இனி தப்பிக்கவே முடியாது.. 1000 நக்சல்கள் சுற்றி வளைப்பு.. 5 நக்சல் தலைவர்களின் கதை முடிந்தது..!
அடுத்தாண்டு மார்ச் மாத இறுதிக்குள் இந்தியா நக்சல்கள் இல்லாத நாடாக உருவெடுக்கும் என மத்திய அமைச்சர் அமித் ஷா உறுதி அளித்திருந்த நிலையில், அதை நிறைவேற்றும் விதமாக பாதுகாப்பு படையினர் அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
ஒடிசா, ஜார்க்கண்ட், சத்தீஸ்கர் மாநிலங்கள் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதில் பெரும் சவால்களை சந்திக்கின்றன. இந்த நிலையில் அடுத்த ஆண்டு மார்ச் இறுதிக்குள் நகசல் இல்லாத தேசத்தை உருவாக்குவோம் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உறுதி பூண்டுள்ளார்.
அதன் படி, சத்தீஸ்கரில் இந்த ஆண்டு துவக்கம் முதல் நடந்து வரும் நக்சல் ஒடுக்கும் பணியில், 150க்கும் மேற்பட்ட நக்சலைட்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். நுாற்றுக்கணக்கானோர் ஆயுதங்களை கைவிட்டு சரண் அடைந்தனர். அதே போல், ஜார்க்கண்ட்டில் சமீபத்தில் நடந்த நக்சல் எதிர்ப்பு வேட்டையில், 1 கோடி ரூபாய் சன்மானம் அறிவிக்கப்பட்டிருந்த 8 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
சத்தீஸ்கரின் பீஜப்பூர் மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் நுாற்றுக்கணக்கான நக்சல்கள் பதுங்கியிருப்பதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. நக்சல் அமைப்பை வழிநடத்தும் முக்கிய தலைவர்களான ஹிட்மா மற்றும் தேவா ஆகியோரும் கர்ரேகுட்டா மலை பகுதியில் பதுங்கியிருப்பதாகவும் தகவல் கிடைத்தது. இதையடுத்து, கர்ரேகுட்டா மலை மற்றும் அதை ஒட்டிய கிராமங்களை, சிஆர்பிஎப், சத்தீஸ்கர், மகாராஷ்டிரா, தெலங்கானா மாநிலங்களை சேர்ந்த சிறப்பு அதிரடிப்படை போலீசார் ஆகியோர் சுற்றி வளைத்தனர்.
48 மணி நேரமாக அங்குலம் அங்குலமாக நகர்ந்த பாதுகாப்பு படையினர், இன்று அதிகாலை நக்சல்கள் சூழ்ந்த பகுதியை நெருங்கினர். அப்போது நக்சலைட்களுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே கடும் துப்பாக்கி சண்டை நடந்தது.
இதையும் படிங்க: கோடிகளில் கொடுக்கப்பட்ட ஆஃபர்.. அமித் ஷாவால் மனம் மாறிய நக்சல்கள்.. 11 பெண்கள் உட்பட 33 பேர் சரண்..!
இதில், நக்சல் அமைப்பை சேர்ந்த முக்கிய தலைவர்கள் 5 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். சம்பந்தப்பட்ட மலைப் பகுதியில் 500 - 1,000 நக்சல்கள் பதுங்கியிருக்கலாம் என்பதால், பாதுகாப்பு படையினர் தரப்பில் உயிரிழப்பு ஏற்படாமல் இருக்க மிகவும் ஜாக்கிரதையாக காய் நகர்த்தப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த நக்சல்களை ஒடுக்கும் பணியில், மாவட்ட ரிசர்வ் கார்டு, சிறப்பு அதிரடிப்படை, சிஆர்பிஎப், துணை ராணுவப்படையின் கமாண்டோ படை பிரிவான கோப்ரா படைப்பிரிவு வீரர்கள் என, 20,000 வீரர்கள் களம் இறங்கியுள்ளனர். நக்சல்களுக்கு எதிரான வேட்டை தொடர்வதால், பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என நம்பப்படுகிறது. அதே போல், ஒருவர் விடாமல் அனைவரையும் சரண் அடையச் செய்யும் அல்லது கைது செய்யும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
அனைவரும் ஆயுதங்களை கைவிட்டு தேசிய நீரோடையில் கலக்க தயாரானால், அவர்களுக்கு சிறப்பான எதிர்காலத்தை அமைத்து தர தயாராக இருப்பதாக சத்தீஸ்கர் மாநில அரசு அறிவித்துள்ளது. ஏற்னகவே சத்தீஸ்கரின் நயா ராய்ப்பூரில் அமைய உள்ள செமி கண்டக்டர் தொழிற்சாலையில் பணியமர்த்தப்படும் ஊழியர்களுக்கு, நக்சல் ஆதிக்கம் நிறைந்த பஸ்தர் பகுதியில் தான் பயிற்சி மையத்தை அமைக்கவும் மாநில அரசு திட்டமிட்டுள்ளது. நக்சல் பாதித்த பகுதிகளை வளப்படுத்தவும், அங்கு வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ளவும் மாநில அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.
ஏற்கனவே அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் நக்சல் இல்லாத தேசத்தை உருவாக்குவோம் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ள நிலையில், தற்போது நக்சல் ஆதிக்கம் உள்ள பகுதிகளில் அதற்கான நடவடிக்கை அதி தீவிர கதியில் நடந்து வருவதாக, துணை ராணுவப்படை மற்றும் மாநில சிறப்பு அதிரடி போலீசார் கூறினர்..
இதையும் படிங்க: கோடிகளில் கொடுக்கப்பட்ட ஆஃபர்.. அமித் ஷாவால் மனம் மாறிய நக்சல்கள்.. 11 பெண்கள் உட்பட 33 பேர் சரண்..!