பஹல்காம் தீவிரவாதிகள் தாக்குதல்.. உயிரிழந்த கேரள மாநிலத்தவர் உடல் கொச்சினுக்கு வருகிறது..!
காஷ்மீர் பஹல்காம் தீவிரவாதிகள் தாக்குதலில் கொல்லப்பட்ட கேரள மாநிலத்தைச் சேர்ந்தவரின் உடல் இன்று இரவு கொச்சின் நகருக்கு விமானம் மூலம் கொண்டு வரப்படுகிறது.
ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்கா சுற்றுலாத் தளத்தில் நேற்று ஏராளமான சுற்றுலாப்பயணிகள் கூடியிருந்தபோது, தீவிரவாதிகள் திடீரென பயணிகள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினர்.
இந்தத் தாக்குதலில் இரு வெளிநாட்டவர், என்ஆர்ஐக்கள் உள்பட 26 பேர் கொல்லப்பட்டனர். 2019ம் ஆண்டு புல்வாமா தாக்குதலுக்குப்பின் தீவிரவாதிகள் நடத்திய மிகப்பெரிய தாக்குதலாக இது கருதப்படுகிறது. இந்தத் தாக்குதலில் கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் எடப்பள்ளி நகரைச் சேர்ந்த என்.ராமச்சந்திரன் (65) கொல்லப்பட்டார். இவரின் உடல் உடற்கூறு பரிசோதனை முடிந்து இன்று இரவு ஏர் இந்தியா விமானம் ஏஐ 1828/ஏஐ503 என்ற எண் கொண்ட விமானத்தில் கொச்சினுக்கு கொண்டு வரப்படுகிறது.
இதையும் படிங்க: காஷ்மீர் தாக்குதலில் தமிழர்களின் நிலை? நொடிக்கு நொடி பகீர்.. லைவ் அட்டேட்..!
ஸ்ரீநகரில் இருந்து காலை 11.30 மணிக்கு புறப்படும் விமானம், டெல்லிக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு தலைவர்கள் அஞ்சலி முடிந்தபின், கொச்சினுக்கு இன்று இரவு 8 மணிக்கு கொண்டு வரப்படுகிறது என அதிகாரிகள் தெரிவித்தனர்.
கொச்சி மாநகராட்சியின் தேவன்குளங்கரா கவுன்சிலர் சாந்தா விஜயன் கூறுகையில் “பலியானவர்களின் குடும்பத்தினரின் பெயர் விவரங்கள் இன்று இரவு விமானநிலையத்தில் விமானம் வந்தவுடன் கிடைக்கும். ராமச்சந்திரன் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, நாளை (வியாழக்கிழமை) அடக்கம் செய்யப்படும்” எனத் தெரிவித்தார்.
ராமச்சந்திரனுக்கு ஷீலா என்ற மனைவி உள்ளார். இவர்கள் இருவரும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் அபுதாபியிலிருந்து எடப்பள்ளிக்கு வந்து குடிவந்தனர். இவர்களின் மகள் ஆர்த்தி அவரின் இரு குழந்தைகள், ஹைதராபாத்திலிருந்து காஷ்மீருக்கு விரைந்துள்ளனர்.
திருபுனித்துராவில் உள்ள ராமச்சந்திரன் சகோதரி மீன் மேனனுக்கும் ஆர்த்தி தகவல் அளித்துள்ளார். “தன் கண்முன்னே தந்தையை தீவிரவாதிகள் கொலை செய்ததாகவும், தன்னுடைய இரு குழந்தைகளும் தாக்குதலில் இருந்து தப்பித்ததாகவும்” மீனாவிடம், ஆர்த்தி தெரிவித்தார். ராமச்சந்திரன் மனைவி ஷீலா மலைப்பகுதியில் ஏறமுடியாது என்பதால், காரிலேயே இருந்துள்ளார், இதனால் தீவிரவாதிகள் தாக்குதல் நடந்தபோது அந்த இடத்தில் ஷீலா இல்லை.
ராமச்சந்திரன் கொல்லப்பட்டது குறித்து அவரின் சகோதரிக்கு தகவல் அளிக்க பலமுறை ஆர்த்தி தொடர்பு கொண்டும் முடியவில்லை. இதையடுத்து,பெங்களருவில் உள்ள ஆர்த்தியின் சகோதரர் காஷ்மீருக்கு புறப்பட இருந்தநிலையில் விமானம் பிரச்சினையில் பயணம் ரத்தானது.
இதையும் படிங்க: ‘டிஜிட்டல் கல்வியறிவில்’ கேரளா மாநிலம் முதலிடம்.. இலக்கை எட்டி சாதனை..!