×
 

ஐந்து கண் நாடுகள்…. இந்திய - கனடா சிக்கல்! அரசியலாளர் கே.எஸ்.ராதாகிருஷ்ணனின் பதிவு

இந்துக்களின் கோவில்களுக்கும் இந்து மக்களுக்கும் பாதுகாப்பு அளிக்காமல் விடுவதோடு இந்தியத் தூதரகங்களுக்கும் தேவையான பாதுகாப்பை வழங்கவில்லை என்று பிரதமர் மோடி கடுமையான வினையை ஆற்றியுள்ளார்... அரசியலாளர் கே.எஸ்.ராதாகிருஷ்ணனின் பதிவு

கனடாவில் இந்தியர்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்றும் கனடா அரசு நடுநிலையோடு  நடந்து கொள்ளாமல் இந்துக்களின் கோவில்களுக்கும் இந்து மக்களுக்கும் பாதுகாப்பு அளிக்காமல் விடுவதோடு இந்தியத் தூதரகங்களுக்கும் தேவையான பாதுகாப்பை வழங்கவில்லை என்று பிரதமர் மோடி கடுமையான வினையை ஆற்றியுள்ளார். இந்திய வெளி விவகாரத்துறை அமைச்சர் ஜெய்சங்கரும் சொல்லி இருக்கிறார்.
அதனால் அங்கே இருக்கக் கூடிய நமது தூதரகங்களை இந்தியா திரும்பப் பெற்றுக் கொண்டிருக்கிறது. டொரண்டோ ஒட்டோவா வான்கூவர் போன்ற இடங்களில் இருக்கும் இந்திய தூதரகங்களுக்குப் பாதுகாப்பில்லை. அதேபோல் அங்கு இருக்கும் இந்து மக்களுக்கும் கோயில்களுக்கும் பாதுகாப்பில்லை! அங்கு இருக்கக்கூடிய ஒரு இந்துக் கோவில்  பூசாரி ஒருவர் மீது கனடா அரசு பிரிமிங்டன்  வழக்குத் தொடர்ந்து அவரைப் பதவியை விட்டு விலக்கி இருக்கிறது.

07-11-2024அன்று இந்திய வெளி விவகாரத்துறை அமைச்சகம் கனடாவிலும் பங்களாதேஷிலும் இந்துக் கோயில்களுக்கும் இந்து மக்களுக்கும் பாதுகாப்பு இல்லை என்றும் அதை நடுநிலையோடு இரு நாடுகளும் கவனிக்க வேண்டும்! அவர்களுக்கு உரிய உரிமைகள் தரப்பட வேண்டும் என்று கூறியுள்ளது. தொடர்ந்து கனடா அதிபர்  ஜஸ்டின் ட்ருடோவால் கனடாவில் வாழும் இந்துக்கள் பாதிக்கப்பட்டும் பல வகையில் துன்புறுத்தப்பட்டும் வருவது ஆழ்ந்த கவலை அளிக்கிறது. அதுமட்டுமில்லாமல் அங்கே நிலை பெற்றிருக்கும் சீக்கியர்களின்  தீவிரவாத இயக்கமான காலிஸ்தான் அமைப்பிற்குக் கண்மூடித்தனமான ஆதரவை ட்ருடோ தந்து வருவது இந்தியாவைப் பொறுத்தவரை குதிரைக்குப்புறத் தள்ளியதோடு அல்லாமல் குழியும் பறித்த கதையாய் நீள்கிறது!  இந்த விஷயத்தில் பொறுப்பாகவும் கவனமாகவும் இருக்க வேண்டிய ட்ருடோ சிறுபிள்ளைத்தனமாக நடந்து கொள்கிறார்.

இதையும் படிங்க: அடுத்த கனடா பிரதமர்: போக்குவரத்து துறை அமைச்சரான தமிழ் பெண் அனிதா ஆனந்த்..!

ஜி7 மாநாட்டில் கலந்து கொள்ள கடந்த ஆண்டு
டில்லி வந்த போது ட்ருடோ மாநாட்டில் மற்ற நாட்டு தலைவர்கள் போல் பங்கேற்கமால் பெருன்மையான தனது அறையில் சும்மா இருந்தது வேடிக்கையாக இருந்தது. பல நாட்டு தலைவர்களுக்கு மோடி அளித்த விருந்தில் கலந்து கொள்ளாமால் ட்ருடோ சிறு பிள்ளை போல கண்ணியம் அற்று நடந்து கொண்டார். இவர் வந்து விமானம் பழுது ஏற்பட்டதால் நாடு திரும்ப இந்திய வழங்கிய விமானத்தை கூட ஏற்காமல் ட்ருடோ லண்டனிலிருந்து விமானம் வரும் வரை ஒரு நாள் டில்லியில் இருந்து தமதமாக சென்றார்.

