சென்னை திருமங்கலத்தில் உள்ள வணிக வளாகத்தில், வாகனங்கள் நிறுத்த, பார்க்கிங் கட்டணம் வசூலிக்க கூடாது என சென்னை மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை திருமங்கலத்தில் உள்ள வணிக வளாகத்தில் வாகனங்கள் நிறுத்த முதல் ஒரு மணி நேரத்துக்கு 50 ரூபாயும், அடுத்தடுத்த ஒவ்வொரு மணி நேரங்களுக்கும் தலா 30 ரூபாயும் கட்டணம் வசூலிக்கப்படுவதை எதிர்த்து, சென்னை கொசபேட்டையைச் சேர்ந்தவர் அருண்குமார் என்பவர், சென்னை வடக்கு மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் புகார் மனு தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில், தமிழ்நாடு ஒருங்கிணைந்த கட்டிட விதிகள்படி வணிக வளாகங்களில் போதுமான வாகன நிறுத்துமிட வசதி செய்து தர வேண்டியது அவசியம் எனவும், இதற்காக தனியாக கட்டணம் வசூலிக்க முடியாது எனவும், தன்னிடம் பார்க்கிங் கட்டணம் வசூலித்தது நியாயமற்ற வர்த்தகம் என்பதால், ஒரு லட்சம் ரூபாய் இழப்பீடும், வழக்கு செலவாக 50 ஆயிரம் ரூபாய் வழங்கவும் வணிக வளாகத்துக்கு உத்தரவிட வேண்டும் என கோரப்பட்டது.
இதையும் படிங்க: இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயில் எந்த ரூட்டில் செல்லப்போகிறது தெரியுமா?
இந்த மனுவை விசாரித்த ஆணையம், தமிழ்நாடு ஒருங்கிணைந்த கட்டிட விதிகளில், வணிக வளாகங்களில் வாகனங்களுக்கு பார்க்கிங் கட்டணம் வசூலிக்க கூடாது எனக் கூறப்படவில்லை என வணிக வளாகம் தரப்பில் முன் வைத்த வாதத்தை நிராகரித்தது.

பார்க்கிங் கட்டணம் வசூலிக்கலாம் என்பது தொடர்பான விதிகள் எதையும் வணிக வளாக நிர்வாகம் தாக்கல் செய்யாததைச் சுட்டிக்காட்டிய ஆணையம், திருமங்கலத்தில் உள்ள வணிக வளாகம், வாடிக்கையாளர்களிடம் இருந்து வாகனங்களை நிறுத்துவதற்காக கட்டணம் எதுவும் வசூலிக்கக்கூடாது; பார்க்கிங் கட்டணம் வசூலிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும் என உத்தரவிட்டது.

மேலும், மனுதாரருக்கு 10 ஆயிரம் ரூபாய் இழப்பீடும், வழக்கு செலவாக 2 ஆயிரம் ரூபாயும் வழங்க, வணிக வளாகத்துக்கு உத்தரவிட்ட ஆணையம், வணிக வளாகங்களில் கழிப்பறை, எஸ்கலேட்டர், லிப்ட் போன்றவை அடிப்படை வசதிகள் வரிசையில், வாகன நிறுத்துமிடமும் அடிப்படை வசதிகள் என்ற பட்டியலில் வருமா?சட்டப்பூர்வமாக ஒழுங்குபடுத்தப்பட்டால் மட்டுமே வாகன கட்டணம் வசூலிக்க முடியுமா? என்ற கேள்விகளுக்கு விடை காண நுகர்வோர் குறை தீர் ஆணையத்துக்கு அதிகாரம் இல்லை எனவும் தெளிவுபடுத்தியுள்ளது.
இதையும் படிங்க: மனைவியிடம் அத்துமீறல்.. RCB வெற்றியை கொண்டாட அழைத்துச் சென்று கதையை தீர்த்து கட்டிய நண்பர்கள்..