திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமை சேர்ந்த கூலி தொழிலாளர்கள் கணேசன் - தமிழ்ப்ரியா தம்பதி. இவர்களின் 21 வயது மகள் பூஜா. இவர் திருவண்ணாமலை மாவட்டம் கஸ்தம்பாடி இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் உள்ள பெரியம்மா தமிழ்செல்வி என்பவரது வீட்டில் தங்கி இருந்து வந்தார்.
சிறுவயது முதலே பெரியம்மா வீட்டில் வளர்ந்து வந்த பூஜா திருவண்ணாமலையிலே பள்ளி படிப்பையும், டிப்ளோமா முடித்து விட்டு நகைக்கடை ஒன்றில் வேலை செய்து வந்துள்ளார். பெரியம்மா வீட்டில் தங்கி இருந்த பூஜா அதே முகாமை சேர்ந்த சரண்ராஜ் (வயது 19) என்ற இளைஞரை கடந்த 2ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார்.

இது தொடர்பாக பூஜா தமது வீட்டில் கூறிய போது தற்போது திருமணம் செய்து வைக்க முடியாது என பெற்றோர் மறுத்துள்ளனர். 2 ஆண்டுகள் கழித்து சரண்ராஜுடன் திருமணம் செய்து வைப்பதாகவும் பெற்றோர் கூறியுள்ளனர். இந்த நிலையில் தமது பெற்றோர் எதிர்ப்பை மீறி திருவண்ணாமலையில் பூஜா, சரண்ராஜை திருமணம் செய்துள்ளார்.
இது குறித்து தகவலறிந்த பூஜாவின் பெற்றோர் அவரை சமாதானம் செய்து அழைத்துள்ளனர். அப்போது பூஜா சரண்ராஜை பிரிந்து பெற்றோருடன் வர மறுப்பு தெரிவித்துள்ளார். ஒரு கட்டத்தில் அவர்களிடம் சமரசம் பேசி 2ஆண்டுகளுக்கு பிறகு திருமணம் நடத்தி வைப்பதாக கூறி பூஜா கழுத்தில் இருந்த தாலியை வலுக்கட்டாயமாக கழற்றி வீசி எரிந்தாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: வரும்முன் காப்பதும் இல்லை.. பட்டும் திருந்துவது இல்லை.. திமுக அரசை வெளுத்து கட்டிய பழனிசாமி..!

பின்னர் பூஜாவை கஸ்தம்பாடி முகாமில் உள்ள பெரியம்மா வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளனர். இதனால் மன உளைச்சலில் இருந்த பூஜா 12ஆம் தேதி நேற்று முன்தினம் நண்பகல் பெரியம்மா வீட்டில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்து உயிரை மாய்த்துக் கொள்ள முயற்சித்துள்ளார். பூஜாவின் அலறல் சத்தம் கேட்ட அவரது தாய் தமிழ்ப்ரியா உள்ளிட்டோர் பூஜாவை காப்பாற்ற முயற்சித்துள்ளனர். தமது மகளின் உடலில் பற்றிய தீயை அணைக்க பூஜாவை கட்டியணைத்த போது தாய் தமிழ்ப்ரியா உடலில் தீக்காயங்கள் ஏற்பட்டது.

இதில் பலத்த தீக்காயமடைந்த தாய், மகள் இருவரையும் மீட்ட உறவினர்கள் வேலூர் நாராயணி மருத்துவமனை, அடுக்கம்பாறை மருத்துவமனை, சி.எம்.சி மருத்துவமனைகளில் அனுமதித்து முதலுதவி சிகிச்சை அளித்தனர். பலத்த தீக்காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் பூஜாவும், சுமார் 40% தீக்காயங்களுடன் தாய் தமிழ்ப்ரியா இருவரும் மேல் சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்நிலையில் பூஜா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து திருவண்ணாமலை மாவட்டம் களம்பூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காதலித்து திருமணம் செய்தவரிடம் இருந்து பெற்றோர் பிரித்து அழைத்து வந்ததால் இளம்பெண் தீக்குளித்து உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தற்கொலை எதற்கும் தீர்வல்ல. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் வந்தாலோ, அதில் இருந்து விடுபடுவதற்கு தமிழக சுகாதார சேவை உதவி மையம் - 104, சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044-24640050 ஆகிய எண்களை அழைக்கலாம்.
இதையும் படிங்க: பறிபோன விவசாய தம்பதியின் உயிர்.. கொலையில் முடிந்த கோழி மேய்ச்சல் பிரச்சனை.. உறவினர் கைது..!