"வெறும் வாய்க்கு அவல் கொடுக்காதீங்க" - பிடிஆருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அட்வைஸ்..!
அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவார்ந்த வலிமையான வாதங்களை வைப்பவர். நான் அவருக்கு கூற விரும்புவது இந்த சொல்லாற்றல் பலமாக இருக்க வேண்டுமே தவிர பலவீனமாக மாறிவிடக்கூடாது என்று முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுரை வழங்கியுள்ளார்.
நீதிக்கட்சியின் தலைவராக இருந்தவரும், பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜனின் தாத்தாவுமான பி.டி.ராஜனின் ‘வாழ்வே வரலாறு’ நூல் வெளியீட்டு விழா சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு நூலை வெளியிட்டு பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவார்ந்த வலிமையான வாதங்களை வைப்பவர்.
இந்த சொல்லாற்றல் அவருக்கு பலமானதாக இருக்குமே தவிர பலவீனமாக ஆகிவிடக்கூடாது. அவருக்கே தெரியும். நம்முடைய எதிரிகள் வெறும் வாயை மெல்லக்கூடிய ஆற்றல் பெற்றவர்கள். அவங்களுக்கு சொல் அல்ல அது, ஆவலாக ஆகிவிடக்கூடாது. என் சொல்லை தட்டாத பிடிஆர் என்னுடைய அறிவுரையும் அர்த்தத்தையும் ஆழத்தையும் நிச்சயம் புரிந்து கொள்வார் என நம்புகிறேன்” என பிடிஆருக்கு அட்வைஸ் வழங்கினார்.
தொடர்ந்து வாரிசு குறித்து பேசிய அவர், “பி.டி.ராஜனுக்கு நம்முடைய அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மட்டும் வாரிசு அல்ல, நானும் வாரிசுதான். திராவிட வாரிசுகள். இங்கே இருப்பவர்கள் எல்லோரும் திராவிட வாரிசுகள். வாரிசு என்ற சொல்லைக் கேட்டாலே சிலருக்கு எரிகிறது. பற்றிக்கொண்டு எரிகிறது. அப்படி எரியட்டும் என்று தான் நாம் திரும்ப திரும்ப சொல்லிக் கொண்டிருக்கிறோம்” என்றார்.
இதையும் படிங்க: “எனக்கு அதிகாரமே இல்ல” - பேரவையிலேயே புலம்பிய அமைச்சர் பிடிஆர்!
கடந்த வாரம் சட்டப்பேரவையில் நடைபெற்ற மானியக்கோரிக்கை மீது உரையாற்றிய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், “என்னுடைய துறையில் இருக்கிற சிக்கல்களை கூறி இருக்கிறேன். நிதியும் மிகவும் குறைவாக ஒதுக்கப்படுகிறது. மற்ற மாநிலங்கள் போல் எல்லா தொழில்நுட்ப பூங்காக்களும் எங்கள் துறையில் செயல்படுவதில்லை. ஒரு சிலது மட்டுமே செயல்படுகிறது.
பாக்கி டைடல், நியோ டைடல் எல்லாம் தொழில் துறையில் செயல்பட்டு வருகிறது. அது அசாதாரணமான சூழ்நிலையாக இருந்தாலும். அதுதான் 20 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் நடந்து கொண்டிருக்கிறது. எனவே யாரிடம் நிதியும் திறனும் அதிகாரமும் இருக்கோ அவரிடம் கேட்டால் அவர் செய்து கொடுப்பார் என்று நான் கருதுகிறேன். எங்களிடம் அது இல்லை” எனக்கூறியிருந்தார்.
இதனால் பிடிஆர் திமுக அமைச்சரவை மீதான தனது அதிருப்தியை வெளிப்படுத்தியிருப்பதாக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு கிளம்பியது. இந்நிலையில் பிடிஆர் பழனிவேல் தியாகரானுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரடியாக அட்வைஸ் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: திமுக அரசின் மீது அமைச்சர்களுக்கே அதிருப்தி.. வானதி சீனிவாசன் பரபரப்புக் குற்றச்சாட்டு.!!