தொகுதி மறுவரையறை.. முதல்வர் ஸ்டாலினுக்கு பெருகும் ஆதரவு.. கிரீன் சிக்னல் கொடுத்த நவீன் பட்நாயக்!
தொகுதி மறுவரையறை விவகாரம் தொடர்பாக ஒடிஷா முன்னாள் முதல்வர் நவீன் பட்நாயக்கை திமுக பிரதிநிதிகள் சந்தித்து பேசினர்.
நாடாளுமன்ற தொகுதி மறுவரையறை தொடர்பாக சென்னையில் மார்ச் 22இல் நடைபெற உள்ள 7 மாநில முதல்வர்கள், முன்னாள் முதல்வர்கள், அந்த மாநிலங்களில் உள்ள பிரதான எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலின் அழைப்பு விடுத்திருந்தார். அதன் ஒரு பகுதியாக பிஜு ஜனதா தள கட்சித் தலைவரும் ஒடிஷா முன்னாள் முதல்வருமான நவீன் பட்நாயக்கை, தமிழக அமைச்சர் டிஆர்பி ராஜா, திமுக எம்பி தயாநிதி மாறன் ஆகியோர் புவனேஸ்வரில் இன்று சந்தித்தனர்.
அப்போது, நாடாளுமன்ற தொகுதி மறுவரையறை தொடர்பாக சென்னையில் நடக்க உள்ள கூட்டத்தில் பங்கேற்க நவீன் பட்நாயக்குக்கு முதல்வர் மு.க. ஸ்டாலினின் அழைப்புக் கடிதத்தை அளித்தனர். பின்னர் தயாநிதி மாறன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “இது ஓர் அழகான நல்ல சந்திப்பு. நாடாளுமன்ற தொகுதி மறுவரையறை தொடர்பாக மார்ச் 22இல் சென்னையில் கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் கலந்து கொள்ள நவீன் பட்நாயக்கை முறையாக அழைத்தோம். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சார்பாக நாங்கள் இங்கு வந்து அழைத்துள்ளோம். அவருடன் நீண்ட நேரம் உரையாற்றியது மகிழ்ச்சியாக இருந்தது.
இதையும் படிங்க: முதல்வர் ஸ்டாலின் செய்வது கொஞ்சமும் சரியல்ல.. கடுகடுத்த மத்திய அமைச்சர் ஜோஷி..!
நவீன் பட்நாயக் எங்கள் கவலைகளைப் புரிந்துகொண்டார். அவருடைய கவலைகளைப் பகிர்ந்து கொண்டார். நியாயமற்ற எல்லை நிர்ணயம் தமிழகம், ஒடிஷா மாநிலங்களுக்கு நல்லதல்ல என்றும் அவர் தெரிவித்தார். தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, பஞ்சாப், ஒடிசா ஆகிய 7 மாநிலங்களும் நாடாளுமன்ற தொகுதி மறுவரையறை காரணமாக நேரடியாக பாதிப்புக்குள்ளாகும். நாடாளுமன்றத்தில் நம் பங்கு குறையு. வட மாநிலங்களின் பங்கு அதிகரிக்கும். மக்கள் தொகையைக் கட்டுப்படுத்திய மாநிலங்கள் அதற்காக ஒரு விலையைக் கொடுக்க நேரிடும். சென்னையில் மார்ச் 22இல் நடைபெறும் கூட்டத்தில் கலந்து கொள்வதாக நவீன் பட்நாயக் கூறினார்.” என்று தயாநிதி மாறன் தெரிவித்தார்.
இதையும் படிங்க: தொகுதி மறுவரையரை விவகாரம்.. மாநில முதல்வர்களுக்கு கடிதம்... சென்னையில் அடுத்த ஆலோசனை.. ஜெட் வேகத்தில் முதல்வர் ஸ்டாலின்!