நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூட்டணி குறித்து அளித்துள்ள பேட்டி பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், உலகத்தின் 20 நாடுகள் ஒன்று திரண்டு நின்ற போது தன் நாட்டு மக்களை நம்பி படைதிரட்டி யுத்தம் செய்த தலைவன் பிரபாகரனின் பிள்ளைகள் நாங்கள். எனக்கு ஒரு தலைவன்; எனக்கு ஒரு தத்துவம்; எனக்கு ஒரு நோக்கம்; எனக்கு ஒரு கொள்கை; மொழி - இனத்தை முன்னிறுத்தும் அரசியல்; வேளாண்மையை முன்னிறுத்தும் தற்சார்பு பசுமை பொருளாதாரம் என இருக்கிறது. இந்த கோட்பாடுகள் சரியானவை என நினைத்து எங்களுடன் இணைந்து நிற்க வந்தால் யோசிப்போம்.

அதுவும் இந்திய- திராவிட கட்சிகளைத் தவிர்த்து யாராவது கூட்டணிக்கு வந்தால் யோசிக்கலாம். ஆனால் யாரும் வரமாட்டார்கள். கூட்டணி என்றால் சீட்டு, நோட்டு (பணம்) வேண்டும் என்பர். என்னிடம் இந்த இரண்டுமே இல்லை. ஆகையால் கூட்டணி குறித்து கேள்விகளை கேட்காமல் விட்டுவிடுங்கள். இந்த கேள்விகளுக்கு நானும் பலமுறை பதில் அளித்துவிட்டேன் என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: பாஜகவுக்கு சலிச்சது இல்ல திமுக..! மக்கள் பாவம் இல்லையா? வெடியை வீசிய சீமான்..!

கூட்டணி குறித்த அவரது பேட்டியில், இந்திய- திராவிட கட்சிகளைத் தவிர்த்த கட்சிகளுடன் கூட்டணிக்கு தயார் என்றார். அவர் கூறியபடி, தேசிய மற்றும் திராவிட கட்சி வரிசையில் இல்லாத கட்சி நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் தான். இதனால் சீமான், நடிகர் விஜய்-க்கு மறைமுகமாக கூட்டணிக்கு அழைப்பு விடுத்துள்ளாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஏற்கனவே இரு கட்சிகளும் தனித்து போட்டியிடுவதாக தெரிவித்துள்ள நிலையில் இவர்கள் இருவரும் கூட்டணி அமைப்பார்களா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. ஒருபுறம் சட்டமன்ற தேர்தலுக்கு தமிழக வெற்றி கழகம் ஆயுதமாகி வருகிறது. அதன் தலைவர் விஜயும் தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார். மறுபுறம் சீமானும் தற்போதே தேர்தலுக்கான வேலைகளை தொடங்கிவிட்டார். இந்த சூழலில் அவரின் இந்த பேட்டி அரசியல் களத்தில் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: கட்டிடத்துக்கு வெள்ளை அடிப்பவன் அல்ல; கட்டிடத்தையே இடித்து கட்டுகிறவன்... சீமான் ஆவேசம்!!