பிறப்புக் குடியுரிமை ரத்து: அமெரிக்காவில் வாழும் இந்தியர்களை எந்த வகையில் பாதிக்கும்?
அமெரிக்காவின் 47-வது அதிபராக இன்று பதவி ஏற்றுள்ள டொனால்ட் ட்ரம்ப் பதவி ஏற்றவுடன் நிர்வாக ரீதியான பல்வேறு உத்தரவுகளைப் பிறப்பித்தார். அதில் முக்கியமானது, பிறப்புக் குடியுரிமையை ரத்து செய்யும் உத்தரவாகும்.
இந்த உத்தரவில் அதிபர் ட்ரம்ப் கையொப்பமிட்ட நிலையில், அமெரிக்க குடியுரிமை இல்லாத தம்பதிக்கு, அமெரிக்காவில் பிறக்கும் குழந்தைக்கு இயல்பாக கிடைக்கும் குடியுரிமை கிடைக்காது.
அமெரிக்காவில் பிறக்கும் எந்த நாட்டுக் குழந்தைக்கும் இப்போதுள்ள நிலையில் பிறப்புக் குடியுரிமை அடிப்படையில் இயல்பாக குடியுரிமை கிடைத்துவிடும். ஆனால், அதிபர் ட்ரம்ப் பிறப்பித்த உத்தரவின்படி, அமெரிக்காவில் பிறக்கும் குழந்தைக்கு அந்நாட்டுக் குடியுரிமை கிடைக்க வேண்டுமெனில் தாய் அல்லது தந்தை இருவரில் ஒருவர் அமெரிக்கராக இருக்க வேண்டும் அல்லது ஒருவர் சட்டப்பூர்வ குடியேறியாக, கீரின் கார்டு வைத்திருப்பவராக இருக்க வேண்டும், அல்லது அமெரிக்க ராணுவத்தில் பணியாற்ற வேண்டும்.
அமெரிக்காவில் சட்டவிரோதமாக வரும் புலம்பெயர்ந்தவர்கள், குடியேறிகளுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு இயல்பாகக் கிடைக்கும் குடியுரிமை இனிமேல் வழங்கப்படாது. பணி நிமித்தமாக ஹெச்1பி விசா, எல்1விசா போன்ற விசாக்களில் அமெரிக்காவுக்கு வந்து குழந்தைப் பெற்றுக்கொண்டாலும் அந்தக் குழந்தைக்கு இயல்பாகக் கிடைக்கும் அமெரிக்க குடியுரிமையும் இனிமேல் கிடைக்காது.
இது குறித்து அமெரிக்க அதிபரின் அதிகாரிகள் தரப்பில் கூறுகையில் “ சட்டவிரோதமாக அமெரிக்காவுக்குள் வந்து குழந்தை பெற்றுக் கொள்பவர்களுக்கும், அவர்களின் குழந்தைக்கும் இனிமேல் குடியுரிமை கிடைக்காது, அதை ட்ரம்ப் அரசு அங்கீகரிக்காது. சட்டவிரோதமாக அமெரிக்காவில் குடியிருப்பவர்களை இனிமேல் தேடி விசாரிக்க இருக்கிறோம்” எனத் தெரிவித்தனர்.
அதிபர் ட்ரம்ப் தனது பதவிஏற்பு விழாவில் பேசுகையில் கூட “ அமெரிக்காவுக்குள் வரும் சட்டவிரோத குடியேறிகள் அனைத்தும் தடுக்கப்படுவார்கள். எங்கிருந்து, எந்த நாட்டிலிருந்து வந்தார்களோ அந்த லட்சக்கணக்கானோர் மீண்டும் அதேநாட்டுக்குத் திருப்பி அனுப்பப்படுவார்கள் அதற்கான பணிகள் தொடங்கும்” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: நீ என்ன சொல்றது நான் என்ன கேக்குறது.. பருவநிலை மாற்ற ஒப்பந்தத்திற்கு டாடா காட்டிய ட்ரம்ப்..
பிறப்புக் குடியரிமை என்றால் என்ன..?
