அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் கே.என்.ரவிச்சந்திரனை விசாரணைக்காக காரில் அழைத்துச் சென்றுள்ளனர் அமலாக்கத்துறை அதிகாரிகள்.
அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் கே.என்.ரவிச்சந்திரன். இவர் ‘ட்ரூ வேல்யூ ஹோம்ஸ்' (டிவிஹெச்) என்ற கட்டுமான நிறுவனத்தை நடத்தி வருகிறார். கோவையில் கடந்த 1997-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த நிறுவனம் மூலம் கோவை, சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களிலும் ஏராளமான அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டி விற்பனை செய்யப்பட்டுள்ளன.

இந்த நிறுவனம் மேற்கொண்ட பண பரிவர்த்தனைகளில் முறைகேடு நடந்திருப்பதாகவும், பல கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்யப்பட்டுள்ளதாகவும் புகார்கள் எழுந்தன. இதுதொடர்பாக வருமான வரித் துறை அதிகாரிகள் ஏற்கெனவே சோதனை நடத்தியுள்ளனர்.
இதையும் படிங்க: பல்லாயிரம் கோடி ரூபாய் கடனை அடைத்தது எப்படி? கே என் நேருவை சுற்றும் மர்மம்.. சுத்து போட்ட ED..!
இந்நிலையில், வருமான வரித் துறை அளித்த அறிக்கையின் அடிப்படையில், அமைச்சர் கே.என்.நேரு தொடர்புடைய இடங்களில் அமலாக்கத் துறையினர் நேற்று சோதனையில் ஈடுபட்டனர். திருச்சி தில்லைநகர் 5-வது குறுக்கு தெருவில் உள்ள அமைச்சர் கே.என்.நேருவின் வீட்டுக்கு, 5 கார்களில் 10-க்கும் மேற்பட்ட அமலாக்கத் துறை அதிகாரிகள் நேற்று காலை 6.45 மணி அளவில் வந்தனர். பாதுகாப்புக்கு துணை ராணுவ படையினருடன் உடன் வந்திருந்தனர்.

அமைச்சர் நேரு, அவரது மனைவி ஆகியோர் சென்னையிலும், அவரது மகனான பெரம்பலூர் எம்.பி. அருண் நேரு டெல்லியிலும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, பாரதி நகரில் வசிக்கும் நேருவின் மகள் ஹேமா, அவரது கணவர் ஆனந்த் ஆகியோரை அமலாக்கத் துறையினர் அழைத்து வந்து நேரு வீட்டில் சோதனையை தொடங்கினர். காரில் தயாராக எடுத்து வந்த பிரின்டர், சூட்கேஸ் உள்ளி்ட்டவற்றையும் அதிகாரிகள் உள்ளே கொண்டு சென்று, சோதனை மேற்கொண்டனர். இன்றும் சில இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை மேற்கொண்டனர்.
நேற்று கிட்டத்தட்ட 75 சதவிகிதம் சோதனை நிறைவடைந்து விட்டது. இன்னும் 25 சதவீதம் சோதனை இருப்பதாக அமலாக்க துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் சென்னை, ஆர்.ஏ.புரத்தில் பிஷப் கார்டன் பகுதியில் உள்ள ரவிச்சந்திரன் வீட்டில் இன்று இரண்டாவது நாளாக சோதனை நீடித்தது. இந்நிலையில் ரவிச்சந்திரனை விசாரணைக்காக அமலாக்கத்துறை அதிகாரிகள் அழைத்துச் சென்று இருக்கிறார்கள்.

சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் இருக்கக்கூடிய அமலாக்கத்துறை விசாரணைக்காக அதிகாரிகள் அழைத்துச் சென்று இருக்கிறார்கள். ஆனால் அமலாக்கத்துறை தரப்பிலிருந்து அதனை உறுதிப்படுத்தவில்லை. என்னென்ன கோணங்களில் விசாரணைக்காக அழைத்துச் சென்றிருக்கிறார்கள் என்கிற விவரமும் வெளியிடப்படவில்லை. ரவிச்சந்திரன் மீது சிபிஐ ஒரு வழக்கை பதிவு செய்திருந்தது. அந்த வழக்கை மையமாக வைத்து இந்த சோதனையை அமலாக்கத்துறை அதிகாரிகள் மேற்கொண்டனர்.

வங்கி மோசடி தொடர்பாக இந்த சோதனை நடத்தப்பட்டு வந்திருக்கிறது. 22 கோடி ரூபாய் வங்கி மோசடி நடைபெற்றதாக கூறப்படுகிறது. அதன் அடிப்படையில் சிபிஐ ஒரு வழக்கு பதிவு செய்திருந்தது. இந்த மோசடி தொடர்பாக இந்த குறிப்பிட்ட நிறுவனங்கள் ஈடுபட்டிருந்ததும் தெரியவந்துள்ளது. அதன் அடிப்படையிலேயே அமலாக்கத்தை சோதனை நடத்தி வந்தது. சட்ட விரோத பண பரிமாற்றம் நிகழ்ந்திருப்பதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் சந்தேகத்தில் இருந்தனர்.
அதன் அடிப்படையில் இன்று இரண்டாவது நாளாக சோதனை நீடித்தது. இந்த நிலையில் கே.என்.நேருவின் சகோதரர் ரவிச்சந்திரனை விசாரணைக்காக அமலாக்க துறையினர் அழைத்துச் சென்று இருக்கின்றனர்.
இதையும் படிங்க: விவசாய நிலத்தில் கான்கிரீட் ரோடு..! வெளிச்சம் போட்டு காட்டிய கே.என்.நேரு.. வந்து குவிந்த ED..!