சேலம் மாவட்டம் சிங்கிபுரம் கோயில் திருவிழாவை முன்னிட்டு ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படுவது வழக்கம். அதன்படி இன்று சிங்கிபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது.
இந்த ஜல்லிக்கட்டு போட்டியினை தமிழ்நாடு சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன், மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி ஆகியோர் கொடி அசைத்து துவக்கி வைத்தனர். இந்த போட்டியில் மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 600 காளைகள் மற்றும் 400 மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டனர்.

ஜல்லிக்கட்டுப் போட்டியில் பங்கேற்ற மாடுபிடி வீரர்கள் மற்றும் காளைகளுக்கு மருத்துவப் பரிசோதனை மேற்கொண்ட பின்னரே போட்டியில் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டது. மேலும் ஜல்லிக்கட்டு மைதானம் அருகே 108 அவசர சிகிச்சை வாகனம், காவல் துறை பாதுகாப்பு, பார்வையாளர்களுக்கான அடிப்படை வசதிகள் மாவட்ட நிர்வாகத்தால் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: களத்தை அதிரவிட்ட காளைகள்.. அடங்க மறுத்த காளைகளை மடக்கிப் பிடித்த மாடுபிடி வீரர்கள்..

அதே போல் சென்னை உயர் நீதிமன்ற வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்படுவதை உறுதி செய்யும் வகையில் ஜல்லிக்கட்டுப் போட்டி முழுவதும் வீடியோவாக பதிவு செய்யப்பட்டது. முன்னதாக ஜல்லிக்கட்டு போட்டியில் தமிழ்நாடு அரசு விதிமுறைகள் குறித்து பின்பற்ற வேண்டிய உறுதிமொழியினை மாவட்ட ஆட்சியர் வாசிக்க அதை தொடர்ந்து மாடுபிடி வீரர்கள் அனைவரும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். தொடர்ந்து போட்டியில் வெற்றி பெற்ற மாடுபிடி வீரர்கள் மற்றும் காளைகளுக்கு சிறப்பு பரிசு வழங்கப்பட்டது.
இதையும் படிங்க: முதலமைச்சர் பிறந்தநாளை ஒட்டி நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி.. காவு வாங்கிய காளை..