ஜெயலலிதா மரணத்திற்கு பின் கடந்த 2017 ஏப்ரல் 24ல் கோடநாட்டில் நடந்த கொள்ளை சம்பவத்தில் பல பொருட்கள் கொள்ளை அடிக்கப்பட்டதாக கூறப்பட்டது. இதுமட்டுமின்றி எஸ்டேட் காவலாளி ஓம்பகதூர் என்பவரும் கொள்ளையர்களால் கொல்லப்பட்டார். அதன்பின் கொள்ளையில் குற்றஞ்சாட்டப்பட்ட பலர் அடுத்தடுத்து மர்மமான முறையில் மரணம் அடைந்தனர். இந்த கோடநாடு மர்ம மரணங்கள் மற்றும் கொள்ளை பற்றி தமிழ்நாடு போலீஸ் 5 தனிப்படை அமைத்து விசாரித்து வந்தது.

இந்த சம்பவத்திற்கு பிறகு இந்த வழக்கில் முக்கிய நபரான ஜெயலலிதாவின் முன்னாள் கார் டிரைவர் கனகராஜ் விபத்து ஒன்றில் உயிரிழந்தார். இன்னொரு முக்கிய குற்றவாளி சயான் குடும்பத்தினர் விபத்தில் கொல்லப்பட்டனர். இதில் சயான் நூலிழையில் உயிர் தப்பினார். இதுதொடர்பான வழக்கில் சயான் நேரடியாக எடப்பாடி பழனிசாமி மீது குற்றஞ்சாட்டினார். எடப்பாடி பழனிச்சாமி சொல்லித்தான் கனகராஜ் இந்த திட்டங்களை தீட்டியதாக சயான் போலீசில் வாக்குமூலம் அளித்ததாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: கூட்டணி மட்டுமே.. கூட்டணி ஆட்சி இல்லை..! பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்த இபிஎஸ் பேட்டி..!

இது ஒருபுறம் இருக்க மறுபுறம் கோடநாடு வழக்கில் ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜின் சகோதரர் அளித்த பேட்டியில், எனது தம்பி உயிரிழந்தது விபத்து அல்ல; திட்டமிட்ட கொலை. எடப்பாடி பழனிசாமியை விசாரிக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் எடப்பாடி பழனிசாமி மீது புகார்கள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில் விசாரணையை தீவிரப்படுத்த திமுக முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

அதிமுக பாஜகவுடன் கூட்டணி வைத்ததால் தான் இந்த வழக்கு சூடுப்பிடிப்பதாக கூறப்படுகிறது. பாஜகவுடன் கூட்டணியில் இருக்கும் எடப்பாடி பழனிசாமியையும் வீழ்த்த திமுக இந்த முடிவு எடுத்துள்ளாதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது. இந்த வழக்கை தற்போது சிபிசிஐசி விசாரித்து வருகிறது.
முன்னதாக ஜெயலலிதாவின் வளர்ப்பு மகன் சுதாகரன், கோடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜன், சசிகலா, அதிமுக ஆட்சியில் அதிகார மையத்தோடு நெருக்கமாக இருந்த போலீஸ் அதிகாரிகள் பெருமாள் சாமி, ராஜா, வீரபெருமாள் ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டது. இந்த நிலையில், எடப்பாடி பழனிச்சாமியிடம் விசாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விரைவில் விசாரரிக்கப்படும் என போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: தமிழகத்தில் இ.கம்யூ. ஒரு நாள் ஆட்சி அமைக்கும்.. ஆசையை வெளிப்படுத்திய திமுக கூட்டணி கட்சி.!