காங்கிரஸ் கிளப்பிய புது சர்ச்சை... கொந்தளிக்கும் பாஜக... பின்னணி என்ன?
காங்கிரஸ் கட்சி வெளியிட்ட எக்ஸ் தள பதிவு பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளது.
காஷ்மீரில் கடந்த 22 ஆம் தேதி பஹல்காமில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் அங்கு இருந்த சுற்றுலாப் பயணிகள் சுமார் 26 பேர் கொல்லப்பட்டனர். மேலும், பலர் காயமடைந்தனர். தீவிரவாதிகள் நடத்திய இந்த தாக்குதலுக்கு உலக நாடுகளின் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். காஷ்மீரில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. குழந்தைகள் மற்றும் பெண்களைத் தவிர்த்துவிட்டு ஆண்களைக் குறிவைத்துத் தாக்கியுள்ளனர்.
இதை அடுத்து பாகிஸ்தானுக்கு எதிராக அதிரடியான முடிவுகள் எடுக்கப்பட்டன. அதன்படி, பாகிஸ்தானுடனனா சிந்து நதி நீர் ஒப்பந்தம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது. பாகிஸ்தானியர்கள், இந்தியாவை விட்டு 48 மணிநேரத்தில் வெளியேற கெடு விதிக்கப்பட்டது, வாகா, அட்டாரி எல்லைகள் மூடப்பட்டன, பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் ஒரு வாரத்தில் நாட்டை விட்டு வெளியேற உத்தரவிடப்பட்டது, பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் எண்ணிக்கை குறைக்கப்பட்டது.
மேலும் சிந்து நதியில் இருந்து பாகிஸ்தானுக்கு நீர் திறந்துவிடப்படுவது நிறுத்தப்பட்டது. இந்த தாக்குதலை நடத்திய பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் இன்னும் கைது செய்யப்படவில்லை. அதேபோல் பாகிஸ்தானுக்கு இன்னும் தாக்குதல் முறையில் பதிலடி கொடுக்கவில்லை. அதற்கான வியூகங்கள் வகுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் காங்கிரஸ் கட்சி வெளியிட்ட எக்ஸ் தள பதிவு பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளது.
காங்கிரஸ் தனது எக்ஸ் பக்கத்தில், GAYAB என்ற சொல்லுடன் பதிவு செய்தது. அதில் தலை, கை, கால் இல்லாமல் வெறுமனே மேலாடை, பேண்ட் மற்றம் ஷூ மட்டும் இருக்கும் போட்டோ இடம்பெற்றுள்ளது. கயாப் என்றால் மிஸ்ஸிங் என்று பொருள்படும். மேலும் இந்த பதிவில் காங்கிரஸ் போட்டு இருக்கும் போட்டோவின் உடை என்பது பிரதமர் மோடியை குறிக்கும் வகையில் இருப்பதாக பாஜகவினர் குற்றம்சாட்டி வருகின்றனர்.
இதையும் படிங்க: நாடாளுமன்ற இரு அவைகளின் சிறப்பு கூட்டம்... பிரதமருக்கு கார்கே எழுதிய முக்கிய குறிப்பு!
தலை, கை, கால் இன்றி பிரதமர் மோடியை காங்கிரஸ் கட்சி அவமானப்படுத்திவிட்டதாகவும், உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கூறி வருகின்றனர். காங்கிரஸ் கட்சியின் இந்த பதிவு என்பது சர்ச்சையை கிளப்பி உள்ளது. அதன்பிறகு இரவு 7.05 மணிக்கு வெளியிட்ட பதிவில் பிரதமர் மோடியின் போட்டோ போடப்பட்டுள்ளது அதில், ஃபேக்ட் பைல். பிரதமர் மோடியின் ஆட்சியின் கீழ் ஜம்மு காஷ்மீரில் 2018 முதல் 2021 ம் ஆண்டு வரை 1,145 பயங்கரவாத செயல்கள் நடந்துள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது. பிறகு நேற்று இரவு 8.05 மணிக்கு பதிவிட்ட பதிவில் வீடியோ இடம்பெற்றுள்ளது. அதில், ‛‛பஹல்காம் தாக்குதலில் 28 உயிர்கள் பலியாகி உள்ளது. ஆனால் அலட்சியம் காரணமாக நடந்த இந்த தாக்குதலில் அரசு அமைதியாக இருக்கிறது.
மேலும் சில கேள்விகள் உள்ளன. பயங்கரவாதிகளுக்கு எப்படி பயங்கர ஆயுதம் கிடைத்தது? பயங்கரவாதிகள் எப்படி எல்லை பகுதியில் இருந்து நம் நாட்டின் 200 கிலோமீட்டர் தெலைவுக்குள் நுழைந்தனர்? இந்த விஷயத்தில் எப்படி உளவுத்துறை பெரிய தோல்வியடைந்தது? ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவியும் இடத்தில் எதற்காக பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யவில்லை? ஏன் இன்னும் ஒருவர் கூட இப்போது வரை பொறுப்பேற்கவில்லை? இந்தியா பதிலை எதிர்பார்க்கிறது. அமைதியை அல்ல'' என அந்த வீடியோவில் காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பி உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: PoK-வை கைப்பற்ற இந்தியா திட்டம்? அடுத்தக்கட்ட நடவடிக்கையால் பாக். அதிர்ச்சி!!