வந்தது 3வது பேட்ஜ்...! நாடு கடத்தப்பட்ட இந்தியர்களில் 112 பேர் பஞ்சாபில் தரையிறக்கம் - இதுவரை திரும்பிய 332 பேரில் இருவர் கைது..!
அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்ட இந்தியர்களில் 3வது பேட்ஜில் 112 பேர் பஞ்சாபில் தரையிறக்கப்பட்டனர்
அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்ட இந்தியர்களில் 3வது பேட்ஜில் 112 பேர் பஞ்சாபில் தரையிறக்கப்பட்டனர். இதுவரை 332 பேர் அழைத்து வரப்பட்ட நிலையில், அவர்களில் இருவரை போலீசார் கைது ெசய்து விசாரித்து வருவதாக கூறப்படுகிறது.
அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய இந்தியர்கள் நாடு கடத்தப்பட்டு வருகின்றனர். அமெரிக்க விமானப்படை விமானத்தில் அவர்கள் இந்தியாவிற்கு அழைத்து வரப்படுகின்றனர். இருந்தும் அவர்களின் கை, கால்களில் விலங்கு போட்டு இந்தியாவுக்கு அழைத்து வருவதை பலரும் கண்டித்து வருகின்றனர். இவ்விசயத்தில் ஆளும் ஒன்றிய பாஜக அரசும், பிரதமர் மோடியும் மவுனம் காத்து வருகின்றனர். நாடு கடத்தப்படுபவர்கள் பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் விமான நிலையத்தில் தரையிறக்கப்படுவதால், அம்மாநில முதல்வர் பகவந்த் மானும் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
அதேபோல் சிரோமணி குருத்வாரா பர்பந்தக் குழுவும், நாடு கடத்தப்படும் இந்தியர்கள் மீதான நடத்தைக்கு கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளது. மேலும் சீக்கியர்களின் தலைப்பாகை அணிய அனுமதிக்கவில்லை என்றும் குற்றம் சாட்டியது. முதற்கட்டமாக கடந்த 5ம் தேதி 104 சட்டவிரோத இந்திய குடியேறிகளை ஏற்றிக்கொண்டு அமெரிக்க ராணுவ விமானம் அமிர்தசரஸ் விமான நிலையம் வந்தடைந்தது. இவர்களில் தலா 33 பேர் அரியானா மற்றும் குஜராத்தைச் சேர்ந்தவர்கள்; 30 பேர் பஞ்சாபைச் சேர்ந்தவர்கள்; மீதமுள்ளவர்கள் மற்ற மாநிலங்களை சேர்ந்தவர்கள் ஆவர். கடந்த சனிக்கிழமை அமெரிக்காவிலிருந்து நாடுகடத்தப்பட்ட 116 இந்தியர்களை ஏற்றிக் கொண்டு அமெரிக்க ராணுவ விமானம் அமிர்தசரஸ் விமான நிலையத்தை வந்தடைந்தது. அவர்களில் ஆண்கள் மட்டும் விலங்குகளால் கட்டப்பட்டிருந்தனர்.
இதையும் படிங்க: அமெரிக்காவில் திடுட்டுத்தனமாக குடியேறினால் சரி... பஞ்சாபில் விமானம் வந்திறங்கினால் தவறா..? பஞ்சாப் முதல்வருக்கு பாஜக பதிலடி..!
அன்றைய தினம் இந்தியா திரும்பிய 116 பேரில் 65 பேர் பஞ்சாபை சேர்ந்தவர்கள்; 33 பேர் அரியானாவை சேர்ந்தவர்கள்; எட்டு பேர் குஜராத்தை சேர்ந்தவர்கள்; உத்தரபிரதேசம், கோவா, மகாராஷ்டிரா மற்றும் ராஜஸ்தானை சேர்ந்த தலா இரண்டு பேர் மற்றும் இமாச்சலப் பிரதேசம் மற்றும் ஜம்மு-காஷ்மீரிலிருந்து தலா ஒருவர் வந்து சேர்ந்தனர். தொடர்ந்து மூன்றாவது கட்டமாக அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்பட்ட 112 இந்தியர்களை ஏற்றி வந்த அமெரிக்க இராணுவ விமானம் நேற்றிரவு அமிர்தசரஸில் தரையிறங்கியுள்ளது. இந்த விமானத்தில் வந்திறங்கிய 112 பேரில் 31 பேர் பஞ்சாபையும், 44 பேர் அரியானாவையும், 33 பேர் குஜராத்தையும், இரண்டு பேர் உத்தரபிரதேசத்தையும், தலா ஒருவர் இமாச்சலப் பிரதேசம் மற்றும் உத்தரகண்டையும் சேர்ந்தவர்கள் ஆவர். இவர்களில் ஆண்களுக்கு மட்டுமே கைவிலங்குகள் போடப்பட்டதாகவும், பெண்கள், குழந்தைகளுக்கு விலங்குகள் ஏதும் போடப்படவில்லை என்று அதிகாரிகள் கூறினர்.
இதுவரை 3 கட்டங்களிலும் சேர்த்து 332 பேர் இந்தியா திரும்பிய நிலையில், அவர்களில் இருவரை பஞ்சாப் போலீசார் கைது ெசய்து விசாரித்து வருகின்றனர். பாட்டியாலா மாவட்டம் ராஜ்புராவைச் சேர்ந்த சந்தீப் சிங், பிரதீப் சிங் ஆகிய இரு இளைஞர்கள் மீதும் கொலை வழக்கு இருப்பதாக ராஜ்புரா போலீஸ் அதிகாரிகள் கூறினர்.
இதையும் படிங்க: அதிமுகவில் ஒற்றைத் தலைமை வந்து என்னாச்சு..? பாயிண்டைப் பிடித்த ஓ. பன்னீர்செல்வம்.!