நாக்பூரில் நடந்த கலவரத்தின் போது, புனித குர்ஆன் வாசகங்கள் பொறிக்கப்பட்ட துணி எரிக்கப்பட்டதாக கூறப்படுவது தவறானது. இது வேண்டுமென்றே பரப்பப்பட்ட வதந்தி என்று மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ் சட்டப்பேரவையில் விளக்கம் அளித்தார்.

அவுரங்கபாத்தில் (சத்ரபதி சாம்பாஜி நகர்) உள்ள முகலாய மன்னர் அவுரங்கசீப் கல்லறையை மாநிலத்தை விட்டு வேறு இடத்துக்கு அப்புறப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி விஸ்வ இந்து பரிசத், பஜ்ரங் தளம் தொண்டர்கள் நாக்பூரில் கடந்த சில நாட்களுக்கு முன்பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தினர். அவுரங்கசீப் உருவபொம்மையையும் எரித்து எதிர்ப்பைத் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: மணிப்பூராக மாறும் நாக்பூர்.. எதிர்க்கட்சிகள் சாடல்..! வன்முறைக்கு காரணமே திரைப்படம்.. மகாராஷ்டிரா முதல்வர் புதிய விளக்கம்..!
இதையடுத்து, புனித குர்ஆன் நூலின் வாசகங்கள் பதிக்கப்பட்ட துணி எரிக்கப்பட்டதாக வதந்திகள் பரவவே, இருதரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. சாலையில் இருந்த வாகனங்கள் மீதும், போலீஸ் வாகனங்கள் மீதும் கற்கள் வீசப்பட்டன. வாகனங்கள் தீவைத்து கொளுத்தப்பட்டன. இந்த கலவரத்தில் ஏராளமான போலீஸார் காயமடைந்தனர், இது தொடர்பாக 84 பேர் இதுவரை கைது செய்யப்பட்டனர்.

இந்த கலவரம் தொடர்பாக மகாராஷ்டிரா சட்டப்பேரவையில் முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ் நேற்று விளக்கம் அளித்தார். அப்போது அவர் பேசியதாவது:
புனித குர்ஆன் நூலின் வாசகங்கள் பொறிக்கப்பட்ட துணியை எரித்துவிட்டதாக கூறப்பட்ட தகவல் தவறானது, அது வதந்திதான். அவ்வாறு எந்த செயலும் நடக்கவில்லை என்பது விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
திங்கள்கிழமை இரவு நடந்த கலவரத்தின்போது கலவரக்காரர்கள் பெண் போலீஸாரிடம் தவறாக நடந்துள்ளனர், பலாத்காரத்துக்கு முயன்றனர். பெட்ரோல் குண்டுகளையும், கற்களையும் போலீஸ் நிலையம் மீது எறிந்துள்ளனர் இதில் 33 போலீஸார் காயமடைந்துள்ளனர், 3 துணை காவல் ஆணையர்களும் காயமடைந்தனர்.

இந்த வன்முறை முன்கூட்டியே திட்டமிட்டு நடத்தப்பட்டு, அமைதியை குலைக்கும் நோக்கில், சமூக ஒற்றுமையை சீர்குலைக்கும் நோக்கில் அரங்கேற்றப்பட்டுள்ளது. கடந்த 2 நாட்களாக என்னவெல்லாம் நடந்ததோஅனைத்தும் சிலரால் திட்டமிடப்பட்ட சம்பவங்கள். எந்த சமூகத்தையும் நான் குறைகூறவில்லை. ஆனால், விசாரணையில் புனித குர்ஆன் நூலின் வாசகங்கள் அடங்கிய எந்த துணியும் எரிக்கப்படவில்லை என்பது தெரியவந்தது.
ஆனால், புனித நூலின் வாசகங்கள் அடங்கிய துணி எரிக்கப்பட்டதாக கலவரத்தில் வதந்திகள் பரப்பப்பட்டன. அனைத்து கோணத்திலும் போலீஸார் விசாரணை நடத்தியுள்ளனர், வீடியோக்களை பெரிதாக்கி பார்த்தும், போராட்டக்காரர்களை அடையாளப்படுத்தி வருகிறோம். யாரோசிலர் வேண்டுமென்ற வதந்திகளை கொண்ட செய்திகளை பரப்பி, பொதுஅமைதிக்கு குந்தகம் விளைவித்துள்ளனர்.

போலீஸார் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும், நாக்பூரில் போலீஸார் மீது தாக்குதல் நடத்தியவர்கள் சவக்குழியில் இருந்தாலும் தோண்டு எடுக்கப்படுவார்கள், ஒருவரையும் விட்டுவைக்கமாட்டோம்.
இப்போது நாக்பூர் அமைதியாக இருக்கிறது. அமைதிக்கு பெயர்பெற்றது நாக்பூர் நகரம். 1992க்குப்பின் இங்கு எந்தக் கலவரமும் நடக்கவில்லை.இந்த வன்முறை திட்டமிட்டு குறிப்பிட்ட சிலரால் நடத்தப்பட்டுள்ளது. அவுரங்கசீப்பின் உருவபொம்மை மட்டும்தான் எரிக்கப்பட்டுள்ளது. வதந்திகளை பரப்பி கலவரத்தை தூண்டிவிட்டர்கள் கடுமையாகத் தண்டிக்கப்படுவார்கள், பலரையும் கைது செய்து விசாரித்து வருகிறோம்” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: அவுரங்கசீப் சமாதியை இடிக்க கோரி போராட்டம்.. போர்க்களமான நாக்பூர்.. திரைப்படத்தால் எழுந்ததா சர்ச்சை..?