கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 31ஆம் தேதி ஃபெஞ்சல் புயல் கரையை கடந்த போது வரலாறு காணாத மழை பெய்தது. இதில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஆயிரக்கணக்கான வீடுகளும், பல்லாயிரக்கணக்கான ஏக்கர் விளைநிலங்களும் வெள்ளத்தில் மூழ்கின. ஏராளமான பொதுமக்கள் பெரிதும் பாதிப்புக்குள்ளாகினர். குறிப்பாக அரசூர் அருகே உள்ள இருவேல்பட்டு கிராமத்தில் வெள்ளத்தில் வீடுகள் மூழ்கியதில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிக்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து இருவேல்பட்டு கிராமத்திற்கு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 1ஆம் தேதி திமுக அமைச்சர் பொன்முடி, அவரது மகன் கெளதமசிகாமணி ஆகியோர் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறுவதற்காக சென்றனர். அப்போது அங்குள்ள 18 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் தங்களுக்கு எந்தவித நிவாரண உதவிகளும் வழங்கப்படவில்லை என கூறி சாலை மறியலில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தச் சென்ற அமைச்சர் பொன்முடி மீதும், அவரது மகன் திமுக மாவட்ட செயலாளர் கௌதமசிகாமணி மீதும் அங்கிருந்த சிலர் சேற்றை வாரி அடித்தனர்.
இதையும் படிங்க: ஃபெஞ்சல் புயல் பாதிப்பு - ரூ.498.8 கோடி ஒதுக்கீடு!

இதனைத்தொடர்ந்து பொன்முடி, அவரது மகன் கெளதமசிகாமணி மற்றும் திமுகவினரை மக்களிடம் இருந்து பாதுகாப்பாக மீட்ட போலீசார் அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்திற்கு பின்னணியில் பாஜ பிரமுகர்கள் இருப்பதாக தகவல் பரவியது. இது தமிழக அரசியலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. எனினும் இதுகுறித்து பேசிய அமைச்சர் பொன்முடி, அரசியல் செய்வதற்காக எனக்குப் பின்புறம் சேற்றை வீசி அடித்துள்ளனர். இது குறித்து சமூகவலைதளத்தில் யார் பதிவிட்டாரோ அவரது கட்சியைச் சேர்ந்தவர்களே இந்தக் காரியத்தைச் செய்துள்ளனர். எனினும் நாங்கள் இதனைப் பெரிதுபடுத்தி அரசியலாக்க விரும்பவில்லை என தெரிவித்திருந்தார்.
எனினும், அமைச்சர் பொன்முடி மீது சேறு பூசப்பட்ட விவகாரம் தொடர்பாக பாஜ பெண் பிரமுகர் உள்பட 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இருவேல்பட்டு கிராமத்தை சேர்ந்த ராமர் என்ற ராமகிருஷ்ணன், பாஜ பெண் பிரமுகர் விஜயராணி ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அவர்களை கைதுசெய்யும் நடவடிக்கையிலும் ஈடுபட்டனர். இதனையறிந்ததும் ராமகிருஷ்ணன் மற்றும் விஜயராணி ஆகியோர் தலைமறைவானார்கள்.

தலைமறைவான இருவரையும் தீவிரமாக போலீசார் தேடி வந்த நிலையில் இரண்டரை மாதங்களுக்கு பிறக திமுக அமைச்சர் பொன்முடி மீது சேற்றை வீசிய வழக்கில் ராமகிருஷ்ணனை திருவெண்ணைநல்லூர் போலீசார் இன்று அதிகாலையில் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக இருந்து வரும் பாஜ நிர்வாகியான விஜயராணியை தொடர்ந்து போலீசார் தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: '1 மில்லியன் ட்வீட் அசிங்கத்துக்கு பழி தீர்க்க தெருவுல போய் கோலம்போடு...' குறுக்கே புகுந்த தவெக..!