அவர் இருநாட்டு நல்லுறவையும் பேணுகிற வகையில் உண்மையானவராகவும் சர்வதேசச் சட்டங்களின்படி   எவ்வளவு தூரம் ஒரு அந்நிய நாட்டில் தலையிட முடியும் என்பது குறித்த தெளிவோடு
நடந்து கொள்வது தான் இரண்டு நாடுகளுக்கும் நன்மையைக் கொண்டு வந்து சேர்க்கும்!
வலுத்தநாடு என்கிற பெயரில் ஐந்து கண் நாடுகளின் ஆதரவோடு இந்தியாவை அசைத்துப் பார்க்கலாம் என்று அவர் நினைப்பது  இரண்டு நாடுகளின் எதிர்காலத்திற்கும் உகந்ததல்ல!. சீக்கியர்கள், இந்துக்கள் என்று வந்தால் ட்ருடோ ஒரு கண்ணில் வெண்ணையும் மற்றொரு கண்ணில் சுண்ணாம்பையும் வைக்கிறார்.

கனடாவின் 1.86 மில்லியன் ஜனத் தொகையில் இந்தியர்கள் ஐந்து சதவீதம் பேர் வாழ்கிறார்கள். இப்போது பிரச்சினை ஏற்பட்டுள்ள பிராம்டனில் ஒரு லட்சத்து 80 ஆயிரம் இந்தியர்கள் வசிக்கிறார்கள். அங்கு வாழும் மொத்த மக்கள் தொகையில்  இந்தியர்கள் மட்டும் 28 சதவீதம்!  இப்படியாக அங்கு கனடக் குடியுரிமையோடு வாழும் இந்தியர்களுக்கு அவர்களுடைய கலாச்சாரங்களுக்குப் பாதுகாப்பு இல்லை எனில் எந்த நம்பிக்கையில் அவர்கள் கனடாவின் வளர்ச்சிக்கு உழைத்து கொடுக்க முடியும்?
அவர்களது சுமூகமான வாழ்க்கை முறையும் இயல்பு வாழ்க்கை முறையும்  பாதிக்கப்படும்படியாக அல்லது அச்சம் அடையும் வகையில் மாறும்போது பதற்றங்கள் ஏற்படத்தானே செய்யும்! நேற்று வரை கனடா அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் நமக்கு நம்பிக்கை அளிப்பதாகத் தெரியவில்லை!
இந்தியா அங்கே வாழும் இந்துக்களுக்கும் இந்தியர்களுக்கும் முறையான வகையில் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று சொல்லி இருக்கிறார். ஜனநாயகத்தில் நம்பிக்கை உள்ளவர்கள் எந்த ஒரு காரணத்திற்காகவும் தன் நாட்டில் வாழும்    புலம்பெயர் மக்களில் ஒரு சாரார் ஆன அதாவது சீக்கியர்களுக்கு மட்டும் சலுகை வழங்கி மற்றைய இந்தியர்கள் இந்துக்களுக்கு விரோத மனப்பான்மையைக் காட்டுவது என்பது ஒருபோதும் நியாயமாகாது!  அது இந்தியர்களை தங்கள் நாட்டுக்குள்ளே பிரித்தாளும் சூழ்ச்சி என்று தான் சொல்ல வேண்டி இருக்கிறது! இதை நாம் மட்டுமல்ல, சர்வதேச  5 கண் நாடுகளும் புரிந்துகொள்ள வேண்டும். அமெரிக்க அதிபர் பைடன் இரு பக்கமும் ஆதரவு தெரிவித்தாலும் மெய்யாக அவரின் ஆதரவு கனடா பக்கமே இருந்தது. இப்போது டிரம்ப் அதிபராக வந்துள்ளார். இதில் டிரம்ப் ஆதரவு இந்தியா பக்கம் இருப்பார் என கருதப்படுகிறது.

