செயற்கை நுண்ணறிவுக்காக சிறப்புத் திட்டம்... பெண்களுக்காக ட்ரோன் திதி திட்டம்... நாடாளுமன்றக் கூட்டுக்கூட்டத்தில் குடியரசுத் தலைவர் உரை...
செயற்கை நுண்ணறிவு துறையின் வளர்ச்சிக்காக சிறப்புத் திட்டம் தொடங்கப்பட உள்ளதாக குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கூறியுள்ளார். நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சிப் பாதையில் சென்றுக் கொண்டிருப்பதாக அவர் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற கூட்டுக்குழு கூட்டத்தில் உரையாற்ற வந்த குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை, குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர், மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் வரவேற்றனர். செங்கோல் ஏந்தியபடி அவர் அவைக்குள் அழைத்துச் செல்லப்பட்டார்.
தேசியகீதம் இசைக்கப்பட திரௌபதி முர்மு தனது உரையைத் தொடங்கினார். நாட்டின் 76-வது குடியரசுத் தினத்தை சமீபத்தில் நிறைவு செய்துள்ள நிலையில், இந்திய அரசியலமைப்பு சாசனத்தை உருவாக்கிய அண்ணல் அம்பேத்கர் உள்ளிட்டோரை இத்தருணத்தில் வணங்குவதாக அவர் தெரிவித்தார். உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் கும்பமேளாவில் உயிரிழந்தோருக்கு அஞ்சலி என்றும், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கும் அஞ்சலி செலுத்துவதாக முர்மு குறிப்பிட்டார்.
25 கோடிக்கும் மேற்பட்ட மக்களை ஏழ்மையில் இருந்து மீட்டுள்ளதாகவும், பெண்கள் - குழந்தைகள் நலனுக்கு மத்திய அரசு முன்னுரிமை அளித்து வருவதாகவும் அவர் கூறினார். முன்எப்போதையும் விட நாட்டின் வளர்ச்சி மும்மடங்கு வேகத்தில் சென்று கொண்டிருப்பதாகவும், பிரதமரின் உழவர் உதவித்தொகை திட்டம் வேளாண்குடி மக்களின் வாழ்வில் மலர்ச்சியை ஏற்படுத்தி உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். விவசாயிகளின் மேம்பாட்டிற்காக 41 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதை முர்மு சுட்டிக்காட்டினார்.
இதையும் படிங்க: ஆங்… தொப்பி… தொப்பி… பதவியேற்பு விழாவில் ட்ரம்பின் முத்த ஏக்கம்… வெட்கப்பட்டுப்போன மனைவி..!
இந்தியாவை உலகளாவிய புத்தாக்க சக்தியாக மாற்றுவதே மத்திய அரசின் நோக்கம் என்று முர்மு பெருமிதம் தெரிவித்தார். இந்தியாவின் முதுகெலும்பாக சிறு, குறு தொழில்கள் உள்ளன என்றும் அவை வளர்ச்சி அடைந்துள்ளன என்றும் அவர் கூறினார். சிறுவியபாரிகளும் டிஜிட்டல் பரிவர்த்தனையில் பலன் அடைந்துள்ளது சமூக நீதியின் அம்சம் என்று முர்மு பாராட்டுத் தெரிவித்தார்.
ஜன் அஷ்வத் கேந்திரா திட்டத்தின் மூலம் 80 சதவித தள்ளுபடி விலையில் மருந்துகள் தரப்பட்டு வருகின்றன என்று அவர் சுட்டிக்காட்டினார். அதிக மெட்ரோ வழித்தடங்கள் உள்ள நாடாக இந்தியா மாறி உள்ளதாகவும்,
ஏழைகளின் கனவுகளை நனவாக்க மத்திய அரசு பாடுபட்டு வருவதாகவும் முர்மு நம்பிக்கை தெரிவித்தார்.
அனைத்துத்துறை வளர்ச்சியில் உலக நாடுகளுக்கு முன்னோடியாக இந்தியா திகழ்வதாக அவர் பாராட்டினார்.
சமீபத்தில் 100-வது ராக்கெட்டை ஏவிய இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு முர்மு பாராட்டு தெரிவித்தார். ஏஐ தொழில்நுட்பத்திலும் இந்தியா சாதனை படைக்கும் என்றும், நாட்டில் சமூகநீதி, சமத்துவத்தை நிலைநாட்ட டிஜிட்டல் தொழில்நட்பத்தை அரசு பயன்படுத்தி வருவதாகவும் அவர் கூறினார். 3 கோடி பெண்களை லட்சாதிபதியாக்கும் டிரோன் திதி திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் முர்மு கூறியபோது உறுப்பினர்கள் மேசையை தட்டி வரவேற்றனர்.
ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்தை செயல்படுத்துவதை அரசு முதன்மை நோக்கமாக கொண்டுள்ளதாகவும், வக்பு வாரிய சட்டத்திருத்தத்தை அமல்படுத்துவது உறுதி என்றும் முர்மு பேசினார். வினாத்தாள் கசிவுகளை தடுக்க புதிய சட்டங்களை அரசு கொண்டு வந்துள்ளதாக அவர் கூறினார். குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரை மீது 3 நாட்கள் விவாதம் நடைபெறும். நாளை பிப்ரவரி ஒன்றாம் தேதி மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய உள்ளார்.
இதையும் படிங்க: அமெரிக்க அதிபராகப் பதவியேற்றார் டொனால்ட் ட்ரம்ப்.. வாஷிங்டனில் கோலாகலம்!