தேர்வு நாளில் தந்தையை பறி கொடுத்த மாணவி.. மனதை கரைக்கும் காட்சிகள்..
திருநெல்வேலி அருகே பிளஸ் டூ தேர்வு நாளான இன்று தந்தை மரணமடைந்த நிலையில், அவரின் உடலை வணங்கி மகள் தேர்வு எழுதச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை தாலுகா வடலிவிளை கிராமத்தைச் சேர்ந்த அய்யாதுரை - பானுமதி தம்பதியினருக்கு மூன்று மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். இவரது மகள் மதுமிதா அதே பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் டூ படித்து வருகிறார்.
புற்றுநோயால் பாதிக்கப்பட்டு வந்த அய்யாதுரை கடும் அவதிக்குள்ளாகி இன்று காலை உயிரிழந்தார். இந்த நிலையில் அய்யாதுரை மகள் மதுமிதாவிற்கு இன்று கணித பாடத்தில் பொதுத்தேர்வு நடைபெறுகிறது.
தந்தை உயிரிழந்த சோகத்தில், செய்யவதறியாத மாணவி திகைத்து கண்ணீர் விட்டு கதறியுள்ளார். பின்னர் மனதை இறுகப்படுத்தி மாணவி மதுமிதா, அவரது தந்தையின் உடலை வணங்கி விட்டு தேர்வு எழுத புறப்பட்டு சென்றுள்ளார்.
இதையும் படிங்க: விபத்தில் படுத்த படுக்கையான மாணவர்.. வலியுடன் பொது தேர்வு எழுதி நெகிழ்ச்சி..
இந்த சம்பவம் உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் இடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக மாணவி தேர்வு எழுதி முடித்து சென்றவுடன் இறுதிச்சடங்குகள் நடத்த உறவினர்கள் ஏற்பாடு செய்துள்ளனர்.
இதையும் படிங்க: தேர்விற்கு ஆம்புலன்சில் வந்து இறங்கிய மாணவி.. கல்வியை கைவிடாத மாணவிக்கு குவியும் பாராட்டு!