அமெரிக்கா மற்றும் கனடா போன்ற குடியேற்ற நாடுகள் சர்வதேச விஷயங்களில் உலகின் மிக அதிகாரம் உள்ளதான போலீஸ்காரன் மனப்பான்மையைக் (இங்கிலாந்து,  அமெரிக்கா, நியூசிலாந்து, கனடா மற்றும் ஆஸ்திரேலியா ஆகியவை ஐந்து கண் நாடுகள்.)கடைபிடிப்பது பல வருடங்களின் தொடர்ச்சியாக இருந்தாலும் இப்போதெல்லாம் அவற்றின் தந்திரமான போக்குகள் அதிகரித்து விட்டன!.
வெளியுறவு விவகாரங்களில் அல்லது சுயேட்சையான பிற நாட்டு தேசியங்களில் தலையிடுவது அல்லது அவற்றுக்கு முறையான பண்பாட்டையும் கலாச்சாரத்தையும் வளங்களையும் கற்றுத் தருவது என்கிற பெயரில் அவற்றை அடக்கி ஒடுக்குவது சுரண்டுவது என்கிற வன்முறைகளைச் செய்யத் துவங்கி விட்டன.
உலகின் வடகிழக்கில் நீர் வளத்துடன் மக்களே இல்லாமல் காலியாக இருந்த  பிரமாண்டமான நிலப்பரப்பில் ஐரோப்பாவிலிருந்து வெள்ளையர்கள் வந்து குடியேறினார்கள். அதுதான் இன்றைய அமெரிக்கா கனடா போன்ற நாடுகள்!
நமது நாட்டைப் போல மூன்று மடங்கு நிலப்பரப்புள்ள கனடாவில் 4.12 கோடி மக்கள் மட்டுமே வாழ்கிறார்கள்.! அதில் கனடா நாட்டில் பூர்விமாக வாழ்ந்தவர்கள் மிகவும் சொற்பம்! ஐந்து சதவீதம் மட்டுமே! சமீபத்தில் கூட அங்கு வாழ்ந்த பூர்வீகப் பழங்குடி மக்களின் ஆயிரக்கணக்கான குழந்தைகள் எப்படிப் பாலியல் கொடுமைக்கு உள்ளாக்கினார்கள்! அவர்கள் படிக்கும் பள்ளியிலேயே அக்குழந்தைகள் கொன்று புதைக்கப்பட்டார்கள் என்று ஆய்வு செய்து பார்க்கும் முகமாக 2008ல் கனடா அரசாங்கம் “ட்ரூத் அண்ட் ரீகன்ஸிலியஷேசன் கமிஷன்” அமைத்தது! அதன்படி 2015 வரை ஆய்வு செய்து லட்சக்கணக்கான குழந்தைகள் படுகொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டதை அக்கமிஷன் கண்டுபிடித்தது! பல்லாயிரக்கணக்கான குழந்தைகளின் எலும்புக் கூடுகள் கிடைத்தன! அந்தப் படுகொலைக்கு ரோமன் கிறிஸ்துவ சர்ச் தான் காரணம் என்பதால் 2021 இல் போப் ஃபிரான்சிஸ் அதற்கு மன்னிப்பு கேட்ட சம்பவங்களை நாம் திருப்பி பார்க்க வேண்டும்.

19-20ஆம் நூற்றாண்டுகளில் ஐரோப்பா மற்றும் உலக நாடுகள் முழுவதிலிருந்தும் அங்கு புலம்பெயர்ந்து குடியவர்கள் வாழும் நாடு தான் கனடா! தமிழக அரசியல் மொழியில் கனடா என்பது வந்தேறிகள் உருவாக்கிய நாடு! கனடா மக்கள் தொகையைக் கவனித்தோமெனில் அதன் ஆதிப் பூர்வீகத்தினர் போக இங்கிலாந்து ஸ்காட்லாந்து பிரெஞ்சு ஐரிஸ் ஜெர்மன் சீனா இத்தாலி இந்தியா உக்ரைன் இப்படி பல நாடுகளில் இருந்து குடியேறிய கூட்டம் தான் இன்றைய கனடா நாடு முழுக்க நிறைந்திருக்கிறார்கள்! இந்த நாட்டின் முதுகெலும்பு என்று நினைக்கும் பெரும்பான்மை சமுதாயம் எதுவும் இல்லாத கனடா குறிப்பிட்ட யாருக்கும் சொந்தமானது அல்ல! அந்த வகையில் ஒவ்வொரு சிறுபான்மைச் சமுதாய வாக்கு வங்கியும் அந்நாட்டு அரசியலில்  மிக முக்கியம்! அந்த அடிப்படையில் பார்த்தால்  கனடாவின் அரசியல் வந்தேறிச் சிறுபான்மை சமூகங்களில் அதிக எண்ணிக்கையாக வாழ்ந்து வருபவர்கள்   நம் நாட்டில் இருந்து அங்கு சென்ற சீக்கியர்கள் தான்! அவர்கள் மக்கள் தொகை விகிதத்தில் நான்காவது இடத்தில் இருக்கிறார்கள். அவர்கள் எண்ணிக்கை எட்டு லட்சம்! கனடா மக்கள் தொகையில் 2%  சதவீதம். உண்மையில் அவர்களின் அரசியல் செல்வாக்கு அவர்களின் எண்ணிக்கையை விடப் பல மடங்காக அங்கே நிலவுகிறது.

