ஜல்லிக்கட்டு போராட்டத்தில் பறிபோன இளைஞரின் பார்வை.. ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவு.!
சென்னை ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது பார்வை பறிபோன இளைஞருக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னையில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது ஏற்பட்ட வன்முறையில் கண்பார்வை பறிபோனவருக்கு ஐந்து லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்குமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை மெரினா கடற்கரையில் கடந்த 2017ம் ஆண்டு ஜனவரி மாதம் மிகப்பெரிய அளவில் ஜல்லிக்கட்டு போராட்டம் நடைபெற்றது. போரட்டத்தை போலீசார் கலைத்த போது வன்முறை ஏற்பட்டது. இதில் பலர் பாதிக்கப்பட்டனர்.
இந்த நிலையில், திருவல்லிக்கேணி ரோட்டரி நகரைச் சேர்ந்த விமலா என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள வழக்கில் ஜல்லிக்கட்டு போரட்டத்தின் போது ஏற்பட்ட வன்முறையில் காவல்துறை தாக்கியதில் தனது மகன் கார்த்திக்கின் இடது கண் பாதித்து பார்வை பறிபோனதாக தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: கல்லூரி பேராசிரியருக்கு பாலியல் தொல்லை.. கல்லூரி வளாகத்திலேயே பேராசிரியரை வெளுத்த மாணவர்கள்..!
இதுகுறித்து ஓய்வு பெற்ற நீதிபதி ராஜேஸ்வரன் ஆணையத்தில் புகார் அளித்தாகவும் குறிப்பிட்டுள்ள மனுதாரர், சம்பந்தபட்ட காவல்துறையினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றும், பார்வை பறிபோன தனது மகனுக்கு 50 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கவேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தார்.
இந்த வழக்கின் இறுதி விசாரணை நீதிபதி ஜிகே இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது.அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஆர்.திருமூர்த்தி காவல்துறையால் தாக்கப்பட்டதில் பார்வை பறிபோனதற்கான மருத்துவ ஆவணங்கள் உள்ளதாகவும், இழப்பீடு வழங்குவது அரசின் கடமை என்றும் வாதிட்டார்.
காவல்துறை தரப்பில் ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் கோபிநாத், போராட்டக்காரர்கள் வீசிய கற்களால் தான் கண் பார்வை பறிபோனதாக வாதிட்டார்.
இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி பார்வை பறிபோன இளைஞருக்கு 5 லட்சம் ரூபாய் இழப்பீட்டை 12 வாரங்களில் வழங்கவேண்டும் என்று தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: திமுக நிர்வாகி காரில் கடத்தி கொலை.. நில ஆக்கிரமிப்பை தட்டிக்கேட்டதால் விபரீதம்.. கள்ளக்காதலிக்காக கொலை செய்தது அம்பலம்..!