மேற்கு வங்க மாநிலம் வடக்கு கொல்கத்தாவின் குமார்துலியில் உள்ள கங்கை நதிக்கரைக்கு 2 பெண்கள் டாக்சி மூலம் வந்துள்ளனர். அவர்கள் மிகப்பெரிய நீல நிற சூட்கேசுடன் நதிக்கரையில் இறங்கியதை அங்கிருந்த மக்கள் பார்த்துள்ளானர். நதிக்கரையில் நீராடாமலும், சந்தேகத்திற்கு இடமாக அங்கேயும், இங்கேயுமாக அந்த பெண்கள் சுற்றித்திரிந்தது அப்பகுதி மக்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதன் காரணமாக அவர்களை சுற்றி வளைத்த அப்பகுதி மக்கள் யார் நீங்கள்? எதற்காக இங்கு வந்துள்ளீர்கள்? சூட்கேசில் என்ன உள்ளது என அடுக்கடுக்காய் கேள்வி எழுப்பி உள்ளனர். இதனால் பதற்றமடைந்த பெண்கள் அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்றுள்ளனர். அவர்களை மடக்கி பிடித்த மக்கள் சூட்கேசை திறந்து காட்டும்படி கேட்டுள்ளனர்.

அப்போது, தாங்கள் செல்லமாய் வளர்த்த லேபர்டார் நாய் இறந்துவிட்டதாகவும், சூட்கேசில் அதன் உடல் எச்சங்கள் இருப்பதாகவும் அந்த பெண்கள் தெரிவித்துள்ளனர். நாய் எப்படி இத்தனை வெயிட்டாக இருக்கும். இந்த சூட்கேஸ் குறைந்தது 50 கிலோ அளவிலாவது இருக்கும்? நீங்கள் திறந்து காட்டுங்கள் என அப்பகுதி மக்கள் மிரட்ட துவங்கியுள்ளனர். மக்களின் கேள்விக்கு பதிலளிக்க முடியாமல் திணறிய பெண்கள், பின்னர் வேறு மாதிரி பேச துவங்கி உள்ளனர். சூட்கேசில் தற்கொலை செய்து கொண்ட தங்களது உறவினரின் உடல் பாகங்கள் இருப்பதாகவும், போலீஸ் கேஸுக்கு பயந்து அவரது உடலை இங்கு கொண்டு வந்து போட நினைத்ததாகவும் தெரிவித்துள்ளனர்
இதையும் படிங்க: கொல்கத்தா பெண் டாக்டர் பாலியல் பலாத்கார கொலை: குற்றவாளிக்கு தூக்கு தண்டனை விதிக்கப்படுமா? மேல் முறையீட்டு மனு விசாரணைக்கு ஏற்பு

விஷயம் பூதாகரமாவதை தெரிந்து கொண்ட அப்பகுதி மக்கள், போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலின் பேரில் அங்கு விரைந்த போலீசார், சூட்கேசை திறக்க சொல்லி ஆய்வு செய்தனர். அப்போது அதில் ரத்தம் தோய்ந்த பெட்சீட்டல் சுற்றப்பட்ட பெண்ணின் உடல் இருந்தது. இதையடுத்து 2 பெண்களையும் கைது செய்த போலீசார் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்துள்ளனர். அதில் பல திடுக்கிடும் உண்மைகள் தெரியவந்தன. போலீசாரின் விசாரணையில் இந்த 2 பெண்களும் ஃபால்குனி கோஷ் மற்றும் ஆர்த்தி கோஷ் என்பது தெரிந்தது. இருவரும் தாய், மகள் என்பதும் தெரிந்தது. குடும்ப பிரச்னை காரணமாக கணவரை பிரிந்த ஃபால்குனி கோஷ், கொல்கத்தா மத்யம்கிராமில் உள்ள தனது தாய் ஆர்த்தி கோஷ் வீட்டில் வந்து தங்கி உள்ளார்.

இந்நிலையில் கடந்த 11ம் தேதி ஃபால்குனியின் மாமியார் சுனிதா கோஷ், ஆர்த்தி கோஷின் வீட்டில் வந்து தங்கி உள்ளார். நேற்று முன்தினம் மாலை ஃபால்குனிக்கும் சுமிதாவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது ஃபால்குனி, சுமிதாவை சுவர் மீது தள்ளியுள்ளார். இதில் சுமிதா மயக்கமடைந்தார். மீண்டும் சுமிதா கண் விழித்ததும், அவர்களுக்குள் மீண்டும் சண்டை ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த ஃபால்குனி, செங்கல்லை வைத்து சுமிதாவின் முகம் மற்றும் கழுத்தில் சரமாரியாக தாக்கியுள்ளார். இதில், சுமிதா ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

அதன் பின்னர், ஃபால்குனி கோஷும், தாய் ஆர்த்தி கோஷும் இணைந்து சுமிதாவின் உடலை சூட்கேஸில் வைத்து கங்கை நதியில் அப்புறப்படுத்த திட்டமிட்டுள்ளனர். அதன்படி, அந்த உடலை சூட்கேஸில் அடைத்து, மத்யம்கிராமில் இருந்து பார்சலில் போட்டு காசிபாராவிற்கு அனுப்பி உள்ளனர். அங்கிருந்து ட்ரெயின் மூலம் குமார்துலிக்கு சடலத்தை கொண்டு வந்த அவர்கள், அங்கிருந்து டாக்சி பிடித்து கங்கை நதிக்கரைக்கு வந்தது தெரிந்தது. கங்கை நதியில் சடலத்தை அப்புறப்படுத்த முயன்றபோது தாயும் மகளும் கையும் களவுமாக போலீசில் சிக்கியுள்ளனர் என்பதும் தெரியவந்தது. இதனையடுத்து, சுமிதாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், தாயும் மகளையும் கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: ஞாயிற்றுக்கிழமை சிக்கன் வாங்கி கொடுத்தும், சமைக்காத மனைவி அடித்துக் கொலை: கணவர் கைது; பரிதவிக்கும் 3 குழந்தைகள்