இஸ்ரோவின் புதிய மைல்கல்... செயற்கைக் கோள்களை DOCKING செய்து சாதனை...
விண்வெளித்துறையில் இந்தியா அடுத்தடுத்து புதுப்புது சாதனைகளை நிகழ்த்தி வருகிறது....
அற்புதத்தை நிகழ்த்திக் காட்டி உள்ளனர் நமது இஸ்ரோ விஞ்ஞானிகள்.. அதாவது விண்வெளியில் இருவேறு சுற்றுவட்டப் பாதைகளில் இருவேறு வேகத்தில் சுற்றிவரும் செயற்கைக் கோள்களை திட்டமிட்டபடி ஒன்றாக இணைய வைப்பதும், தேவைப்படும் போது பிரிப்பதற்கும் பெயர் DOCKING. விண்வெளியில் நீங்கள் ஆதிக்கம் செலுத்த வேண்டும் என்றால் இந்த டாக்கிங் தொழில்நுட்பம் இருந்தால் தான் சாத்தியம்..
அப்படி என்ன இந்த டாக்கிங்-கில் சிறப்பம்சம் என்ன என்று கேள்வி எழுப்பினால்.... சர்வதேச விண்வெளி நிலையம் பூமியை சுற்றி வருகிறது என்று அடிக்கடி செய்திகளில் வாசித்து இருப்போம். அதன் நீளம் 358 அடி, அதன் அகலம் 239 அடி, எடை 4 லட்சத்து 50 ஆயிரம் கிலோ... இவ்வளவு எடைகொண்ட நீள, அகலம் கொண்ட கட்டுமானம் எப்படி உருவாகி இருக்கும்?.. இவ்வளவு எடையை ஒரே சமயத்தில் ஏந்தி செல்லும் அளவுக்கு ராக்கெட் வசதி இருக்கிறதா? என்றால் இல்லை என்பதே பதில். பிறகு எப்படி உருவாக்கி இருப்பார்கள் என்றால், இந்த DOCKING தொழில்நுட்பம் மூலமாகத் தான். அதாவது எப்படி ஒரு வீடு செங்கல் செங்கல்லாக கட்டப்படுகிறதோ, அதுபோல சிறிய சிறிய பாகங்களை விண்வெளிக்கு கொண்டு சென்று டாக்கிங் தொழில்நுட்பம் மூலம் அவற்றை இணைத்து தற்போதைய சர்வதேச விண்வெளி ஆய்வு மையம் உருவாகி உள்ளது.
இதையும் படிங்க: விவசாயம் முதல் விண்வெளி வரை ..2000 பள்ளிகளில் ஆராய்ச்சி கூடம்..மயில்சாமி அண்ணாதுரை பளீச்..!
அமெரிக்க, ரஷ்யா, சீனா ஆகிய 3 நாடுகள் மட்டுமே விண்வெளியில் இந்த டாக்கிங் நுட்பத்தை வெற்றிகரமாக நிகழ்த்தி காட்டி உள்ளன. அந்த வரிசையில் இணைவதற்காக கடந்த சில ஆண்டுகளாக இந்திய விஞ்ஞானிகள் மிகுந்த முயற்சி எடுத்து வந்தனர். ஸ்பேடெக்ஸ் (SpaDeX) என இத்திட்டத்திற்கு பெயர் சூட்டினர். இதன் உச்சக்கட்ட நிகழ்வாக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 30-ந் தேதி சேசர் (CHASER) டார்கெட் ( TARGET ) என்ற 220 கிலோ எடைகொண்ட இரண்டு செயற்கைக் கோள்கள் விண்ணில் ஏவப்பட்டன. பூமியில் இருந்து 475 கிலோ மீட்டர் உயர சுற்றுவட்டப்பாதையில் முதல் செயற்கைக் கோளும், 476 கிலோ மீட்டர் உயர சுற்றுவட்டப்பாதையில் 2-வது செயற்கைக் கோளும் நிலைநிறுத்தப்பட்டன.
பின்னர் இவற்றை ஒருங்கிணைக்கும் பணிகளை விஞ்ஞானிகள் மேற்கொள்ளத் தொடங்கினர். முதலில் 230 மீட்டர் தொலைவுக்கு கொண்டு வரப்பட்டது. கடந்த 9-ந் தே வெறும் 3 மீட்டர் இடைவெளியில் சேசர் மற்றும் டார்கெட் செயற்கைக் கோள்கள் கொண்டு வரப்பட்டன. யோசித்துப் பாருங்கள் மணிக்கு 28 ஆயிரம் கிலோ மீட்டர் வேகத்தில் சுழன்று வரும் இரண்டு செயற்கைக் கோள்களை ஒன்றுடன் ஒன்று மோதி சிதறாமல் ஒரு ஜாடியின் மூடியை கழற்றி மாட்டுவது போல் அழகாக சேர்ப்பது என்பது எவ்வளவு சாமர்த்தியம் மிக்க செயல். அவ்வாறு தான் இந்த சேசர் மற்றும் டார்ககெட் செயற்கைக் கோள்கள் டாக்கிங் செய்யப்பட்டுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
இன்னும் முழுமையான முடிவுகளை இஸ்ரோ வெளியிடவில்லை. தரவுகளின் பட்டியல் தயாராகிக் கொண்டிருக்கிறதாம். எப்படியாயினும் டாக்கிங் தொழில்நுட்பத்தில் இந்தியா சாதனையை நிகழ்த்தி உள்ளது. அதுவும் இஸ்ரோவின் தலைவராக நாராயணன் என்ற தமிழர் பொறுப்பேற்றுள்ள சூழலில் நிகழ்ந்துள்ள இந்த சாதனை கூடுதல் உவகையைத் தருகிறது.
இதையும் படிங்க: இஸ்ரோ தலைமை பொறுப்பில் கலக்கும் தமிழர்கள்...! உலகையே திரும்பி வைக்க இந்தியர்; வி.நாராயணுக்கு ஸ்டாலின் வாழ்த்து!