கனடாவில் 1981 ல் 67,715 ஆக இருந்த சீக்கியர்கள் எண்ணிக்கை 1985-ல் காலிஸ்தானியர்கள் இந்திய விமானத்தை தகர்த்த பிறகு  அவர்களின் தீவிர வாதப் போக்கை கருத்தில் கொள்ளாமல் அல்லது கனடாவில் அவர்களது வருகையை தடுக்காமல் அப்படி நடந்திருந்தால்  சீக்கியர்களின் மக்கள் தொகை குறைவதற்குப் பதில் கனடா நிலங்களில்  அவர்களது மக்கள் தொகை மளமளவென்று ஏறி 1991 இருமடங்காகி 1.47 லட்சம் ஆகியது ஏன்? என்ற கேள்வி இங்கு முக்கியத்துவம் ஆகிறது. பாகிஸ்தானுடன் கொஞ்சிக்குலவி வந்த வெள்ளை மேற்கத்திய நாடுகளின் அங்கமான கனடா காலிஸ்தானியர்களை ஊக்குவித்தது! சீக்கியர்களுக்கு அதிக அளவில் விசா தந்தது அதனால் அவர்கள் எண்ணிக்கை 2001 இல் 2.78 லட்சம் 2016 லவ் 4.55 லட்சம் 2021 ல் 7.72 லட்சம் என்று மளமளவென்று உயர்ந்தது! இங்கிருந்து சென்ற சீக்கியர்கள் பாதிக்கு மேல் கனடாவில் நான்கு நகரங்களில் பெரும்பான்மையாக இப்போது வாழ்ந்து வருகிறார்கள்! அங்கு அவர்கள் பெரும் வாக்கு வங்கியாக உருவாகி இருக்கிறார்கள்!
இப்படித்தான் காலிஸ்தானுக்கான ஆதரவை மேற்கு நாடுகள் ஒரு பக்கம் வழங்க மறுபக்கம் கனடா சீக்கியர்களின் அரசியல் செல்வாக்கும் ஒன்று சேர இந்த இரட்டைக் காரணங்களால் கனடா காலிஸ்த்தானின் இயக்க மையம் ஆகியது! மேற்கத்திய நாடுகளின் ஆசியுடன் பாகிஸ்தானின் நெருக்கத்துடன் நடக்கும் காலிஸ்தான் இயக்கமும் அவற்றால்  உண்டான சீக்கியர்களின் செல்வாக்கும்தான் இன்று கனடா இந்திய உறவில் ஏற்பட்டிருக்கும் பிளவிற்கு அடிப்படைக் காரணம்!
இந்தியாவுக்கு ஏற்பட்டிருக்கும் ஏற்றம் அதனால் உக்ரேன் ரஷ்யப்போரில் நமது நாட்டின் நலத்தில் மோடி எடுத்த துணிவான முடிவு இதன் காரணமாக அமெரிக்காவுக்கு ஏற்பட்ட பின்னடைவும் வெறுப்பும் கூட கனடா இந்தியா உறவில் ஏற்பட்ட பிளவுக்கு முக்கிய காரணம் என்கிறார்கள்.