பிறப்புக் குடியுரிமை என்பது, எந்த தேசத்தைச் சேர்ந்த தம்பதிக்கும் அமெரிக்க மண்ணில் குழந்தை பிறந்தால் அந்த குழந்தைக்கு குடியுரிமை இயல்பாகவே வழங்கப்படும். பெற்றோருக்கும் அந்த அடிப்படையில் குடியேற்ற உரிமையும் தரப்படும். இந்த சட்டம் 1868ம் ஆண்டு இயற்றப்பட்டு, அமெரிக்காவில் பிறக்கும் அனைவருக்கும் குடியுரிமை என்று மாற்றப்பட்டது.
14-வது சட்டத்திருத்தத்தின்படி, “அமெரிக்காவில் பிறந்த அல்லது குடியுரிமை பெற்ற அனைத்து நபர்களும், அதன் அதிகார வரம்பிற்கு உட்பட்டவர்கள், அமெரிக்காவில் வசிக்கும் மாநில மக்களாவர்”
அதிபர் ட்ரம்ப் கையெழுத்திட்ட உத்தரவு என்ன..?
அதிபர் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்ட நிர்வாக உத்தரவின்படி, “ அமெரிக்காவில் பிறந்து அதன் அதிகார வரம்பிற்கு உட்படாதவர்கள், அமெரிக்க குடியுரிமை சலுகை அமெரிக்காவில் பிறந்த நபர்களுக்கு தானாகவே வழங்கப்படாது. (1) பிறக்கும் குழந்தையின் தாய் அமெரிக்காவில் சட்டவிரோதமாக இருந்தபோதும், தந்தை அந்த குழந்தை பிறப்பின் போது அமெரிக்க குடிமகனாகவோ அல்லது சட்டப்பூர்வ நிரந்தர குடியிருப்பாளராகவோ இல்லாமல் இருந்தால் குடியுரிமை கிடைக்காது.
(2) குழந்தை பிறப்பின் போது தாய் அமெரிக்காவில் தற்காலிகமானவராக இருந்தால், அதாவது (விசா மூலம் அமெரிக்காவிற்கு சுற்றுலாப் பயணியாக வருகை தருவது அல்லது கல்வி பயிலும் மாணவராக, வேலை நிமித்தம்) மற்றும் தந்தை அமெரிக்க குடிமகனாகவோ அல்லது கிரீன் கார்டு இல்லாதவராக இருந்தால் குழந்தைக்கு இயல்பான குடியுரிமை கிடைக்காது.
அதிபர் ட்ரம்புக்கு எழுந்த சிக்கல்..
பிறப்புக் குடியுரிமையை நீக்கி அதிபர் ட்ரம்ப் நிர்வாக உத்தரவில் கையொப்பமிட்டிருந்தாலும் அதை நடைமுறைப்படுத்துவதில் பல்வேறு சிக்கல்கள் இருக்கின்றன. இதற்கு அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும், நாடாளுமன்றத்தின் செனட் மற்றும் பிரதிநிதிகள் சபையில் மூன்றில் இரு பங்கு பெரும்பான்மை வாக்குகள் பெற வேண்டும். ஆனால், இது சாத்தியமானது அல்ல.
புதிய செனட் சபையில் ஜனநாயகக் கட்சியினருக்கு 47 இடங்களும், குடியரசுக் கட்சிக்கு 53 இடங்களும் உள்ளன. பிரதிநிதிகள் சபையில் ஜனநாயகக் கட்சியினர் 215 இடங்களையும், குடியரசுக் கட்சியினர் 220 இடங்களையும் வைத்துள்ளநிலையில் இந்த சட்டத்தை தீவிரமாக அமல்படுத்துவது, நிறைவேற்றுவது சாத்தியமல்ல.
வரலாற்றுரீதியாகப் பார்த்தால் 1898ம் ஆண்டு அமெரிக்க உச்ச நீதிமன்றத்தில் அமெரிக்க அரசுக்கும் வாங் கிம் ஆர்க் இடையே நடந்த வழக்கில், அமெரிக்காவில் பிறக்கும் குழந்தைக்கு இயல்பான குடியுரிமை என்பதை உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. அதாவது பெற்றோர் அமெரிக்கர்களாக இல்லாத நிலையில் ஒரு குழந்தை அமெரிக்க மண்ணில் பிறந்தால் இயல்பாக அமெரிக்க குடியுரிமை கிடைக்க வேண்டும் என தீர்ப்பளித்துள்ளது.
