25 வயது இளைஞர் துடிதுடிக்க வெட்டிக்கொலை..! டாஸ்மாக்கை சூறையாடிய பெண்கள்..!
புதுக்கோட்டையில் 25 வயது இளைஞர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தால் ஆத்திரமடைந்த குடும்பத்தினர் கடையை சூறையாடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் கூலித்தொழிலாளியை சுற்றி வளைத்த மர்ம நபர்கள் அறிவாளால் சரமாரியாக வெட்டி விட்டு தப்பிச்சென்ற சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.புதுக்கோட்டை மாவட்டம் மலையூர் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் 25 வயதான முருகேசன். மரம் வெட்டும் கூலி தொழிலாளி வேலை செய்து வந்த இவர், நேற்று இரவு அப்பகுதியில் உள்ள டாஸ்மாக் மதுபான கடை அருகே மோட்டார் சைக்கிளில் நின்று கொண்டிருந்துள்ளார்.
அப்போது அடையாளம் தெரியாத மர்மநபர்கள் அவரை சுற்றி வளைத்து அறிவாளால் சரமாரியாக வெட்டி உள்ளனர். இதில் முருகேசன் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்த நிலையில் அவர்கள் அங்கிருந்து தம்பி உள்ளனர். உடனடியாக முருகேசனை அருகில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்த நிலையில், ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: இளம்பெண் ஆணவக்கொலை.. செய்தது யார்..? விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள்..!
அதன் பிறகு அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. முருகேசன் கொலை செய்யப்பட்ட சம்பவத்தை அறிந்த அவரது குடும்பத்தினர் மருத்துவமனையில் குவிந்தனர். மேலும் சிலர் கொலை நடந்த டாஸ்மாக் கடை அருகே கூடி சாலை மறியலில் ஈடுபட்டதுடன், முருகேசன் கொலை செய்தவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று கோஷமிட்டனர். கடும் கோபத்தில் இருந்த பெண்கள், இந்த கொலைக்கு டாஸ்மாக் கடை தான் காரணம் என்றும் மதுபானம் குடிக்க வந்தவர்கள் தான் முருகேசனை கொலை செய்துள்ளதாகவும் குற்றம் சாட்டி கடையை சூறையாடினர்.
கல் மற்றும் கட்டைகளை எடுத்து டாஸ்மாக் கடை மீது வீசியதோடு, தகரத்தால் அமைக்கப்பட்டிருந்த வேலியை பெயர்த்து எடுத்தனர். தகவல் அறிந்து அங்கு சென்ற போலீசார் பெண்களை சமாதானம் செய்ததுடன் கொலை செய்த நபர்களை கைது செய்ய உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். ஆனால், போலீசாரின் சமாதானத்தை ஏற்றுக்கொள்ளாத முருகேசனின் உறவினர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பதற்றம் நிலவியது.
இதையும் படிங்க: கேம்ப் ஃபயரில் எரிந்த உடல்... எடுக்க எடுக்க வந்த உடல் பாகங்கள்... கொடைக்கானலில் கொடூரம்!!