அந்த வகையில் இந்தியாவில் தனிநாடு கேட்டு தீவிரவாதத்தில் ஈடுபட்ட பிந்த்ரன்வாலேயால் உருவான காலிஸ்தான் இயக்கம் இன்று கனடாவில் செல்வாக்குப் பெற்று இந்தியாவிற்கு எதிராக அங்கே மையம் கொண்டுள்ளது என்றும் இதை நான் பார்க்கிறேன்!.இந்த பிந்திரன் வாலேயை உருவாக்கியதும் இந்திராகாந்தி என்பதோடு பிறகு அவர்களின் வன் முறை தாளாமல்
ஆப்ரேஷன் புளு ஸ்டார் இராணுவத் தாக்குதலைப் பொற்கோவிலில் நிகழ்த்தியது படு மோசமான விளைவுகளை ஏற்படுத்தியதோடு பின்னாளில் அதே சீக்கிய பாதுகாப்பாளர்களாலேயேஅவர் சுட்டும் கொல்லப்பட்டார். இந்திய அரசியலில் நேருவின் குடும்பம் முற்றிலும் சீரழிந்ததற்கு இது ஒரு முக்கிய காரணம். கடந்த கால காங்கிரஸ் ஆட்சியில் நிகழ்ந்த மோசமான பல்வேறு விளைவுகளுக்கு இன்னும் பதில் சொல்ல வேண்டி இருக்கிறது.
ஆங்கிலேயக்காலனி ஆதிக்கம் நம் நாட்டில் 10 கோடி பேரைப் படுகொலை செய்து 3780 லட்சம் கோடி ரூபாய் பெறுமான செல்வத்தைக் கொள்ளையடித்து நம் நாட்டை ஒட்டாண்டியாக்கியது என்று பென் நார்டன் என்ற ஆங்கிலேய பொருளாதார நிபுணர் 2022 இல் வெளியிட்ட ஆய்வு அறிக்கை கூறுகிறது. காலனி ஆதிக்க வெள்ளையர்கள் எங்கு சென்றாலும் அப்பகுதியைக் கொள்ளையடித்து வளங்களை சுருட்டிக் கொண்டு போனது போலத் தான் இன்று  அமெரிக்கா கனடா போன்ற நாடுகளும் செய்கின்றன.

அதற்கு எந்தெந்த நாட்டிலும் இருந்து வந்து தங்கள் நாடுகளில் குடியேறிய  பன்னாட்டுச்சிறுபான்மை மக்களை தங்கள் பகுதிக்குள் வைத்து  அவர்களின் தாய் நாடுகளுக்கு எதிரான அராஜகத்தை தூண்டி விடுகின்றன. குழம்பிய குட்டையில் மீன் பிடிப்பது அவர்களது வழக்கம்! இன்று காலிஸ்தானியர்கள், கனடா நாட்டு வெள்ளையரை பார்த்து  இது எங்கள் நாடு நீங்கள்
உங்கள் பூர்வீகம் ஐரோப்பா , அங்கு போங்கள் என சீக்கியர் சொல்கின்ற நிலைமை.

இந்தியாவைப் பொறுத்த வரையில் அமெரிக்காவின் சர்வதேச அரசியல் என்பது நட்பும் பகையும் கலந்தது என்பது நாம் அறிந்திருக்கும் விஷயம் தான்.
“எங்கள் நாட்டு பிரஜையான நிஜ்ஜார் படுகொலையில் இந்திய உளவுத் துறைக்குச் சம்பந்தம் இருக்கிறது அதற்கான ஆதாரம் எங்களிடம் இருக்கிறது” என்று சென்ற ஆண்டு கனடாவின் பிரதமரே தெரிவித்தார்! அதற்கான ஆதாரம் என்ன காட்டுங்கள்? என்று நம் நாட்டு  அயல் உறவுத் துறை கேட்டது. அதற்கு பதில் சொல்லாமல் அதையும் தாண்டி “நிஜ்ஜார் கொலையில் கனடாவில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளுக்குத் தொடர்பு இருக்கிறது” என்றும் அவர் மீண்டும் அபாண்டமாகக் கூறினார்.  இப்படியான அவரது பேச்சால் இந்திய கனடா உறவு துண்டிக்கப்படும் நிலையை எட்டியது.. பதிலாக இப் பிரச்சனையை முன்னிட்டு  ஆளும் கனடாவின் அரசியலுக்குள் பிளவு ஏற்பட்டது! ட்ருடோவின் ஆளுங்கட்சியிலேயே அவரது அபாண்டங்களை எதிர்க்கும்முகமாக அவர் தன் பதவியை ராஜினாமாச் செய்ய வேண்டுமென்று கோரிக்கை பலமாக எழுந்திருக்கிறது! இந்த நிலையில் இந்தியாவுக்கு எதிராகத் எங்களிடம் போதிய ஆதாரம் இல்லை! உளவுத்துறைத் துப்பு மட்டும்தான் இருக்கிறது! என்று ட்ருடோ கனடா அரசின் விசாரணை கமிஷன் முன்பு வெட்கமின்றி  ஒப்புக்கொண்டார்! இது அவருக்கும் கனடாவிற்கும் ஆன இழுக்கு! உண்மையில் நமக்குத் தான் அது வெற்றி!

