“எனக்கு அதிகாரமே இல்ல” - பேரவையிலேயே புலம்பிய அமைச்சர் பிடிஆர்!
யாரிடம் நிதியும் திறனும் அதிகாரமும் இருக்கோ அவரிடம் கேட்டால் அவர் செய்து கொடுப்பார் என்று நான் கருதுகிறேன், எங்களிடம் இல்லை என சட்டப்பேரவையில் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. துறை வாரியான மானியக் கோரிக்கை மீதான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. தமிழ்நாடு சட்டப்பேரவை 3 நாட்கள் விடுமுறைக்குப் பிறகு இன்று மீண்டும் கூடியது. வினா விடைகள் நேரத்தில் சட்டமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதில் அளித்தனர்.
இன்று கூடலூர் சட்டமன்ற உறுப்பினர் பொன். ஜெயசீலன், “எனது கூடலூர் சட்டமன்ற தொகுதியில் வேலை வாய்ப்பினை உருவாக்கி தருவதற்கான எந்த நிறுவனங்களும் இல்லை. அதற்கு அருகிலேயே இரண்டு மணி நேரத்தில் மைசூர் மற்றும் 4 மணி நேரத்தில் பெங்களூர் சென்றடைய முடியும் என்பதால் அங்கு இருக்கக்கூடியவர்கள் வந்து வேலை செய்யக்கூடிய அளவிலும், எனது தொகுதி இளைஞர்கள் வேலை வாய்ப்பு பெறும் வகையிலும் எனது கூடலூர் சட்டமன்ற தொகுதியில் ஒரு சிறு தகவல் தொழில் நுட்ப பூங்காவினை அமைத்து தருவதற்கு அரசு முன்வருமா? என கேள்வி எழுப்பினார்.
இதையும் படிங்க: அடுத்த பிரதமர் வேட்பாளர் ‘யோகி ஆதித்யநாத்’.. அகிலேஷ் யாதவ் பரபரப்பு பேச்சு..!
அதற்கு பதிலளித்து பேசிய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், “இந்த அவையில் நான் என்னுடைய துறையில் இருக்கிற
சிக்கல்களை கூறி இருக்கிறேன். நிதியும் மிகவும் குறைவாக ஒதுக்கப்படுகிறது. மற்ற மாநிலங்கள் போல் எல்லா தொழில்நுட்ப பூங்காக்களும் எங்கள் துறையில் செயல்படுவதில்லை. ஒரு சிலது மட்டுமே செயல்படுகிறது. பாக்கி டைடல், நியோ டைடல் எல்லாம் தொழில் துறையில் செயல்பட்டு வருகிறது. அது அசாதாரணமான சூழ்நிலையாக இருந்தாலும். அதுதான் 20 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் நடந்து கொண்டிருக்கிறது. எனவே யாரிடம் நிதியும் திறனும் அதிகாரமும் இருக்கோ அவரிடம் கேட்டால் அவர் செய்து கொடுப்பார் என்று நான் கருதுகிறேன். எங்களிடம் அது இல்லை” எனக்கூறினார்.
உடனடியாக குறுக்கிட்ட பேரவைத் தலைவர் அப்பாவு, அமைச்சர் இதெல்லாம் நீங்க உள்ளுக்குள்ள பேசி, முதலமைச்சரிடம் பேசி முடிவெடுக்க வேண்டியது. உறுப்பினருக்கு பாசிட்டிவாக பதில் சொன்னால் நன்றாக இருக்கும் என்றார். பிடிஆரின் இந்த பேச்சு அரசியல் வட்டாரத்தில் சலசலப்பைக் கிளப்பியுள்ளது.
இதையும் படிங்க: ‘தேர்தல் ஆணையமே சமரசம் செய்து கொண்டது, ‘சிஸ்டத்திலேயே’ தவறு இருக்கிறது’.. ராகுல் காந்தி குற்றச்சாட்டு..!