பஹல்காம் தாக்குதல்.. 3 முறை அல்லாஹூ அக்பர்.. ஜிப்லைன் ஆபரேட்டர் மீது வலுக்கும் சந்தேகம்..!
பஹல்காம் தாக்குதலில் சுற்றுலா பயணி அளித்த தகவலின் அடிப்படையில் ஜிப்லைன் ஆப்ரேட்டரிடம் என்ஐஏ விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 26 பேர் உயிரிழந்தனர். பத்துக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இந்த சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இதனால் காஷ்மீர் எல்லையில் போர் பதற்றம் நிலவியுள்ளது. உலக தலைவர்கள் உள்பட பலரும் தாக்குதல் சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்தனர். இந்த நிலையில், என்ஐஏ அதிகாரிகள் அடங்கிய குழு காஷ்மீர் விரைந்தது. பயங்கரவாதிகளின் ஊடுருவல், அவர்கள் தீட்டிய சதித்திட்டம், பதுங்கியிருக்கும் இடம் குறித்து ராணுவத்தினருடன் என்ஐஏ அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்.
பைசரன் பசுமை பள்ளத்தாக்கின் நுழைவு மற்றும் வெளியேறும் பகுதிகளில் சல்லடை போட்டு அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். துப்பாக்கிச் சூடு சம்பவத்தை நேரில் பார்த்தவர்களிடம் நொடிக்கு நொடி விவரிக்கும்படி கூறி, பயங்கரவாதிகளின் திட்டத்தை முழுமையாக உள்வாங்கும் முயற்சியில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர். மொத்தம் நான்கு பயங்கரவாதிகள் இரு குழுக்களாக பிரிந்து இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தை அரங்கேற்றியது, முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இதையும் படிங்க: பாகிஸ்தானுக்கு துருக்கி உதவி? ராணுவ தளவாடங்களுடன் போர் விமானங்கள் தரையிறக்கம்..!
இந்த நிலையில் பஹல்காம் தொடர்பாகப் பல புதிய வீடியோக்கள் வெளியாகி வருகிறது. அதில் ஒரு வீடியோவில் பச்சை புல்வெளியின் அழகிய நிலப்பரப்பில் இருந்து பல அடி உயரத்தில், ஜிப்-லைன் வழியாக ஜாலியாக ஒருவர் செல்கிறார். அப்போது, கீழே நடக்கும் கொடிய பயங்கரவாதத் தாக்குதலை அறியாமல், சிரித்தவாறு வீடியோவுக்கு போஸ் கொடுத்து செல்கிறார். கீழே நடக்கும் துப்பாக்கிச் சூடு மற்றும் குண்டடிப்பட்டு சுற்றுலா பயணியர் சுருண்டு விழுவது அவருக்கு தெரியவில்லை. சிறுது நேரம் கழித்தே நடப்பது என்னவென்று அறிந்த அந்த பயணி, ஜிப்-லைனை நிறுத்தி, 15 அடி உயரத்தில் இருந்து கீழே குதித்தார்.
இதனிடையே அவர் குஜராத்தைச் சேர்ந்த ரிஷி பட் என்பது விசாரணையில் தெரியவந்தது. அவரிடம் என்.ஐ.ஏ அதிகாரிகள் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன. ரிஷிபட் கூறியதாவது; நான் ஜிப்லைனில்தொங்கிக் கொண்டு செல்லும் போது தான் துப்பாக்கிச்சூடு தொடங்கியது. 20 நொடிகள் என்ன நடந்தது என்பதே எனக்கு தெரியவில்லை. திடீரென துப்பாக்கியால் சுடப்படும் சம்பவங்கள் தொடங்கின. நான் தொங்கிக் கொண்டு இருக்கும் போது கீழே புல்தரையில் இருந்த 5 அல்லது 6 பேர் சுட்டுக் கொல்லப்படுவதை கண்டேன். 20 நொடிகளுக்கு பின்னரே இது ஒரு பயங்கரவாத தாக்குதல் என்பதை உணர்ந்தேன்.
ஜிப்லைனை இயக்கும் ஆபரேட்டர் அல்லாஹூ அக்பர் என்று 3 முறை கூறினார். அதைத் தொடர்ந்தே துப்பாக்கிச்சூடு தொடங்கியது. "நான் ஜிப்லைனை எடுத்தபோது, ஒருவர் அல்லாஹு அக்பர் என்று கூறிவிட்டு தலையை இடது மற்றும் வலது பக்கம் அசைத்தார். எனக்கு முன்பாக 9 பேர் ஜிப்லைனில் சென்றனர். அப்போது அதை இயக்குபவர் எதுவும் சொல்லவில்லை. நான் சறுக்கிச் செல்லும் போது தான் அவர் கூறினார். அதன் பின்னர் அந்தப் பக்கங்களிலிருந்து துப்பாக்கிச் சூடு தொடங்கியது. ஆகையால் அந்த ஜிப்லைன் ஆபரேட்டர் மீது எனக்கு சந்தேகம் உள்ளது. அவர் ஒரு வழக்கமான காஷ்மீரியை போல்தான் எனக்கு தெரிந்தார்.
பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியதும் என் மனைவி, மகன் கத்திக் கொண்டு இருந்தார்கள். உடனே நான் எனது பெல்ட்டை அவிழ்த்து, ஜிப்லைனில் இருந்து கீழே குதித்து அவர்களை அழைத்துக் கொண்டு ஓட ஆரம்பித்தேன். எங்கள் முன் 15,16 சுற்றுலாப் பயணிகள் சுடப்பட்டனர். பஹல்காம் பகுதியை 20, 25 நிமிடங்களுக்குள் ராணுவத்தினர் அரணாக சுற்றி வளைத்து சுற்றுலா பயணிகளை காப்பாற்றினர். ராணுவம் எங்களுக்கு பாதுகாப்பு அளித்தவுடன் நாங்கள் பாதுகாப்பாக இருப்பதை உணர்ந்தோம். ராணுவத்திற்கு எனது நன்றி என ரிஷிபட் தெரிவித்தார்.
இதையும் படிங்க: பயங்கரவாதிகள் ஆயுதக் குழுக்களா..? பிபிசி கருத்துக்கு மத்திய அரசு அதிருப்தி..!