பாகிஸ்தானில் வெடித்த கோழி சண்டை..! இப்தாரின் சுவையைக் கெடுத்த அரசு..!
தற்போது, பாகிஸ்தானில் கோழிக்கான இந்தப் பெரும் போர் அரசிற்கு ஒரு பெரிய சவாலாக மாறி வருகிறது.
ரமலான் மாதத்தில் கோழி இறைச்சியின் விலை உயர்வால் பாகிஸ்தானில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஷாபாஸ் ஷெரீப் அரசு கோழியின் விலையை கிலோவுக்கு ரூ.400 என நிர்ணயித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆனால், அதை கசாப்பு கடைக்காரர்களும், கோழி விற்பனையாளர்களும் அந்த விலையை ஏற்க மறுத்துவிட்டனர்.
தற்போதைய சந்தை விலைகளின்படி, ஒரு கிலோ கோழியை குறைந்தபட்சம் ரூ.700க்கு விற்க வேண்டியிருக்கும். அப்போதுதான் தங்களுக்கு லாபம் கிடைக்கும் என்று கடைக்காரர்கள் கூறுகிறார்கள். இந்த முடிவுக்கு எதிராக கோழி வியாபாரிகள் இன்று முதல் நாடு தழுவிய வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இப்போது இந்த வேலைநிறுத்தத்தால் இப்தாரின் சுவை கெட்டுவிட்டது.
சிந்து கோழி மற்றும் சில்லறை விற்பனையாளர்கள் சங்கத்தின் தலைவர் ராவ் முகமது அப்சல், ''கோழிப் பண்ணைகள் அரசால் நிர்ணயிக்கப்பட்ட விலைகளைப் பின்பற்றுவதில்லை. கோழிப் பண்ணைகள் ஒரு கிலோவிற்கு ரூ.490 என்ற விலையில் உயிருள்ள கோழியை வழங்குகின்றன. அதே நேரத்தில் அரசு அதை கிலோவிற்கு ரூ.400 என விலை வைத்திருக்க உத்தரவிட்டுள்ளது. இப்படிப்பட்ட சூழ்நிலையில், சில்லறை விற்பனையாளர்கள் ஒரு கிலோ கோழியை ரூ.780க்கு வாங்கும்போது, அதை எப்படி ரூ.640 அல்லது அதற்கும் குறைவாக விற்க முடியும்?'' எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதையும் படிங்க: அமைதிக்கான நோபல் பரிசு வென்ற மலாலா... 13 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சொந்த ஊரில்...!
உள்ளூர் அரசு நிர்வாகம் பாரபட்சமான நடவடிக்கை எடுப்பதாகவும் வர்த்தகர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். அரசு சிறு கடைக்காரர்களுக்கு கடுமையான அபராதம் விதித்து வருவதாகவும், ஆனால் கோழி பண்ணை உரிமையாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் அப்சல் கூறினார். சந்தையில் கோழி பற்றாக்குறையை செயற்கையாக உருவாக்கி விலையை உயர்த்துவதற்காக பெரிய கோழி வியாபாரிகள் வேண்டுமென்றே கோழி இருப்புக்களை வைத்திருப்பதாக அவர் கூறினார்.
இந்த சர்ச்சை தொடர்பாக, சிந்து மாகாண கோழி விற்பனையாளர்கள், கோழி பண்ணை உரிமையாளர்களை அரசு விலையில் கோழிகளை வழங்குமாறு அசு கட்டாயப்படுத்தும் வரை, கோழி விற்பனை மூடப்படும் என்று அறிவித்துள்ளனர். இந்த நெருக்கடிக்கு அரசு ஒரு தீர்வைக் கண்டுபிடிக்க வேண்டும், இல்லையெனில் இந்த இயக்கம் பாகிஸ்தான் முழுவதும் பரவக்கூடும் என்று அவர் கூறினார்.
ரமலான் மாதத்தில் கோழி இறைச்சியின் விலை உயர்வு காரணமாக பொதுமக்கள் ஏற்கனவே சிரமப்படுகிறார்கள். ஒருபுறம், அரசு கோழியை மலிவான விலையில் விற்பனை செய்வதாகக் கூறிக்கொண்டிருக்கும் அதே வேளையில், சந்தையில் யதார்த்தம் வேறு மாதிரியாக இருக்கிறது. பல நகரங்களில், கோழிக்கறியின் விலை கிலோவுக்கு ரூ.750 முதல் ரூ.800 வரை எட்டியுள்ளதால், ஏழை மற்றும் நடுத்தர மக்கள் அதை வாங்குவது கடினமாக உள்ளது.
கோழி வியாபாரிகளின் வேலைநிறுத்தம் காரணமாக வரும் நாட்களில் நிலைமை மோசமடையக்கூடும். கோழி வரத்து முற்றிலுமாக நின்றால், விலை மேலும் உயர வாய்ப்புள்ளது. இந்தப் பிரச்சினைக்கு இதுவரை அரசு எந்தவொரு உறுதியான தீர்வையும் கண்டுபிடிக்கத் தவறிவிட்டது. இதனால் மக்களிடையே கோபம் அதிகரித்து வருகிறது.
இப்போது ஷாபாஸ் ஷெரீப் அரசு இந்த நெருக்கடியை எவ்வாறு கையாள்கிறது என்பதைப் பார்ப்பது சுவாரஸ்யமாக இருக்கும். கோழிப்பண்ணை உரிமையாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்குமா? அல்லது சில்லறை விற்பனையாளர்களுக்கு நிவாரணம் அளிக்க விலைகளை மாற்றியமைக்குமா? தற்போது, பாகிஸ்தானில் கோழிக்கான இந்தப் பெரும் போர் அரசிற்கு ஒரு பெரிய சவாலாக மாறி வருகிறது.
இதையும் படிங்க: இந்தியாவிற்குள் ஊடுருவிய பாக்., ஐஎஸ்ஐ-யின் ஸ்லீப்பர் செல்ஸ் .. மாபெரும் சதித் திட்டம்… 35 பேர் கைது..!