ஆசிரியை பணிஓய்வு நாளில் மாணவர்களின் ‘வித்தியாசமான பரிசு’.. கேரள முதல்வர் பினராயி விஜயன் பாராட்டு..!
கேரள மாநிலத்தில் ஆசிரியை ஓய்வு பெறும் நாளில் மாணவர்கள் சேர்ந்து அவருக்கு வித்தியாசமான பரிசு அளித்துள்ளனர். இந்தப் பரிசு குறித்து கேட்ட கேரள முதல்வர் பினராயி விஜயன் பாராட்டு தெரிவித்துள்ளார்.
இடுக்கி மாவட்டம் வண்டன்மேட்டில் முஸ்லிம் கல்வி சமூக மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு சாய்னா பீவி என்ற ஆசிரியை தனது பணிக்காலம் முடிந்து சமீபத்தில் ஓய்வு பெற்றார். சாய்னா பீவியின் ஓய்வு நாளில் 9-வது பயிலும் மாணவர்கள் ஆசிரியை நேரில் சந்தித்து வாழ்த்துத் தெரிவித்தனர். அதுமட்டுமல்லாமல் ஆசிரியை சாய்னா பீவி தலையில் கை வைத்து, வாழ்நாளில் ஒருபோதும் போதை மருந்து பழக்கத்துக்கு உடன்படமாட்டேன் என்று உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
சாய்னா பீவி தனது பணிக்காலத்தில் போதை மருந்துக்கு எதிரான விழிப்புணர்விலும், நடவடிக்கையிலும் தீவிரமாகச் செயல்பட்டார். 9வது வகுப்பு படிக்கும் 45 மாணவர்களும் போதை மருந்துக்கு எதிராக உறுதி மொழி எடுத்துக்கொண்டது சாய்னா பீவிக்கு பெருமகிழ்ச்சியை அளித்தது.
2021ம் ஆண்டு மாநில நல்லாசிரியர் விருதை சாய்னா பீவி பெற்றார். மாணவர்களின் இந்த செயல் குறித்து சாய்னா பீவி கூறுகையில் “ போதை மருந்துக்கு எதிராக, பயன்படுத்துவதற்கு எதிராக மாணவர்களை என் தலையின் மீது சத்தியம் செய்து உறுதிமொழி எடுக்கக்கோரும் சிந்தனை எனக்கு திடீரென வந்தது. நான் இந்தப் பள்ளியிலிருந்து செல்லும்போது அர்த்தமுள்ளதாக இருக்க வேண்டும். மாணவர்கள் என் மீது அன்பும், மதிப்பும் வைத்துள்ளதால் நிச்சயமாக உறுதிமொழியை மதிப்பார்கள்” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: நீங்களாம் சுயநலவாதி, கொத்தடிமை..! எஜமான விசுவாசம் தடுக்குதோ..? ஃபுல் ஃபார்மில் இபிஎஸ்..!
மாணவர்களின் இந்த செயல் ஊடகங்களில் வந்ததையடுத்து, இதைக் கண்ட முதல்வர் பினராயி விஜயன் மாணவர்களுக்கும், ஆசிரியை சாய்னா பீவிக்கும் பாராட்டுக்கள் தெரிவித்துள்ளார். அவர் விடுத்த அறிக்கையில் “ஆசிரியை ஓய்வு நாளின் போது மாணவர்கள் எடுத்துக்கொண்ட உறுதிமொழி நிச்சயமாக வருங்கால மாணவர்களுக்கு முன்னுதாரணமாக இருக்கும். போதை மருந்து உட்கொள்ளாத தலைமுறையை உருவாக்க வேண்டும். போதை மருந்துக்கு எதிரான நமது போராட்டத்தை இது இன்னும் தீவிரப்படுத்தும்” எனப் பாராட்டியுள்ளார்.
முதல்வர் பினராயி விஜயன் பாராட்டுகள் குறித்து கேட்டறிந்த ஆசிரியை சாய்னா பீவி மகிழ்ச்சி அடைந்தார். அவர் கூறுகையில் “முதல்வர் பினராயி விஜயனின் செய்தி சமூகத்துக்கு பெரிய உற்சாகமாகவும், போதைக்கு எதிரான போராட்டத்தை தீவிரப்படுத்தும். முதல்முறையாக 10ம்வகுப்பு இறுதித் தேர்வின் போது மாணவர்களை அழைத்துச்செல்ல பெற்றோர் முதல்முறையாக பள்ளிக்கு வந்தனர். போதைப்பொருள் அச்சுறுத்தல் குறித்து பெற்றோர் எவ்வளவு எச்சரிக்கையாக இருக்கிறார்கள் என்பதை இதுபோன்ற காட்சிகள் சுட்டிக்காட்டுகின்றன” எனத் தெரிவித்தார்.
சாய்னா பீவிக்கு மாணவர்கள் அளித்த பரிசு மாநிலம் முழுவதும் வைரலானது. கல்வியாளர்கள், பிற பள்ளி ஆசிரியர்கள், குழந்தைகள் நல ஆர்வலர்கள், போதைக்கு எதிரான அமைப்புகள் ஆசிரியையின் செயலை பாராட்டியுள்ளனர்.
இதையும் படிங்க: அப்பாவின் பதவியால் ரூ.2.7 கோடி மோசடி… கேரள முதல்வர் மகள் மீது பரபரப்பு குற்றச்சாட்டு..!