காஷ்மீர் மக்களின் ஹீரோ.. பயங்கரவாதிகளுடன் சண்டையிட்ட குதிரைக்காரர்.. உயிரை கொடுத்து போராட்டம்..!
காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தும் போது, குதிரைக்காரர் ஒருவர் அவர்களின் துப்பாக்கியை பிடுங்கி பயங்கரவாதிகளுடன் சண்டையிட்ட சம்பவம் மக்கள் மனதில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் சுற்றுலா தளத்தில் நேற்று பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் 26 பேர் கொல்லப்பட்டனர். பத்துக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். உடனடியாக பஹல்காமில் ராணுவம் குவிக்கப்பட்டு, காயமடைந்தோர் பத்திரமாக மீட்கப்பட்டனர். பிற சுற்றுலா பயணிகளும் உடனடியாக ஸ்ரீநகருக்கு அழைத்து வரப்பட்டனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
உலக தலைவர்கள் உள்பட பலரும் தாக்குதல் சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். பிரதமர் மோடி சவுதி பயணத்தை பாதியில் முடித்துக் கொண்டு நாடு திரும்பினார். மத்திய அமைச்சர் அமித்ஷா ஜம்மு-காஷ்மீர் சென்று இறந்தவர்களின் உடல்களுக்கு அஞ்சலி செலுத்தினார். பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கும் ஆறுதல் சொன்னார்.
பல்வேறு நாடுகளை சேர்ந்த தலைவர்கள் பயங்கரவாத சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். சவுதியில் இருந்து அவசரமாக நாடு திரும்பிய மோடி, டில்லியில், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருடன் ஆலோசனை நடத்தினார். பஹல்காம் சென்ற அமித் ஷா, பயங்கரவாத தாக்குதல் நடந்த இடத்தை நேரில் பார்வையிட்டு, அங்கு மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு அம்சங்களை நேரில் ஆய்வு செய்தார்.
ஜம்மு-காஷ்மீர் முழுவதும் ராணுவத்தினர் தீவிரவாதிகளைத் தேடும் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். தாக்குதலில் பலியானோர் குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்குவதாக ஜம்மு - காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா அறிவித்துள்ளார்.
இதையும் படிங்க: காஷ்மீர் தாக்குதலில் தமிழர்களின் நிலை? நொடிக்கு நொடி பகீர்.. லைவ் அட்டேட்..!
இந்த நிலையில் நேற்று இந்த தாக்குதல் சம்பவம் நடந்தபோது சுற்றுலா பயணிகளை காப்பாற்ற குதிரைக்காரர் ஒருவர் பயங்கரவாதிகளுடன் சண்டையிட்டு உயிர் இழந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. சுற்றுலா பயணிகளுக்காக குதிரை சவாரி நடத்தும் சையத் அடில் ஹூசைன் ஷா என்பவர் ஒரு தீவிரவாதியிடம் சண்டையிட்டார்.
அவரிடம் இருந்து துப்பாக்கியை பறிக்க முயன்றார். அப்போது அந்த தீவிரவாதி ஷாவை சுட்டுக்கொன்றார். சுற்றுலா பயணிகளில் இந்துக்களை மட்டும் குறிவைத்து தீவிரவாதிகள் துப்பாக்கி தாக்குதல் நடத்தினர். அதை தட்டிக் கேட்டு துப்பாக்கியைப பறிக்க முயன்ற பஹல்காம் பகுதியைச் சேர்ந்த குதிரை சவாரி நடத்துநரும் கொல்லப்பட்டிருப்பது இப்போது தெரியவந்திருக்கிறது.
கொல்லப்பட்ட ஷாவின் குடும்பத்தினர் தகவல் அறிந்து அழுது புலம்பினர். என் மகன் நேற்று வேலைக்கு சென்றான். மதியம் 3 மணி அளவில் தாக்குதல் பற்றிக் கேள்விப்பட்டோம். நாங்கள் ஷாவுக்கு போன் செய்தோம். ஆனால் போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. மாலை 4.40 மணிக்கு மீண்டும் போன் செய்தோம். அப்போது போன் இயங்கியது. ஆனால், யாரும் எடுத்துப் பேசவில்லை.
இதனால் போலீஸ் நிலையம் சென்றோம். அப்போதுதான் என் மகன் துப்பாக்கிச்சூட்டில் சிக்கியது தெரியவந்தது. இதற்கு யார் காரணமாக இருந்தாலும் அவர்கள் விளைவுகளைச் சந்தித்தே தீர வேண்டும் என கொல்லப்பட்ட ஷாவின் தந்தை சையத் ஹைதர் ஷா (Syed Haider Shah) கூறினார்.
இதையும் படிங்க: காஷ்மீரில் தேடுதல் வேட்டை.. காட்டுக்குள் பதுங்கிய தீவிரவாதிகள்.. ஆக்ஷனில் இறங்கிய இந்திய ராணுவம்..!