ஆயுதங்கள், குவாட், ட்ரம்ப் நட்பு... அமெரிக்கா செல்லும் பிரதமர் மோடி..!
பிரதமர் மோடி பிப்ரவரி மாதம் வாஷிங்டன் டிசிக்கு சென்று தனது முதல் நேருக்கு நேர் சந்திப்பை நடத்துவார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், பிரதமர் நரேந்திர மோடியுடனான பேச்சுவார்த்தையில், இந்தியாவில் அமெரிக்க பாதுகாப்பு உபகரணங்கள் வாங்குவதை அதிகரிப்பதன் முக்கியத்துவத்தையும், "நியாயமான இருதரப்பு வர்த்தக உறவுகளையும்" வலியுறுத்தியுள்ளார். இரு தலைவர்களும் தொலைபேசியில் பேசினர்.அப்போது இரண்டாவது முறையாக பதவியேற்றுள்ள டொனால்ட் டிரம்ப்புக்கு பிரதமர் நரேந்திர மோடியும் வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்த உரையாடலின் போது,பிரதமர் மோடியின் வெள்ளை மாளிகைக்கு செல்லும் திட்டம் குறித்தும் இரு தலைவர்களும் பேசினர்.ராய்ட்டர்ஸ் செய்தியின்படி, பிப்ரவரியில் எப்போது வேண்டுமானாலும் பிரதமர் மோடி வெள்ளை மாளிகைக்கு வரலாம் என்று டிரம்ப் செய்தியாளர்களிடம் கூறினார். புலம்பெயர்ந்தோர் தொடர்பாக பிரதமர் மோடியுடன் கலந்துரையாடியதாகவும் அவர் கூறினார்.
இந்திய பிரதமர் மோடியும், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பும் குவாட் குறித்து விவாதித்ததாக வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நமது நாடுகளுக்கிடையேயான நட்புறவு மற்றும் உறவுகளின் வலிமையை அடிக்கோடிட்டுக் காட்டும் வகையில், பிரதமர் மோடியின் வெள்ளை மாளிகைக்கு வருகை தரும் திட்டங்களை தலைவர்கள் விவாதித்தனர். இரு தலைவர்களும் அமெரிக்க-இந்தியா கூட்டாண்மை, இந்தோ-பசிபிக் குவாட் கூட்டாண்மையை முன்னேற்றுவதற்கான தங்கள் உறுதிப்பாட்டை வலியுறுத்தினர். இந்த ஆண்டு இறுதியில் குவாட் தலைவர்கள் சந்திப்பை இந்தியா முதல் முறையாக நடத்துகிறது.
இதையும் படிங்க: தென் சீனக் கடலில் டிராகனின் மிரட்டல்… அமெரிக்காவுடன்- இந்தியா சேர்ந்து செய்த சம்பவம்… திகைத்துப் போன சீனா..!
பாரிஸில் நடைபெறும் செயற்கை நுண்ணறிவு உச்சி மாநாட்டில் அமெரிக்க அதிபர் கலந்து கொண்டால், பிப்ரவரி நடுப்பகுதியில் இரு தலைவர்களும் சந்திக்கலாம். இது தவிர, பிரதமர் மோடி பிப்ரவரி மாதம் வாஷிங்டன் டிசிக்கு சென்று தனது முதல் நேருக்கு நேர் சந்திப்பை நடத்துவார். சந்திப்பின் தேதிகள் இன்னும் முடிவு செய்யப்படவில்லை. ட்ரம்ப் நிர்வாகத்துடன் மேற்கொண்டு விவாதித்த பிறகு முடிவு எடுக்கப்படும்.
சமூக ஊடக தளமான எக்ஸ் தளத்தில் பிரதமர் நரேந்திர மோடி, 'எனது அன்பு நண்பர் அதிபர் டொனால்ட் டிரம்புடன் பேசியது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. அவரது வரலாற்று சிறப்புமிக்க இரண்டாவது பதவிக்கு அவரை வாழ்த்தினேன்.பரஸ்பர நன்மை, நம்பகமான கூட்டாண்மைக்கு நாங்கள் உறுதிபூண்டுள்ளோம். நமது மக்களின் நலனுக்காகவும், உலக அமைதி, செழிப்பு, பாதுகாப்பிற்காகவும் இணைந்து செயல்படுவோம்'' என்று பிரதமர் மோடி கூறினார்.
இதையும் படிங்க: தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடு; இருவர் காயம் - நடுக்கடலில் இலங்கை கடற்படை அட்டூழியம்!