டெஸ்லா கார் மீது முட்டை வீச்சு..! எலோன் மஸ்க்கு அதிகரிக்கும் கடும் எதிர்ப்பு
அமெரிக்காவில் ஸ்கேப்ஸ் எக்ஸ் நிறுவனத்தின் உரிமையாளரும், டெஸ்லா நிறுவனத்தின் சிஇஓ எலான் மஸ்கிற்கு எதிராக புதிய போராட்டம் கிளம்பியுள்ளது, டெஸ்லா கார்களை யாரும் வாங்க வேண்டாம் புறக்கணியுங்கள் என்று போராட்டக்காரர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
அமெரிக்க அதிபராக டொனால்ட் ட்ரம்ப் 2வது முறையாக அதிபராக வந்தபின் தொழிலதிபர் எலான் மஸ்கிற்கு தனது அமைச்சரவையில் இடம் அளித்துள்ளார். அமெரிக்க அரசின் திறன்மேம்பாட்டு துறை, சிக்கனத்துறை கேபினெட் அமைச்சராக எலான் மஸ்க் நியமிக்கப்பட்டுள்ளார். ஆனால்,எலான் மஸ்க் வந்தபின் அமெரிக்க அரசின் செலவுகளைக் குறைக்கும் வகையில் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அதில் குறிப்பாக அமெரிக்க அரசின் ஊழியர்களை வேலைநீக்கம் செய்வது, விஆர்எஸ் மூலம் வீட்டுக்கு அனுப்புவது போன்ற பணிகளை எலான் மஸ்க் தனது அமைச்சரவை மூலம் செய்து வருகிறார்.
அமெரிக்க அரசில் இருந்த பெடரல் தொழில்நுட்ப குழுவைக் கலைக்க உத்தரவிட்ட எலான் மஸ்க், அதில் பணியாற்றிய 90 ஊழியர்களையும் வேலையிலிருந்து நீக்கியுள்ளார். இதேபோல பல்வேறு துறைகளிலும் பணியாற்றும் ஊழியர்களை வேலையிலிருந்து நீக்கி, செலவுகுறைக்கும் நடவடிக்கையில் எலான் மஸ்க் ஈடுபட்டுள்ளார். அமெரிக்க அரசில், அதிபர் ட்ரம்ப் நிர்வாகத்தில் எலான் மஸ்க் தலையீட்டுக்கு எதிராகத்தான் அமெரிக்காவில் பல்வேறு இடங்களில் போராட்டம் தொடங்கியுள்ளது.
இதையும் படிங்க: 14வது குழந்தைக்கு அப்பா ஆனார் எலான் மஸ்க்... 4வது மனைவிக்கு பிறந்த 4வது குழந்தை..!
அமெரிக்காவின் டஸ்கான், செயின்ட் யூயிஸ், நியூயார்க் சிட்டி, டேடன், சார்லோட்டி, பாலோ அல்டோ உள்ளிட் பல்வேறு நகரங்களிலும், இங்கிலாந்து, ஸ்பெயின், போர்சசுகல் நாடுகளிலும் எலான் மஸ்க் நிறுவனத்தின் டெஸ்லா ஷோரூம்கள் முன்பு போராட்டக்காரர்கள் போராடி வருகிறார்கள். செலவு குறைப்பு நடவடிக்கை என்ற பெயரில் அமெரிக்க அரசில் இருக்கும் பல துறைகளை மூடுதல், ஊழியர்களை நீக்குதல் போன்றவை தேவையற்றது என்று வேலையிலிருந்து நீக்கப்பட்ட ஊழியர்கள் தெரிவிக்கிறார்கள்.
அது மட்டுமல்லாமல் ஜனநாயகக் கட்சி எம்.பி.க்கள், பிரதிநிதிகள், எலான் மஸ்க் இரட்டை ஆதாயத்தை அனுபவிக்கிறார், டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனங்களின் சிஇஓவாக இருந்து கொண்டு அமெரிக்க அரசில் கேபினெட் அமைச்சராக எவ்வாறு தொடர முடியும் எனவும் கேள்வி எழுப்பியுள்ளனர். நியூயார்க் சிட்டி நகரில் 300க்கும் அதிகமான போராட்டக்காரர்கள் நேற்று டெஸ்லா ஷோரூம் முன்பு கூடி எலான் மஸ்கிற்கு எதிராகப் போராட்டம் நடத்தினர். டெஸ்லா கார்களை மக்கள் வாங்க வேண்டாம், புறக்கணியுங்கள் என போராட்டக்காரர்கள் கேட்டுக்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கொலராடோ நகரில் உள்ள டெஸ்லா ஷோரூம்முக்குள் புகுந்த போராட்டக்காரர்ளில் ஒரு பெண், அங்கு நிறுத்தப்பட்டிருந்த டெஸ்லா காரின் மீது மதுபாட்டில்களை வீசி எறிந்தும், கருப்பு பெயின்ட்களை அடித்தும் சேதப்படுத்தியுள்ளார். அந்த பெண்ணை போலீஸார் கைது செய்து அழைத்துச் சென்றனர். போராட்டக்காரர்கள் கூறுகையில் “ அமெரிக்க அரசை நடத்துவது அரசு அல்ல, அதிபர் ட்ரம்ப் மற்றும் டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் இருவர் மட்டும்தான்” என கடுமையாக விமர்சித்தனர். எலான் மஸ்கிற்கு எதிராக அமெரிக்காவில் போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில் மக்களின் கோபம், டெஸ்லா ஷோரூம்கள் பக்கம் திரும்பியுள்ளது.
இதையும் படிங்க: ‘டெஸ்லா கார்’ வாங்கலியா! இந்தியாவில் விற்பனை ஏப்ரலில் தொடக்கம்! விலை தெரியுமா?