சென்னை பூந்தமல்லி அடுத்த கரையான்சாவடியை சேர்ந்தவர் மீனாட்சி. வயது 27. இவர் கிருஷ்ணகிரியை சேர்ந்த 34 வயதான சரவணன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 6 வயதில் ஜெயகாந்த் என்ற மகன் இருந்தார். மீனாட்சி குடும்பத்துடன் கிருஷ்ணகிரியில் வசித்து வந்துள்ளார். எனினும் திருமணம் ஆன சில மாதங்களிலேயே தம்பதி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.

இதன்காரணமாக இருவருக்கும் இடையில் அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டது. இந்நிலையில் கணவருடன் அடிக்கடி ஏற்பட்டு வந்த தகராறு காரணமாக அவரை பிரிந்து வாழ மீனாட்சி முடிவு செய்தார். கடந்த 2018 ஆம் ஆண்டு கணவரிடம் சண்டை போட்டு விட்டு தனது 6 வயது மகனுடன், சென்னை கரையான்சாவடியில் உள்ள தாய் வீட்டிற்கு வந்துள்ளார்.
இதையும் படிங்க: "கலி முத்திருச்சு.." அம்மாவுக்கு மாதம் ரூ.5 ஆயிரம்.. ரூ.50 ஆயிரம் அபராதம்; மகனுக்கு, ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு..!
அங்கு தாயுடன் வசிக்கும் போது, மீனாட்சிக்கு தனது சொந்த மகனே பாரமாக தெரிந்துள்ளார். 6 வயதில் தனக்கு ஒரு மகன் இருப்பது தனது கடந்த காலத்தை அடிக்கடி நினைவு படுத்தும் விதமாக அமைந்துள்ளதாகவும், மறுமணம் செய்ய தடையாக இருப்பதாகவும் மீனாட்சி நினைத்துள்ளார். இதனால் தனது மகனை கொலை செய்து விடவும் திட்டம் தீட்டி உள்ளார்.

அதன்படி ஒருநாள் பெற்ற மகன் என்றும் பாராமல், தனது 6 வயது மகன் ஜெயகாந்த்தை ஸ்குரூ டிரைவரால் அடித்து மயக்கமடைய செய்துள்ளார் மீனாட்சி. மயக்கமடைந்த சிறுவனின் முகத்தில் தலையனையால் அழுத்தி அவனை மூச்சடைக்க செய்து கொலை செய்துள்ளார். பின்னர் சிறுவனின் உடலை மண்ணெண்ணெய் ஊற்றி எரித்துள்ளார். ஆனால் மீனாட்சி எதிர்பார்த்தபடி உடல் உடனே எரிந்து முடிக்கவில்லை.

முழுவதுமாக உடல் எரியும் வரை பொறுமை இல்லாத மீனாட்சி, தனது மகனின் எரிந்த உடலை வீட்டின் அருகே இருந்த செப்டிக் டேங்க் கால்வாயில் வீசி உள்ளார். ஒன்றிரண்டு நாட்களில் கால்வாயில் இருந்து துர்நாற்றம் வீசத்துவங்கி உள்ளது. சந்தேகம் அடைந்த அக்கம், பக்கத்தில் உள்ளவர்கள் இது குறித்து பூந்தமல்லி போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கொலை செய்யப்பட்டு இறந்து கடந்த ஜெயகாந்த் உடலை மீட்டு உள்ளனர். பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டதில் அதே பகுதியை சேர்ந்த மீனாட்சியின் மகன் திடீரென மாயமானது தெரிந்தது.

இதையடுத்து மீனாட்சியிடம் போலீசார் விசாரித்துள்ளனர். முதலில் மறுத்த மீனாட்சி, பின்னர் மகனை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு பூந்தமல்லியில் உள்ள கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றம் 2ல் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி விஜயகுமார் இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கினார். இதில் மீனாட்சி தனது மகனை கொலை செய்த குற்றம் நிரூபிக்கப்பட்டதால் தாய் மீனாட்சிக்கு ஆயுள் தண்டனையும், ரூ.1000 அபராதமும், அபராதம் கட்ட தவறினால் மேலும் ஆறு மாதங்கள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என தீர்ப்பு வழங்கினார். இதையடுத்து போலீஸ் பாதுகாப்புடன் மீனாட்சி புழல் சிறைக்கு அழைத்து செல்லப்பட்டார்.
இதையும் படிங்க: "கலி முத்திருச்சு.." அம்மாவுக்கு மாதம் ரூ.5 ஆயிரம்.. ரூ.50 ஆயிரம் அபராதம்; மகனுக்கு, ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு..!