ஜப்பானின் வடகிழக்கு கடலோர நகரமான ஒஃபுனாடோவின் சில பகுதிகளை ஒரு பெரிய காட்டுத் தீ சூழ்ந்துள்ளது. இதனால் 80க்கும் அதிகமான வீடுகள் சேதமடைந்துள்ளன. இதுவரை 2600 ஹெக்டேர் அதாவது 6400 ஏக்கரில் காட்டுத்தீ பரவி உள்ளது. இது கிட்டத்தட்ட 50 ஆண்டுகளில் இல்லாத பேரழிவு என கணக்கிடப்பட்டுள்ளது. இதற்கு முன் ஜப்பானில் கடந்த 1975ம் ஆண்டு வடக்கு ஹொக்கைடோ தீவில் உள்ள குஷிரோ என்னும் பகுதியில் பயங்கர காட்டுத்தீ பரவியது அப்போது 2,700 ஹெக்டேர் காடுகள் எரிந்ததாக கணக்கிடப்பட்டுள்ளது. 1975க்கு பின் ஜப்பானில் காட்டுத்தீயின் எண்ணிக்கை பெருமளவு குறைந்தது. இதற்கு முன் கடந்த 2023 ஆம் ஆண்டில் அந்த நாட்டில் சுமார் 1,300 ஹெக்டேர் பரபபளவில் காட்டுத்தீ ஏற்பட்டன.

ஒஃபுனாடோவில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீ காரணமாக சுமார் 4,600 பேருக்கு வெளியேற்ற அதிகாரிகள் ஆலோசனைகளை வழங்கியுள்ளனர். இதுவரை கிட்டத்தட்ட 3,939 பேர் ஏற்கனவே பாதுகாப்பான தங்குமிடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. தீ விபத்தில் குறைந்தது 84 வீடுகள் சேதமடைந்துள்ளன. தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். கடந்த வியாழக்கிழமை ஒருவர் இறந்த நிலையில் மீட்கப்பட்டார். எனினும் அவர் இறப்பிற்கும் காட்டுத்தீக்கும் சம்பந்தம் உண்டா என அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். ஜப்பானில் பிப்ரவரி முதல் ஏப்ரல் வரை காற்று வறண்டு காற்று வீசும் என்பதால் காட்டுத்தீ அதிகமாக காணப்படும் என புவியியல் ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: திருப்பதியில் குழந்தையை கடத்திய பெண்..! ஒரே மணி நேரத்தில் சிசிடிவியை வைத்து அல்லேக்காக மடக்கிய போலீஸ்..!

தற்போது காட்டுத்தீ ஏற்பட்டுள்ள ஒஃபுனாடோவில் வழக்கமாக பிப்ரவரி மாதம் சராசரியாக 41 மில்லிமீட்டர் மழை பெய்யும். ஆனால் கடந்த பிப்ரவரி மாதம் ஒஃபுனாடோவில் பயங்கர வறட்சி நிலவுகிறது. கடந்த பிப்ரவரியில் ஒஃபுனாடோவில் வெறும் 2.5 மில்லிமீட்டர் மழை மட்டுமே பெய்தது. இதுவே இதுவரை பெய்த மிககுறைந்த அளவிலான மழை என அறியப்படுகிறது. இதற்கு முன் இதே ஒஃபுனாடோவில் 1967 ஆம் ஆண்டில் 4.4 மில்லிமீட்டராக குறைந்த அளவு மழைப்பொழிவு ஏற்பட்டது. இவ்வாறு குறைந்த அளவே மழைப்பொழிவு ஏற்பட்டுள்ளதும் தற்போது ஏற்பட்டுள்ள பேரழிவுக்கு காரணமாக கூறப்படுகிறது.

எனினும் ஒஃபுனாடோவில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயை அணைக்க 2,000க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் களமிறங்கி உள்ளனர். இராணுவ மற்றும் தீயணைப்புத் துறை ஹெலிகாப்டர்கள் வானில் பறந்தபடி, காட்டுத்தீயின் மேல் தண்ணீரை ஊற்றுகின்றன. ஆனால் பலத்த காற்று மற்றும் வறண்ட சூழ்நிலைகள் தீயைக் கட்டுப்படுத்துவதை கடினமாக்குகின்றன என ராணுவ வீரர்கள் தெரிவித்தனர்.
இப்பகுதியில் இரவு முழுவதும் பனிப்பொழிவு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதைத் தொடர்ந்து மழை பெய்யும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த மழை காட்டுத்தீயை கட்டுப்படுத்த உதவுமா என்று உறுதியாக தெரியவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: பத்ரிநாத் மலையில் பனிச்சரிவு.. 10 பேர் மீட்பு... சிக்கிய கட்டுமான ஊழியர்களின் நிலை என்ன..?