‘தீவிரவாதத்துக்கு மதம் இருக்கிறது, ஜிஹாத்துக்கு நாம் தொடர்ந்து நிதியளிக்கிறோம்’: பாஜக எம்எல்ஏ காட்டம்..!
தீவிரவாதத்துக்கு மதம் இருக்கிறது, நமக்கு எதிரான ஜிஹாத்துக்கு நாம் தொடர்ந்து நிதியளிக்கிறோம் என்று உத்தரப்பிரதேச பாஜக எம்எல்ஏ ராஜா பையா என்ற ரகுராஜ் பிரதாப் சிங் தெரிவித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீரில் உள்ள புகழ்பெற்ற சுற்றுலாத் தளம் பஹல்காம் மண்டலம். பைன் மரக்காடுகள் அடர்ந்திருக்கும் இந்தப் பகுதி, இந்தியாவின் சுவிட்சர்லாந்து என்று அழைக்கப்படுகிறது. இங்கு நேற்று ஏராளமான சுற்றுலாப்பயணிகள் கூடியிருந்தபோது, தீவிரவாதிகள் திடீரென சுற்றுலாப்பயணிகள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினர்.
இந்தத் தாக்குதலில் இரு வெளிநாட்டவர், என்ஆர்ஐக்கள் உள்பட 26 பேர் கொல்லப்பட்டனர். 2019ம் ஆண்டு புல்வாமா தாக்குதலுக்குப்பின் தீவிரவாதிகள் நடத்திய மிகப்பெரிய தாக்குதலாக இது கருதப்படுகிறது. இந்த கொடூரமான, மனிதத்தன்மையற்ற தாக்குதலுக்கு உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. எதிர்க்கட்சிகளும் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நீதி கிடைக்க சரியானதைச் செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: ‘பணம், மது, பரிசுக்காக ஓட்டுகளை விற்பவர்கள் மறுபிறவியில் விலங்குகளாகப் பிறப்பார்கள்’.. பாஜக எம்எல்ஏ பேச்சு..!
இந்நிலையில் உத்தரப்பிரதேச குந்தா தொகுதி பாஜக எம்எல்ஏ ராஜா பையா என்ற ரகுராஜ் பிரதாப் சிங் எக்ஸ்தளத்தில் தாக்குதலுக்கு எதிராக கடுமையாக கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:
காஷ்மீரில் உள்ள தீவிரவாதிகள் தீவிரவாதத்துக்கு மதம் இருக்கிறது என்பதை மீண்டும் நிரூபித்துள்ளனர். தீவிரவாதிகள் தாக்குதலில் கொல்லப்பட்ட சுற்றுல்பயணிகளிடம் அவர்களின் பேண்ட்டை கழற்றக் கூறி அந்தரங்க உறுப்பை பார்த்து மத அடையாளத்தை உறுதி செய்தபின் அவர்களை தீவிரவாதிகள் கொன்றுள்ளனர். இதன் மூலம் தீவிரவாதிகள் தீவரவாதத்துக்கு மதம் இருப்பதை உறுதி செய்துள்ளனர்.
காஷ்மீருக்கு சுற்றுலா சென்று ஹோட்டலில் தங்குவது, உணவகங்களில் சாப்பிடுவது, பொருட்கள் வாங்குவதன் மூலம், சுற்றுலாப்பயணிகள் தங்களுக்குத் தெரியாமலேயே பிரிவினைவாதிகளையும், தீவிரவாதிகளின் நெட்வொர்க்கையும் வலுப்படுத்துகிறார்கள். நாம் நமக்குத் தெரியாமலேயே நமக்கு எதிரான ஜிகாத்துக்கு நம்முடைய பாக்கெட்டில் இருந்து நிதியளிக்கிறோம்.
காஷ்மீரில் இந்துக்கள் இன்னும் அகதிகள்போலத்தான் இருக்கிறார்கள். 1990களில் காஷ்மீரில் இ்ந்துக்கள், பண்டிட்கள் அங்கிருந்து அடித்து துரத்தப்பட்டார்கள், அங்கிருந்து தப்பித்தவர்கள் ஜம்முவில் சொந்த நாட்டில் அகதிகள்போல் வாழ்கிறார்கள். சுற்றுலாப்பயணி ஒருவர் தால் ஏரியில் குடும்பத்துடன் செல்பி எடுத்து வெளியிட்ட புகைப்படம் என்பது, காஷ்மீரில் இயல்புநிலை வந்துவிட்டது என்ற தவறான சித்தரிப்பாகும். காஷ்மீரில் அமைதி திரும்பவிட்டது என்ற உலகத்துக்கு நாம் தவறான செய்தியை கூறுகிறோம். ஆனால் உண்மை நிலை மாறாக இருக்கிறது என்பது தாக்குதல் மூலம் தெரியவருகிறது.
காஷ்மீரில் உள்ள பெரும்பகுதியான மக்கள் இன்னும் பிரிவினை எண்ணத்துடனே இருக்கிறார்கள். பெரும்பகுதியினர் தீவிரவாதத்துக்கு ஆதரவளிக்கிறார்கள், அதில் மதம்சார்ந்த அரசியல் கட்சிகளும் விதிவிலக்கு அல்ல”
இவ்வாறு ராஜா பையா தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: ஸ்டாலின் வெறும் வாய் சவடால் தான்! "NO USE"... லெஃப்ட் ரைட் வாங்கிய வானதி..!