3 ஆண்டு சிறை.. ரூ.3 லட்சம் வரை அபராதம்.. வெளியேறாத பாகிஸ்தானியர்களுக்கு தண்டனை..!
இந்தியாவில் இருந்து வெளியேறாத பாகிஸ்தானியர்களுக்கு 3 ஆண்டு வரை சிறை தண்டனை அல்லது 3 லட்சம் அபராதம் வழங்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
பஹல்காம் தாக்குதலில் அப்பாவி சுற்றுலா பயணிகள் 26 பேர் சுட்டு கொல்லப்பட்டதை அடுத்து, பயங்கரவாதிகளை ஒடுக்கும் பணி தீவிரம் அடைந்துள்ளது. பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் என முக்கிய பொறுப்பில் இருக்கும் தலைவர்களுடன் அடுத்தடுத்து ஆலோசனை நடத்தினார்.
அதன் எதிரொலியாக பாகிஸ்தான் உடனான துாதரக உறவு துண்டிப்பு, சிந்து நதி நீர் நிறுத்தம், பாகிஸ்தானியர்களுக்கான விசா ரத்து என அடுத்தடுத்த உத்தரவுகளை மத்திய அரசு பிறப்பித்தது. ராணுவ தளபதி திவேதி ஸ்ரீநகர் சென்று கள நிலவரம் குறித்து ராணுவ அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். கவர்னர் சின்ஹாவை சந்தித்து, அடுத்த கட்ட நடவடிக்கைக்கு ராணுவம் தயாராக இருப்பதாகவும் கூறினார்.
பாகிஸ்தான் நாட்டவருக்கான அனைத்து வகை விசாக்களையும் மத்திய அரசு ரத்து செய்துள்ளது. இந்தியாவில் தங்கியுள்ள பாகிஸ்தானியர்கள் இம்மாத இறுதிக்குள் தங்கள் நாட்டிற்கு திரும்பும்படி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே பஞ்சாபின் அடாரியில் உள்ள இந்தியா - பாக்., எல்லை கதவு மூடப்பட்டுவிட்டது. உரிய ஆவணங்களுடன் இந்தியாவிற்கு வந்த பாகிஸ்தானியர்கள் மட்டும் அடாரி வழியாக பாகிஸ்தானுக்குள் செல்ல அனுமதிக்கப்படுகின்றனர். பாகிஸ்தான் சென்ற இந்தியர்கள் தங்கள் ஆவணங்களை காட்டி உள்ளே வரலாம். மற்றபடி புதிதாக வேறு யாருக்கும் நம் நாட்டிற்குள் நுழைய அனுமதி இல்லை.
இதையும் படிங்க: பாகிஸ்தானுக்கு சப்போர்ட்டா? பாய்ந்தது தேசிய பாதுகாப்பு சட்டம்.. அசாம், திரிபுரா, மேகாலயாவில் 19 பேர் கைது..!
நாட்டின் ஒவ்வொரு மாநிலத்திலும் தங்கியுள்ள பாகிஸ்தானியர்களை கண்டறிந்து உடனடியாக அவர்கள் நாட்டுக்கே அனுப்ப அனைத்து மாநில முதல்வர்களுக்கும் உள்துறை அமைச்சர் அமித் ஷா உத்தரவிட்டுள்ளார். மாநில அரசுகள் அளிக்கும் பாகிஸ்தானியர்கள் குறித்த பட்டியலை, மத்திய அரசு பட்டியலுடன் ஒப்பிட்டு, எத்தனை பேர் அவர்களின் நாடுகளுக்கு திரும்பினர், மேலும் எத்தனை பேர் இங்கேயே உள்ளனர் என்பதை அறிய இது உதவும். அதே போல், பல்வேறு காரணங்களுக்காக விசா பெற்று இந்தியா வந்த பாகிஸ்தானியர்களில் சிலர், பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக செயல்பட வாய்ப்புள்ளதாகவும் உளவுத்துறை எச்சரித்துள்ளதால் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
அதே சமயம் நீண்ட கால விசா அடிப்படையில், இந்தியாவில் தஞ்சம் புகுந்து பல ஆண்டுகளாக இங்கேயே வசிக்கும் பாகிஸ்தானை சேர்ந்த இந்துக்களுக்கு இந்த விசா ரத்து நடைமுறை பொருந்தாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்றபடி தொழில், வர்த்தகம், சுற்றுலா போன்ற வெறெந்த காரணங்களுக்காகவும் விசா பெற்று இந்தியா வந்துள்ள பாகிஸ்தானியர்களை உடனே வெளியேற்றும் நடவடிக்கை துரிதப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் மருத்துவ விசா தவிர பிற விசாக்கள் மூலமாக இந்தியாவிலுள்ள பாகிஸ்தானியர்கள் வெளியேற மத்திய அரசு விதித்திருந்த காலக்கெடு இன்றுடன் நிறைவு பெறுகிறது.
கடந்த ஏப்.24 முதல் எல்லைப்பகுதியான அட்டாரி வழியாக, பாகிஸ்தானை சேர்ந்த 537 பேர் வெளியேறி உள்ளனர். குடியேற்றம் மற்றும் வெளிநாட்டினர் மசோதா, 2025 இன் பிரிவு 23 இன் கீழ்,குறுகிய கால விசாக்களில் இந்தியாவை விட்டு வெளியேறத் தவறிய பாகிஸ்தானியர்கள் கைது செய்யப்பட்டு, வழக்குத் தொடரப்பட்டு, 3 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், ரூ.3 லட்சம் அபராதமும் விதிக்கப்பட வாய்ப்புள்ளது.நாடு கடத்தப்பட வேண்டிய பாகிஸ்தானியர்களைக் கண்டறிந்து அதற்கேற்ப ஏற்பாடுகளைச் செய்யுமாறு அனைத்து மாநில முதல்வர்களுக்கும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உத்தரவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: தேச துரோகிகள்! பயங்கரவாத தாக்குதலுக்கு உதவிய வஞ்சகர்கள்.. பெயர், விவரங்கள் அறிவிப்பு..!