அதிமுக - பாஜக கூட்டணி.. கட்சி எம்.எல்.ஏ.க்களுக்கு தடபுடலாக விருந்து.. இபிஎஸ் உற்சாக முடிவு.!
தமிழகத்தில் அதிமுக - பாஜக இடையே கூட்டணி உருவாகிவிட்ட நிலையில் அதிமுக எம்எல்ஏக்களுக்கு வரும் ஏப்.23ஆம் தேதி சென்னையில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தடபுடலாக விருந்து அளிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழகத்தில் 2023ஆம் ஆண்டில் அதிமுக - பாஜக கூட்டணி உடைந்தது. 2024இல் நடைபெற்ற மக்களவைத் தேர்தலை தனித்தனியாக எதிர்கொண்ட இக்கட்சிகள் ஓரிடத்தைக்கூட வெல்ல முடியாமல் படுதோல்வியைச் சந்தித்தன. இரண்டு கட்சிகளும் பிரிந்து தனித்தனியாக அணிகள் அமைத்து போட்டியிட்டது வாக்குகள் சிதறி, திமுக கூட்டணிக்கு அனைத்து தொகுதிகளிலும் வெற்றியை எளிதாக்கியதாக அரசியல் அரங்கில் பேசப்பட்டது.
மேலும் தேர்தலில் 7 தொகுதிகளில் அதிமுகவைப் பின்னுக்குத் தள்ளி பாஜக கூட்டணி இரண்டாமிடம் பிடித்தது. என்றாலும் அதன் பிறகும் பாஜகவுடன் கூட்டணி இல்லை என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியும் அக்கட்சி நிர்வாகிகளும் திட்டவட்டமாக கூறி வந்தனர். திமுக கூட்டணி அப்படியே தொடரும் நிலையில் 2026 சட்டப்பேரவை தேர்தலில் அக்கூட்டணிதான் மீண்டும் வெற்றி பெறும் என கூறப்பட்டு வந்தது. இந்நிலையில் மார்ச் 25 அன்று யாரும் எதிர்பாராத வகையில், டெல்லி சென்ற அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து பேசிவிட்டு வந்தார்.
அதன் தொடர்ச்சியாக சென்னைக்கு வந்த உள் துறை அமைச்சர் அமித் ஷா, பழனிசாமியுடன் இணைந்து பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். 2026 தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் பழனிசாமி தலைமையில் கூட்டணி என அமித் ஷா அறிவித்தார். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக தேர்தலில் வெற்றி பெற முடியாமல் தவித்து வருகிறது. இதனால், எடப்பாடி பழனிசாமி விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறார்.
தொடர் தோல்வி, ஒற்றைத் தலைமை சர்ச்சை, உட்கட்சி பிரச்சினை, வழக்கு என கட்சித் தலைமை தள்ளாடி வருவதால் அதிமுகவினருக்கு மகிழ்ச்சி, கொண்டாட்டம், விருந்து என உற்சாகம் இன்றி சோர்ந்திருப்பதாக கூறப்படுகிறது. மேலும் சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத் தொடர் ஏப்.29இல் முடிய உள்ளது. கடந்த 4 ஆண்டுகளைவிட இந்த பட்ஜெட் கூட்டத் தொடரில்தான் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் பல பிரச்சினைகளை எழுப்பி கவனம் ஈர்த்தனர். இந்நிலையில் அந்தச் சூட்டோடு அதிமுக எம்எல்ஏக்களை உற்சாகப்படுத்தும் விதமாக, அவர்களுக்கு ஏப். 23இல் சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள தனது இல்லத்தில் பழனிசாமி விருந்து அளிக்க திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது அதிமுக எம்எல்ஏக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: பாலுக்கு பூனை காவலா? அதிமுக - பாஜக கூட்டணியை விளாசிய அன்பில் மகேஷ்!
பாஜகவுடன் கூட்டணி தொடர்பான எதிர்க்கருத்துகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாகவும் இந்த விருந்தை பழனிசாமி அளிக்க இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் அதிமுக - பாஜக கூட்டணி ஏன் மீண்டும் உருவானது என்பது பற்றி கட்சி நிர்வாகிகளுக்கு விளக்கும் வகையில், மே 2இல் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் செயற்குழு கூட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. அக்கூட்டத்திலும் செயற்குழு உறுப்பினர்களுக்கு தடபுடலாக விருந்தளிக்க எடப்பாடி பழனிச்சாமி முடிவு செய்திருப்பதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிங்க: பொன்முடிக்கு எதிரான போராட்டம்; அதிமுகவினர் போலீஸ் இடையே தள்ளுமுள்ளு!