“எங்கள விட்டுடுங்க... நாங்க இதை பண்ணல”... ஆனா இந்தியாவை மறைமுகமாக எச்சரித்த பாகிஸ்தான்...!
பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் இதை பயங்கரவாதச் செயல் என்று விவரிக்கவோ அல்லது கண்டிக்கவோ தவறியுள்ளது.
ஜம்மு-காஷ்மீரில் உள்ள பஹல்காம் அருகே சுற்றுலாப் பயணிகள் மீது நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலுக்கும் பாகிஸ்தானுக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்று பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் தெரிவித்துள்ளார். அண்டை நாடான பாகிஸ்தானுக்குள் அமைதியின்மையை ஏற்படுத்தியதற்காக இந்தியாவை அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
ஆளும் பி.எம்.எல்-என் கட்சியின் மூத்த தலைவரும் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பின் நெருங்கிய உதவியாளருமான கவாஜா ஆசிப், ஜம்மு-காஷ்மீரில் சுற்றுலா பயணிகள் மீதான பயங்கரவாத தாக்குதலுக்கு ஜம்மு - காஷ்மீருக்குள்ளேயே உருவாகியுள்ள புரட்சி படைகள் தான் காரணம் என குற்றம் சுமந்துள்ளார். தாக்குதலில் ஏற்பட்ட உயிர் இழப்பு குறித்து கவலை தெரிவித்து பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. ஆனால் அதை பயங்கரவாதச் செயல் என்று விவரிக்கவோ அல்லது கண்டிக்காதது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
பஹல்காம் அருகே உள்ள பைசரன் புல்வெளியில் சுற்றுலாப் பயணிகள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் குறைந்தது 26 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் டஜன் கணக்கானவர்கள் காயமடைந்தனர். இந்தத் தாக்குதலால் பிரதமர் நரேந்திர மோடி சவுதி அரேபியாவிற்கான இரண்டு நாள் பயணத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
இதையும் படிங்க: "இங்க நடந்ததை உங்க பிரதமர் மோடிக்கிட்ட சொல்லு".. பெண்ணை மிரட்டிய பயங்கரவாதி..!
தாக்குதலுக்கு பாகிஸ்தானை தளமாகக் கொண்ட பயங்கரவாதிகளைக் குற்றம் சாட்டுவது குறித்து இந்தியத் தரப்பில் இதுவரை எந்த அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை. இதனிடையே பாகிஸ்தான் ஊடகங்களுக்கு அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் பேட்டி அளித்துள்ளார். அதில், “பாகிஸ்தானுக்கு இதற்கும் எந்த தொடர்பும் இல்லை. இவை அனைத்தும் இந்தியாவிற்குள் வளர்க்கப்பட்டவை, இந்தியாவிற்கு எதிராக பல்வேறு மாநிலங்கள் புரட்சியில் ஈடுபட்டு வருகிறது. ஒன்றல்ல, இரண்டல்ல, டஜன் கணக்கானவை, நாகாலாந்து முதல் காஷ்மீர் வரை, தெற்கில், சத்தீஸ்கர், மணிப்பூரில் என எல்லா இடங்களிலும், இந்திய அரசாங்கத்திற்கு எதிராக புரட்சிகள் உள்ளன” என்றார்.
“மக்கள் தங்கள் உரிமைகளைக் கேட்கிறார்கள். இந்துத்துவ சக்திகள் மக்களை சுரண்டி வருகின்றன, சிறுபான்மையினரை அடக்குகின்றன, கிறிஸ்தவர்களையும் பௌத்தர்களையும் சுரண்டி வருகின்றனர். அவர்கள் கொல்லப்படுகிறார்கள், இது அதற்கு எதிரான புரட்சி, இதன் காரணமாகவே இதுபோன்ற நடவடிக்கைகள் அங்கு நடக்கின்றன” எனக்கூறியுள்ளார்.
பஹல்காம் தாக்குதலுக்கும் எங்களுக்கு எந்த தொடர்பும் இல்லை. எந்த சூழ்நிலையிலும் நாங்கள் பயங்கரவாதத்தை ஆதரிக்கவில்லை, எந்த மோதலிலும் அப்பாவி மக்கள் இலக்காக்ககூடாது எனக்கூறியுள்ள அவர், இந்தியாவில் இராணுவமோ அல்லது காவல்துறையோ தங்கள் உரிமைகளைக் கேட்கும் மக்களுக்கு எதிராக அட்டூழியங்களைச் செய்தால், அடிப்படை உரிமைகள் கூட இல்லாத மக்கள், கிளர்ச்சி செய்வதற்காக கையில் ஆயுதங்களை எடுக்கிறார்கள். ஆனால் அதற்காக பாகிஸ்தானைக் குறை கூறுவது எளிதானது என்பதால் இந்திய பழி சுமத்துவதாக தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: "இங்க நடந்ததை உங்க பிரதமர் மோடிக்கிட்ட சொல்லு".. பெண்ணை மிரட்டிய பயங்கரவாதி..!