரசு எப்போதும் உறுதி பூண்டுள்ளது.
இதையும் படிங்க: தொகுதி மறுவரையறை.. முதல்வர் ஸ்டாலினுக்கு பெருகும் ஆதரவு.. கிரீன் சிக்னல் கொடுத்த நவீன் பட்நாயக்!
23.02.2024 தேதியிட்ட உங்கள் கடிதத்தின் அடிப்படையில், பி.எம் ஸ்ரீ பள்ளிகளை மாநிலத்தில் நிறுவுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட தமிழ்நாடு மாநிலம் மிகவும் ஆர்வமாக உள்ளது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். இது தொடர்பாக, பள்ளிக் கல்விச் செயலாளர் தலைமையில் மாநில அளவிலான குழு அமைக்கப்பட்டுள்ளது.
குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில், அடுத்த கல்வியாண்டு 2024-25 தொடங்குவதற்கு முன்பு பி.எம் ஸ்ரீ பள்ளிகளை நிறுவுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மாநிலத்தால் கையெழுத்திடப்படும். 2023-24 நிதியாண்டிற்கான 3வது மற்றும் 4வது தவணையை விடுவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது'' என தமிழக முதன்மை செயலாளர் சிவதாஸ் மீனா எழுதிய கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
மேலும் தர்மேந்திர பிரதானின் எக்ஸ் தளப்பதிவில், ''திமுக, எம்பி- க்கள் மற்றும் முதல்வர் ஸ்டாலின் எவ்வளவு வேண்டுமானாலும் பொய்களை அடுக்கி வைக்கலாம். ஆனால், உண்மை சரிந்து விழும்போது தட்டிக் கேட்பது கிடையாது. முதல்வர் ஸ்டாலின் தலைமையிான திமுக அரசு மக்களுக்கு நிறைய பதில் சொல்ல வேண்டி உள்ளது. மொழிப் பிரச்னையை திசைதிருப்பும் தந்திரமாக பேசி தங்கள் வசதிக்கு ஏற்ப உண்மைகளை மறுப்பது என்பது அவர்களின் நிர்வாகத்தை காப்பாற்றாது.
தேசிய கல்விக் கொள்கை மீதான இந்த திடீர் நிலைப்பாடு ஏன்? திமுக-வின் அரசியல் செல்வாக்கை மீட்டெடுப்பதற்காகவே இந்த மாற்றம். திமுக-வின் இந்த பிற்போக்குத்தனமான அரசியல், தமிழகத்திற்கும் அதன் மாணவர்களின் பிரகாசமான எதிர்காலத்திற்கும் அவமானம்.
தேசிய கல்விக் கொள்கையை அரசியல் பார்வையில் பார்க்க வேண்டாம். அரசியல் ஆதாயங்களைவிட தமிழகத்தில் உள்ள நமது குழந்தைகளின் நலனுக்கு முன்னுரிமை கொடுங்கள். மொழித்திணிப்பு- தேசிய கல்விக் கொள்கை குறித்த திமுக-வின் சமீபத்திய கூச்சல்கள், அக்கட்சியின் பாசாங்கு தனத்தை வெளிப்படுத்துகிறது. தேசிய கல்விக் கொள்கை எதிர்ப்பு என்பது, தமிழ் மொழி , கலாசாரம் மற்றும் பெருமையை பாதுகாப்பதற்கு எந்தத் தொடர்பும் இல்லை. அரசியல் ஆதாயத்திற்காக தான் எதிர்க்கிறது.
தமிழ் மொழியை மேம்படுத்த போராடுவதாக திமுக கூறுகிறது. ஆனால், உண்மையில் தமிழ்மொழி, கலாசாரம் மற்றும் இலக்கிய சிந்தனைகளை ஊக்கப்படுத்தவும், மேம்படுத்தவும் எதுவும் செய்யவில்லை. ஆனால், தரவுகளின்படி, 2018 - 19 கல்வியாண்டில் தமிழ் வழிக்கல்வியில் 65.87 லட்சம் ஆக இருந்த மாணவர் சேர்க்கை 2023-24 ல் 46.83 லட்சமாக குறைந்துள்ளது. ஐந்து ஆண்டுகளில் 19.05 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் சேர்க்கை குறைந்துள்ளது. 67 சதவீத மாணவர்கள் ஆங்கில வழி பள்ளியில் படிக்கின்றனர். அதேநேரத்தில் தமிழ் வழியில் மாணவர் சேர்க்கை 54 சதவீதத்தில்(2018 -19) இருந்து 36 சதவீதம்(2023- 24) ஆகக் குறைந்துள்ளது.
அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழியில் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை ஐந்தாண்டுகளில் 3.4 லட்சத்தில் இருந்து 17.7 லட்சமாக ஐந்து மடங்கு அதிகரித்து உள்ளது. அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை 7.3 லட்சமாக குறைந்துள்ளது. இது தமிழகத்தில், தமிழ் வழியில் மாணவர் சேர்க்கை தொடர்ந்து குறைந்து வருவதை காட்டுகிறது. இது மொழி விருப்பத்தில் ஏற்பட்ட மாற்றமல்ல, காலனித்துவ மனநிலையின் மாற்றம் இது. வேலை மற்றும் அந்தஸ்துக்கு ஆங்கிலம் நுழைவு வாயிலாக கருதப்படுகிறது. இந்திய மொழிகள் பின்தங்கிய நிலையின் அடையாளமாக காணப்படுகின்றன.
தாய் மொழிக் கல்வியை ஊக்குவிப்பது என்பது தேசிய கல்விக் கொள்கையின் முக்கியமான அம்சங்களில் ஒன்று. இளம் மனங்களில் விமர்சன சிந்தனையை வளர்ப்பதற்கும், இந்திய மக்கள் தொகையின் முழு திறனையும் வெளிக் கொண்டு வருவதற்கும் இது மிகவும் உறுதியான பாதையில் ஒன்று.
தேசிய கல்விக் கொள்கை மற்றும் மொழித்திணிப்பு குறித்த திமுக- வின் வெற்றுப் பேச்சுகள் மூலம் அவர்களின் தோல்வியை மறைக்க முடியாது. தமிழகத்தின் எதிர்காலத்தை பணயம் வைத்து அதிகாரம் செலுத்துவது என்ற அவர்களின் அரசியல் திட்டம் தெள்ளத் தெளிவாக தெரிகிறது'' எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: பி.எம்.ஸ்ரீ திட்டத்தில் பின்வாங்கிய திமுக.. எதற்காக இந்த பொய் பிரச்சாரம்? புள்ளி விவரங்களுடன் வானதி ஸ்ரீனிவாசன் கேள்வி..!