ஸ்ரீதேவியின் 2-வது மகள் குஷிகபூருக்கும், இயக்குநர் ப்ரதீப் ரங்கநாதனுக்கும் என்ன சம்பந்தம்?...
அமீர்கானின் மகன் ஜுனைத் கான், ஸ்ரீதேவியின் 2-வது மகள் குஷி கபூர் ஆகியோர் இணைந்து நடித்துள்ள லவ்யேபா திரைப்படம் வருகிற பிப்ரவரி மாதம் 7-ந் தேதி வெளியாக உள்ளது
தமிழில் சக்கைப்போடு போட்ட ப்ரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்திருந்த லவ் டுடே படத்தின் இந்தி ரீமேக் தான் இந்த லவ்யேபா.
இந்தி படவுலகை ஆளும் மூன்று கான்களில் ஒருவர் அமீர்கான். தமிழுக்கு கமலஹாசன் எப்படியோ அப்படிதான் இந்திக்கு அமீர்கான். பரீட்சார்த்த படங்களை தேர்ந்தெடுத்து இயக்கியும், நடித்தும் தனக்கென ஒரு ரசிகர் வட்டத்தை உருவாக்கி வைத்திருப்பவர். அவரது மகன் ஜுனைத் தான், தந்தை வழியில் பாலிவுட்டில் களமிறங்கி உள்ளார். ஏற்கனவே மகாராஜ் என்ற படத்தில் முக்கிய வேடம் ஒன்றில் ஜுனைத் கான் கடந்த ஆண்டு அறிமுகமாகி இருந்தார். ஆனாலும் முழுநீள கமர்ஷியல் படமாக அவர் அறிமுகமாக வேண்டிய கட்டாயம் இருந்தது.
இதையும் படிங்க: "லிவ் - இன்" உறவுக்கு அங்கீகாரம் இல்லாவிட்டாலும், சில வழிமுறைகள் அவசியம்" : அலகாபாத் உயர்நீதிமன்றம் கருத்து
அதேபோன்று இந்தி படவுலகின் முடிசூடா மகாராணியாக திகழ்ந்தவர் மறைந்த ஸ்ரீதேவி. அவரது மூத்தமகள் ஜான்வி கபூர், கடந்த சில ஆண்டுகளாக இந்தியில் பல்வேறு படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் தெலுங்கில் கூட ஜுனியர் என்டிஆர்-க்கு ஜோடியாக தேவரா படத்தில் நடித்திருந்தார். ஸ்ரீதேவியின் இரண்டாவது மகளும், ஜான்வியின் தங்கையுமான குஷி கபூர் சரியான படவாய்ப்புக்காக காத்திருந்தார்.
இப்படிப்பட்ட வாரிசுகள் இரண்டுபேரும் ஒன்றாக இணைந்துள்ள படம் தான் லவ்யேபா. தமிழில் ப்ரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்து சூப்பர் டூப்பர் ஹிட் ஆன படம் லவ் டுடே. இதனை இந்திக்கு தக்கவாறு மாற்றி லவ்யேபா என்ற பெயரில் அதே கல்பாத்தி பிலிம்ஸ் எடுத்துள்ளது. அத்வைத் சந்தன் என்பவர் இந்தியில் இப்படத்தை இயக்கி உள்ளார். வருகிற பிப்ரவரி மாதம் 7-ந் தேதி இத்திரைப்படம் வெளியாக உள்ளது.
இரண்டு வாரங்களுக்கு முன்னர் யூ டியூபில் வெளியான இத்திரைப்படத்தின் ட்ரெய்லர் இந்தி ரசிகர்களை குஷியில் ஆழ்த்தி உள்ளது. தமிழில் எப்படி மாமாகுட்டி என்ற வார்த்தையும், லாங் ட்ரைவ் போலாமா என்ற வசனமும் பிரபலம் ஆனதோ அதேபோன்று இந்தியில் குட்டி குட்டி வார்த்தைகள் இன்ஸ்டாகிராமில் ட்ரெண்ட்டிங்கில் உள்ளன.
சமீபத்தில் இதன் ப்ரிவீயூ பார்த்த அமீர்கான், தனது மகன் ஜுனைத் கானுக்கு காலத்திற்கு தக்க படம் கிடைத்துவிட்டதாக உணர்ச்சிப் பெருக்குடன் கூறியுள்ளார். ஒருபுறம் நெபோடிசம் எனும் வாரிசுகளால் இந்தி படவுலகம் சிக்கித் தவிப்பதாக பேசப்பட்டாலும், நடிகர் - நடிகைகளின் வாரிசுகள் வருகை இந்தியில் குறையவில்லை என்பதற்கு லவ்யேபா மற்றொரு உதாரணம்.
இதையும் படிங்க: காதலிக்க மறுத்த கல்லூரி மாணவி ..ரயில் தள்ளிக்கொன்ற கொடூரனுக்கு மரண தண்டனை..நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு