தாக்குதல் இப்படித்தான் நடந்தது! என்.ஐ.ஏ விசாரணையில் வெளிவந்த உண்மை.. ரீல்ஸ் எடுத்தவரின் வாக்குமூலம்!!
காஷ்மீர் பயங்கரவாதிகள் தாக்குதல் குறித்து தேசிய புலனாய்வு அமைப்பு நேற்று விசாரணையை கையில் எடுத்துள்ளது. இந்த நிலையில் விசாரணையில் பல உண்மைகள் வெளிவந்துள்ளன..
ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் சுற்றுலா தளத்தில் கடந்த 22ம் தேதி பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் நேபாளத்தை சேர்ந்த ஒருவர் உட்பட 26 பேர் கொல்லப்பட்டனர். பத்துக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. உலக தலைவர்கள் உள்பட பலரும் தாக்குதல் சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்தனர். பிரதமர் மோடி சவுதி பயணத்தை பாதியில் முடித்துக் கொண்டு நாடு திரும்பினார். டில்லியில், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருடன் ஆலோசனை நடத்தினார்.
மத்திய அமைச்சர் அமித்ஷா ஜம்மு-காஷ்மீர் சென்று இறந்தவர்களின் உடல்களுக்கு அஞ்சலி செலுத்தினார். பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கும் ஆறுதல் பஹல்காம் சென்ற அமித் ஷா, பயங்கரவாத தாக்குதல் நடந்த இடத்தை நேரில் பார்வையிட்டு, அங்கு மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு அம்சங்களை நேரில் ஆய்வு செய்தார்.
இதற்கிடையே, ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங், டில்லியில் முப்படை தளபதிகளுடன் அவசர ஆலோசனை நடத்தினார். இந்த சம்பவத்தில் குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்கப்படும் என பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அமித்ஷா உறுதி அளித்துள்ளனர்.
இந்த நிலையில், என்ஐஏ அதிகாரிகள் அடங்கிய குழு காஷ்மீர் விரைந்தது. பயங்கரவாதிகளின் ஊடுருவல், அவர்கள் தீட்டிய சதித்திட்டம், பதுங்கியிருக்கும் இடம் குறித்து ராணுவத்தினருடன் என்ஐஏ அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்.
இதையும் படிங்க: பஹல்காம் தாக்குதல்.. வழக்கு என்.ஐ.ஏவிடம் ஒப்படைப்பு.. மத்திய உள்துறை அமைச்சகம் அதிரடி..!
தற்போது, வழக்கு விசாரணையை தேசிய புலனாய்வு முகமையிடம் (என்.ஐ.ஏ) மத்திய உள்துறை அமைச்சகம் ஒப்படைத்தது. வழக்கு குறித்து முக்கிய ஆவணங்கள், எப்.ஐ.ஆர்., நகல் ஆகியவற்றை என்.ஐ.ஏ அதிகாரிகளிடம் ஜம்மு காஷ்மீர் போலீசார் ஒப்படைத்தனர். இதனை அடுத்து வழக்குப்பதிவு செய்த என்.ஐ.ஏ., அதிகாரிகள் விசாரணையை துவங்கினர்.
பைசரன் பசுமை பள்ளத்தாக்கின் நுழைவு மற்றும் வெளியேறும் பகுதிகளில் சல்லடை போட்டு அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். துப்பாக்கிச் சூடு சம்பவத்தை நேரில் பார்த்தவர்களிடம் நொடிக்கு நொடி விவரிக்கும்படி கூறி, பயங்கரவாதிகளின் திட்டத்தை முழுமையாக உள்வாங்கும் முயற்சியில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
பைசரன் பசுமை பள்ளத்தாக்கிற்கு வரும் சுற்றுலா பயணியருக்கு, 'ரீல்ஸ்' எனப்படும் சமூக ஊடக வீடியோ எடுத்து தரும் தொழிலை செய்து வரும் வீடியோகிராபர் ஒருவர் முக்கிய சாட்சியாக விசாரிக்கப்பட்டு வருகிறார். தாக்குதல் நடந்தபோது அவர் அங்கு இருந்துள்ளார்.
துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டதும், மரத்தின் மேல் ஏறி பாதுகாப்பாக அமர்ந்து கொண்ட அவர், மொத்த தாக்குதலையும் வீடியோ எடுத்து உள்ளார். இது, விசாரணைக்கு உதவியாக இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர். அந்த வீடியோவை கைப்பற்றி என்.ஐ.ஏ., அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.
மொத்தம் நான்கு பயங்கரவாதிகள் இரு குழுக்களாக பிரிந்து இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தை அரங்கேற்றியது, முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. சம்பவம் நடந்த இடத்தில் இருந்து, ஏ.கே., 47 மற்றும் எம் - 4 துப்பாக்கிகளின் காலி தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
தாக்குதல் நடத்திய நான்கு பயங்கரவாதிகளில் ஒருவர் உள்ளூர்காரர். அவர் பெயர் அடில் தோக்கர். லஷ்கர் அமைப்பில் சேர்ந்து பயிற்சி பெற்று, 2024ல் மீண்டும் காஷ்மீர் திரும்பி உள்ளார். அவர் தான் மற்ற மூன்று பயங்கரவாதிகளுக்கு வழிகாட்டியாக செயல்பட்டுள்ளார். இவ்வாறு முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதையும் படிங்க: பாக். கட்டாயம் அனுபவிக்கும்.. தூங்குகிற புலியை இடரினால் இதுதான் கதி.. மதுரை ஆதினம் ஆவேசம்..!