இறுதியாக ஒரு பக்கம் உக்ரைன் போர் மறுபக்கம் இஸ்ரேல் ஹமாஸ் யுத்தம் என்று உலகம் தவிக்கும் சமயம் கனடாவை வைத்து மேற்கத்திய நாடுகள் குறிப்பாக அமெரிக்காவின் இந்த இந்திய வெறுப்பரசியல் விளையாட்டு ஜனநாயகத்தில் நம்பிக்கை உள்ளதாகக் கூறிக்கொள்ளும் மேற்கத்திய நாடுகளின் எதிர்காலத்திற்கு நல்லதல்ல! மேற்கத்திய நாடுகளின் மக்கள் தொகை உலக மக்கள் தொகையோடு ஒப்பிட 13 சதவீதம் மட்டுமே !நம்மைச் சேர்த்தால் தான் ஜனநாயக நாடுகளுக்கு கணிசமான உற்பத்தி வணிகம் மற்றும் பொருளாதார பலம் கிடைக்கும். அதனால்தான் ஜி7 எனும் வெள்ளை இன நாடுகள் கூட்டமைப்பு நம்மை எப்போதும்  சந்திப்பிற்கு அழைக்கிறது! இந்த நிலையில் அந்த நாடுகள் கனடாவை நமக்கு எதிராகத் தூண்டிவிடுவது என்பது மிகவும் குறுகிய கால யுத்தி! அதை அந்நாடுகள் அவசியம் கைவிட வேண்டும்! நம் நாட்டைப் பணிய வைப்பதோ பலவீனப்படுத்துவதிலோ அந்நாடுகள் குறியாக இருந்தால் அதில் தோல்விதான் கிடைக்கும் என்பதை அந்நாடுகள் உணர வேண்டும்! இந்த ஐந்து கண் நாடுகள் என்றால் இந்த ஐந்து நாடுகளும் உலகத்தை தனக்கு கீழ் கண்காணிக்கிறது என்று அர்த்தம்!!

இந்தியாவைப் பொறுத்த வரையில் இப்படியான அமெரிக்க கனடா நாடுகளின் பார்வை இருக்க சர்வதேச அரசியல் விஷயங்களில் மோடி சில உறுதியான நிலைப்பாடுகளை எடுத்து இருக்கிறார் என்பது என்னைப் போன்றவர்களின் நம்பிக்கையாக இருக்கிறது.!!  தவிர்க்க முடியாத அளவில் இந்தியாவின் அரசியல்ப் பங்கு உலக நாடுகளுக்கு தேவையாக இருக்கிறது என்பதையும்
உலகஜனநாயக அரசுகளின் உரிமைகளுக்கு இந்தியா போன்ற ஒரு பெரும் நாடு வலிமையான ஜனநாயக அரசியல் பின்னணியைக் கொண்டிருக்கிறது என்பதோடு இன்றைய வளர்ந்து வரும் பொருளாதார தாராளவாதங்களின் குதிரை லக்கான்களை தன் கையில் வைத்திருக்கிறது என்பதும் முக்கியமாகிறது. ஜஸ்டின் ட்ருடோ பதவி விலகி அறிவிப்பு வந்தாலும், எந்த மாற்றமும் இல்லை. பல்வேறு அடிப்படை வாத நாடுகளுக்கிடையே அவற்றின் பொருளாதார வேட்டை வெறிகளுக்கு இடையே இந்தியாவின் சகிப்புத்தன்மைதான் தவிர்க்க இயலாத ஆதாரமாகி இருக்கிறது. அந்த எளிமையின் நடைமுறைதான் நமது  அரசியல் வடிவங்கள்!

இதையும் படிங்க: "அல்டிமேட் பிக் பாஸ்" : உலகின் வலுவான பிரதமர், நரேந்திர மோடி: பாரதிய ஜனதா பெருமிதம்

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share