அரசியலமைப்புச் சட்டத்திருத்தம் செய்யாமல் இந்த உத்தரவுகளை அதிபர் ட்ரம்ப் மீற முடியாது, திருத்தம் செய்ய அதிபர்ட்ரம்ப் அரசுக்கு சூப்பர் மெஜாரிட்டி தேவை.
பிறப்புக் குடியுரிமை ரத்து உத்தரவில் அதிபர் ட்ரம்ப் கையொப்பமிட்ட சில மணிநேரத்தில் புலம்பெயர் மக்கள் உரிமையாளர்கள் அரசுக்கு எதிராக வழக்குத் தொடர்ந்துவிட்டனர்.
இந்தியர்களை பாதிக்குமா...!
அமெரிக்காவில் வளர்ந்துவரும் புலம்பெயர் மக்களில் இந்தியர்கள் வேகமாக அதிகரித்து வருகிறார்கள். 2024ம் ஆண்டு கணக்கின்படி அமெரிக்காவில் மட்டும் 54 லட்சம் இந்தியர்கள் வசிக்கிறார்கள். அமெரிக்க மக்கள் தொகையில் 1.47% பேரும், புலம்பெயர் மக்களில் மூன்றில் ஒருபகுதியும், அமெரிக்காவில் இருக்கும் இந்தியர்களில் 34 சதவீதம் பேர் அந்நாட்டில் பிறந்த இந்தியர்களாக இருக்கிறார்கள்.
அதிபர் ட்ரம்ப் உத்தரவால் கொள்கை ரீதியாக மாற்றங்கள் வந்தால், ஹெச்1பி, ஹெச்1, எல்1 விசாவில் அமெரிக்காவில் தங்கியிருக்கும் இந்தியர்களுக்கு பிறந்த குழந்தைகள், கிரீன் கார்டுக்காக காத்திருக்கும் இந்தியர்கள் ஆகியோருக்கு இயல்பாக குடியுரிமை கிடைக்காது. இந்த உத்தரவால் அமெரிக்காவில் வேலைக்காக வந்துள்ள இந்திய தம்பதிகளுக்கு அந்நாட்டில் பிறந்த குழந்தைகளுக்கு குடியுரிமை கிடைக்காமல் பாதிக்கப்படுவார்கள்.
இந்திய தம்பதிகளுக்கு அமெரிக்காவில் பிறக்கும் குழந்தைக்கு இயல்பாகக் கிடைக்கும் குடியுரிமை இனிமேல் கிடைக்காது. க்ரீன் கார்டுக்காக காத்திருக்கும் இந்தியர்களுக்கு பிறக்கும் குழந்தைகளும் குடியுரிமைக்காக காத்திருக்க வேண்டும்.
அமெரிக்காவில் குழந்தை பெற்றுக்கொண்டு குழந்தைக்கு குடியுரிமை கிடைக்க திட்டமிட்டு வரும் கர்ப்பிணிகள், இனிமேல் பிறக்கும் குழந்தைக்கு குடியுரிமை கிடைக்காது.
புலம்பெயர்ந்த இந்தியர்கள், பணிக்காக விசா மூலம் அமெரிக்காவில் பணியாற்றி வரும் இந்தியர்களுக்கு அந்நாட்டில் பிறந்த குழந்தைகள், பிறக்கும் குழந்தைகள் இனிமல் குடியுரிமை சிக்கலைச் சந்திப்பார்கள். கிரீன் கார்டுக்காக காத்திருப்போருக்கும் இனிமேல் எளிதாகக் குடியுரிமை கிடைக்காது.
அமெரிக்க குடியேற்ற கவுன்சில் கடந்த 2011ம் ஆண்டுஅளித்த அறிக்கையின்படி, “ அமெரிக்காவில் பிறப்புகுடியுரிமையை நீக்கிவிட்டால், அது ஒவ்வொருவரையும் பாதிக்கும். அமெரிக்க பெற்றோர்கள் தங்கள் குழந்தையின் குடியுரிமையை நிரூபிப்பது கடினமாகிவிடும். பிறப்புச் சான்றிதழ்தான் குடியுரிமைக்கான சான்று. பிறப்புக் குடியுரிமையே ரத்து செய்யப்பட்டால், அமெரிக்க குடிமக்கள் ஒருபோதும் தங்கள் பிறப்புச் சான்றிதழை குடியுரிமை சான்றாக பயன்படுத்த முடியாது” எனத் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: ஒரேயொரு விருந்து, ரூ.2000 கோடி வசூல்..